(இராவண காவியம்: 1.7.11 -1.7.15 தொடர்ச்சி)

இராவண காவியம்

 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம்
 1. கழகமோ டமர்ந்து தென்னர் கனிதமி ழாய்ந்தாய்ந் தன்னார்
  வழிவழி புகழின் வாழ வறிதுபார்த் திருத்தல் நம்மோர்க்
  கழகல வெனவே பாழு மலைகடல் கழகத் தாங்குப்
  பழகவே யேற்ற காலம் பாத்துமே யிருந்த தம்மா.
 2. நல்லவ ருறவை நாடி நணித்துவந் தணித்தா யன்னார் இல்லிடத் திருந்த ளாவி யின்புறு மறிஞர் போலச் சொல்லிடத் தினிய வின்பந் தோய்தமி ழுறவை நாடிப் புல்லியே யளவ ளாவப் பொருகடல் நினைத்த தம்மா.
 3. எண்டிசை யவாவு மின்பத் தியைந்துகட் டழகி னோடு பண்டணி யாடை தாங்கும் பசுந்தமிழ்த் தாயை நேரிற் கண்டவர் பொல்லாக் கொள்ளிக் கண்படு மென்றி ரங்கித் தெண்டிரைக் கடலும் பாவம் திரைப்படாம் போர்த்த போலும்.
 4. தண்ணுமை தாளத் தோடுந் தழங்கியாழ்த் திறத்தி னோடும் நண்ணிய வராகத் தோடும் நல்லிசைத் தமிழர் பாடும் பண்ணமை தமிழின் றூய பாட்டினைக் கேட்டுக் கேட்டுக் கண்ணிய கடலு முள்ளக் களிப்பினாற் பொங்கிற் றம்மா.

ஷெ வேறு வண்ணம்

20. ஒன்றுதிரு வள்ளுவராண் டொருபத்தோ டிருபத்தின்
ஒன்றின் முன்னே
சென்றிடுமூ வாயிரத்தத் தீயாழி தென்பாலாஞ்
செழிய நாட்டின்
ஒன்றுபெரும் பகுதியையு மிந்திரத்தோர் பகுதியையு
முணவ தாக
மென்றுசுவைத் துண்ணாமல் தமிழ்த்தாய்கண் ணீர்வடிக்க
விழுங்கிற் றந்தோ.

(தொடரும்)
இராவண காவியம் – புலவர் குழந்தை

குறிப்பு:

 1. ஒருபத்தோடு இருபத்தின் ஒன்று – முப்பத்தொன்று. வள்ளுவராண்டுத்
  தொடக்கம் கி.மு. 31.