ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 23 : மது விலக்குப் பரப்புரை
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 22 :நாடகக் கலை … சிறுதொண்டுகள் (2) தொடர்ச்சி)
என் சுயசரிதை
17. மது விலக்குப் பிரசாரம் செய்தது
எனது நாடக மேடை நினைவுகள் என்னும் புத்தகத்தில் 1895-ஆம் வருடம் நான் பெங்களுருக்குப் போயிருந்தபோது ஒருமுறை அரை அவுன்சு பிராந்தி சாப்பிட்டு அதனால் பெருந்துன்பம் அநுபவித்த விசயத்தை எழுதியிருக்கிறேன். பட்ட ணம் திரும்பி வந்தவுடன் மதுவிலக்குச் சங்கம் ஒன்றைச் சேர வேண்டுமென்று தீர்மானித்தேன். ஆயினும் நானாகக் காசு சம்பாதித்தாலொழிய எந்தச் சங்கத்தையும் சேரக்கூடாதெனத் தீர்மானித்தவனாய் 1898-ஆம் வருடம் நான் வக்கீலாகி பணம் சம்பாதித்த பிறகுதான் சென்னையில் தாபிக்கப்பட்ட H.G.T.L. என்னும் மது விலக்கு சங்கத்தில் ஓர் அங்கத்தினனாகச் சேர்ந்தேன். இச்சங்கத்தின் இரண்டு முக்கிய கோட்பாடுகள் ஒன்று ஆயுள் பரியந்தம் எந்தவிதமான மதுவையும் தீண்டலாகாதென்பது. இரண்டு அங்கத்தினர் எல்லாம் சகோதரர் மனப்பான்மையோடு வாழவேண்டும் என்பவையாம். அதுமுதல் இந்த 64 வருடங்களாக அச்சங்கத்திற்கு முக்கியமாக புதன்கிழமைகளில்போய் உழைத்து வருகிறேன். இச்சங்கத்தின் சார்பாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள ஏதாவது ஓர் ஊருக்குப்போய் மதுபானம் செய்வதினால் உண்டான தீமையைப்பற்றி பிரசாரம் செய்து வருகிறோம். சில வருடங்களுக்கு முன் ஆங்கில அரசாங்கத்தார் சென்னை இராசதானி முழுவதும் மதுவிலக்குப் பிரசாரம் செய்யவேண்டுமென்று ஒரு குழுவை ஏற்படுத்தியபோது என்னை அக்குழுத் தலைவனாக ஏற்படுத்தினார்கள். இதன் மூலமாக பழைய சென்னை இராசதானியில் பல சில்லாக்களுக்குப்போய் நான் மதுவிலக்கு பிரசாரத்தின் வேலை சரியாக நடக்கிறதா என்று பார்த்து வந்தேன்.
18. S. I. A. A.
சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேசன் என்னும் அச்சபையானது சென்னையில் கிரிக்கெட்டு (Cricket), டென்னிசு (Tennis) கால் பந்து (Foot ball) முதலிய விளையாட்டுகளை அபிவிருத்தி செய்வதற்காகவும் வருடந்தோறும் திசம்பர் மாதம் பீபில்ஸ் பார்க்கு (People’s Park) வேடிக்கை விநோதங்களை நடத்தவும் இரேக்குளா முதலிய பந்தயங்களை நடத்தவும் 1903-ஆம் வருடம் சென்னை வாசிகள் சிலரால் எற்படுத்தப்பட்டது. அதில் நான் ஒருவனாய் இருந்தேன். அதுமுதல் பல வருடங்கள் குழு அங்கத்தினனாகவும் சில வருடங்கள் உபதலைவனாகவும் இருந்து அதன் காரியங்களைப் பார்த்துவந்தேன். தேகப் பயிற்சிக்கும் வியாயாமத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட இச்சபையின் தொடர்பை விடலாகாதென்றும், இப்போது என் முதிர் வயதிலும் அங்கத்தினனாக இருக்கிறேன்.
- கல்வித் துறைக்காக உழைத்தது
சென்னை பல்கலை கழகத்தில் (University) நான் தமிழ் மொழியின் சார்பாக ஒரு செனெட் அங்கத்தினனாக பிரிட்டிசு இராசாங்கத்தாரால் நியமிக்கப்பட்டுச் சில வருடங்கள் உழைத்து வந்தேன். அன்றியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் ஓர் அங்கத்தினனாக காலஞ்சென்ற இராசா சர். அண்ணாமலை செட்டியாரால் நியமிக்கப்பட்டுச் சில வருடங்கள் அதன் வேலையில் கலந்து கொண்டேன். அண்ணாமலை நகரில் பன்முறை நாடகங்களைப்பற்றி சொற்பொழிவு செய்தேன்.
மேலும் ‘சென்னை இசுகூல் புக் லிட்ரெச்சர் சொசைட்டி’ என்னும் சங்கத்தில் ஒரு குழு அங்கத்தினாகப் பல் வருடங்களாகத் தமிழ் அபிவிருத்திக்காக உழைத்து வருகிறேன். இச் சபையானது நான் பிறப்பதற்கு முன்பாக என் தகப்பனார் முதலிய பல சென்னை வாசிகளால் ஏற்படுத்தப்பட்டதாம்.
- சென்னபுரி அன்னதான சமாசத்தில் பங்கெடுத்துக் கொண்டது
இந்த தரரும சமாசத்தில் பல வருடங்களாகக் குழு அங்கத்தினனாக உழைத்துவந்தேன். இந்த சமாசத்துக்கு உரூபாய் 1000 கொடுத்து என் தகப்பனார் தாயார் திதிகளில் ஏழைகளுக்கு உணவு கொடுக்கும்படியாக ஏற்பாடு செய்தேன்.
(தொடரும்)
பம்மல் சம்பந்தம்
என் சுயசரிதை
Leave a Reply