–     இன எழுச்சிக் கவிஞர் கவிஞர் இராமச்சந்திரன்

விளைந்தபயிர் வளைந்தபடி குனிந்த வாறே

       வீடெல்லாம் துடைப்பத்தால் பெருக்கி நின்றாள்!

கலைந்தபடி கிடந்திருந்த குப்பை கூட்டி

        காலடியில் அவள்குவித்தாள்! கட்டில் மீது

அமர்ந்தபடி பார்த்திருந்தான் விலகும் ஆடை

 அலைபரப்பும் வெளிச்சத்தில் தனைம றந்தான்!

நிமிர்ந்தபடி அவள்நின்றாள்! “எதனைக் கண்டீர்

 நீந்துகின்றீர் இன்பத்தில்” என்றாள் மங்கை

“ஆடாத கோபுரத்தின்  கலசந் துள்ளி

ஆடுவதை நான்கண்டேன்! எந்த நாளும்

வாடாத தாமரையாய் முகத்தைக் கண்டேன்!

       வளைந்தஇடை  நெளிவதிலே  மின்னல் கண்டேன்!

தேடாமல் கைக்குவந்த புதையல் போன்று

       தேகமெலாம் வெளிச்சமிடக் கண்டேன்! நானும்

பாடாமல் இருந்தேனே உன்னை! இன்று

       பாடல்வ ரிநூறுகண்ணில் வரைந்தேன்!” என்றான்.

“எத்தனையோ முறைஎன்னைத் தொட்டுத் தொட்டு

இன்பத்தில் குளித்தவரே! உமக்கு என்ன

பித்தேறி விட்டதுவோ? இன்று என்னைப்

 பிழிகின்றீர் பார்வையிலே ஏன்தான்?” என்றாள்

“சத்தமின்றி  சுவைத்திருந்த அழகை இன்று

 சரித்திரமாய்ப் பதியமிட்டேன் எந்தன் நெஞ்சில்!

சொத்துசுகம் வேறெதற்கு? நீஎனக்குச்

       சொந்தமானாய் அதுபோதும்!” என்றான் முத்தன்

“தமிழ்பேசும் நாக்கெல்லாம் நமக்குச் சொந்தம்

       தமிழினம்தான் நம்சொந்தம் உலகில் வாழும்

அமிழ்தினிய தமிழ்க்குடும்பம் நம்கு டும்பம்

       அவர்வாழ்வின் ஏற்றமெலாம் நம்மு ன்னேற்றம்

குமிழ்ஊற்றாய் எழும்புகின்ற இனவு ணர்வு

       கொண்டிருப்போர் நம்சொந்தம் இதைம றந்து

அமிழ்கின்றாய் காமத்தில் அடடா! சீச்சீ !!

       அருந்தமிழ்த்தாய் உன்னையுமா ஈன்றாள்?” என்றாள்.

(தொடரும்)

+++