பாசமில்லா உலகிது!

(சீர்திருத்தப்பள்ளிகளில் உள்ளவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் என ஒட்டு மொத்தமாகக் கூற இயலாது. வீட்டைவிட்டு வெளியேறி அல்லது வழிதவறி வந்தவர்களும் இங்கே உள்ளனர்.  ஏழ்மையின் காரணமாகவும் குறும்புப் பிள்ளைகளை வளர்க்கத் தெரியாமலும்  பெற்றோரால்  சேர்க்கப்படுபவர்களும் உள்ளனர். சேர்த்து வைத்த ஊதியத்தைத் திருப்பித்தராமல் ஏமாற்றும் முதலாளிகளை எதிர்ப்பதால் குற்றவாளிகளாகக் காட்டப்பட்டு அடைக்கப்படுபவர்களும் உள்ளனர். தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையுமே இழந்து சிதைவுற்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறாரும் இங்கே சேர்க்கப்படுகின்றனர்.

 பெண்கள் சீர்திருத்தப்பள்ளி மாணாக்கியர்  பாடுவதற்காக 1980 இல் ‘வாசமில்லா மலரிது’ மெட்டில் எழுதிய பாடல்)

 

பாசமில்லா உலகிது

பணத்தைத்தான் நாடுது

பண்புமில்லா உலகிது

அழிவைத்தான் தேடுது

ஏதேதா ஆசை எந்நாளும் காணும்

நிலையில்லா உலகில் பிழை செய்தே வாழும்

[- பாசமில்லா உலகிது

வீட்டுக் கொரு மைந்தன்

நாட்டைக் காக்க எண்ணில்

எமக்கேன் கவலை

நிலமகள் மீதே

ஈண்டுதரும் பயிற்சி

உயர வைக்கும் முயற்சி

இருப்பினும் ஆசை விடுதலை மேலே

[- பாசமில்லா உலகிது

என்ன குற்றம் செய்தோம்

இங்குவந்து சேர்ந்தோம்

எமக்கோ கவலை

எதிர்காலம் மீதே

மக்கள் செய்யும் தவறு

உணரவில்லை அவர்கள்

எமக்கோ தண்டனை அதனால்தானே

[- பாசமில்லா உலகிது

பிறந்தது தவறா

வளர்ந்தது தவறா – உயிர்

இருப்பதுதான் தவறா?

காலங்கள் செல்ல

நல்ல நிலை வரலாம்

காத்திரு அதுவரை நீயே!

[- பாசமில்லா உலகிது

இலக்குவனார் திருவள்ளுவன்