உழப்பின் வாரா உறுதிகள் உளவோ? – பட்டினத்தடிகள்
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையற வுளவோ அதனால்
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து
அன்பென் பாத்தி கோலி முன்புற ……(5)
மெய்யெனும் எருவை விரித்தாங் கையமில்
பத்தித் தனிவித் திட்டு நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று
தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும்
பட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று …..(10)
சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
கருணை இளந்தளிர் காட்ட அருகாக்
காமக் குரோதக் களையறக் களைந்து
சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி ….(15)
மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்ந்திட் டம்மெனக்
கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து புண்ணிய
அஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி
காள கண்டமும் கண்ணொரு மூன்றும்
தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும் ……(20)
பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி
அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க்
காணினும் கேட்பினும் கருதினுங் களிதரும்
சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பையப் பழுத்துக் கைவர ….(25)
எம்ம னோர்கள் இனிதின் அருந்திச்
செம்மாந் திருப்பச் சிலர்இதின் வாராது
மனமெனும் புனத்தை வறும்பா ழாக்கிக்
காமக் காடு மூடித் தீமைசெய்
ஐம்புல வேடர் ஆறலைத் தொழுக …..(30)
இன்பப் பேய்த்தேர் எட்டா தோடக்
கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர
இச்சைவித் துகுத்துழி யானெனப் பெயரிய
நச்சு மாமரம் நனிமிக முளைத்துப்
பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும் …(35)
பாவப் பல்தழை பரப்பிப் பூவெனக்
கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து
துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு
மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து
தமக்கும் பிறர்க்கும் உதவாது (40)
இமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே.
– பட்டினத்தடிகள் (பட்டினத்தார்)
திருக்கழுமல மும்மணிக் கோவை
Leave a Reply