‘ திருத்தமிழ்ப்பாவை’ – பாசுரங்கள் 1 & 2 : வேணு குணசேகரன்
(திருத்தமிழ்ப்பாவை : இறைவணக்கமும் தமிழ் வணக்கமும் தொடர்ச்சி)
‘ திருத்தமிழ்ப்பாவை’ – பாசுரங்கள் 1 & 2 :
முதல் பாசுரம்
அச்செல்வி பற்றி அணிந்துரையான் செய்வேன் காண்!
உச்சித் தலைமுதலாய் உள்ளங்கால் மட்டுமெழில்
மெச்சி வியக்குமொரு மாண்புடைய மூதாட்டி;
இச்சையுற வைக்கும் இளங்கன்னி; விண்ணுலகத்
தச்சன்மயன் செய்த சிலையாள்; விழிமயங்கும்
பச்சைவயல்; செங்கரும்புப் பால்சுவையாள்; சொல்லினியாள்!
நச்சினார் ஏத்தும் ‘திருத்தமிழ்ப் பாவை’யினை
மெச்சிப் புகழ்பாடக் கண்திறவாய், எம்பாவாய்!
இரண்டாம் பாசுரம்
அண்டம்சூழ் அன்னைத்தமிழ்
உலகுவப்ப, ஓர்நிரைச்சொல் ஒண்டமிழ்ப்பேர் பூண்டு,
நிலவுவெளி அண்டம் நிரப்ப,ஊற் றாகிப்
பலசொல் விரிவிரியப், பாங்குடனே தொன்மை
வலிமையொடு மூப்பின்றி வாழும் இளையாள்;
இலக்கியமாய் வேர்கொண் டிலக்கணமோ டோங்கும்
தலைமை மணிமுடிபூண் தண்டமிழாம் தாயாள்;
குலவிளக்குத் தாள்பணியக் கூம்புவிழி பூத்து,
மலர்மேனி யாடி மலர்கொணர்வாய்,எம்பாவாய்!
– கவிஞர் வேணு குணசேகரன்
Leave a Reply