(அகல் விளக்கு – மு.வரதராசனார். 61. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 24 தொடர்ச்சி

“அந்த அம்மா விட்டுக்கொடுத்து நயமாகப் பழகத் தெரியாத பேர்வழிபோல் இருக்கிறது” என்றார் பக்கத்தில் இருந்தவர்.

“ஆமாம் ஆமாம். எதற்கு எடுத்தாலும் சட்டம் பேசுகிற மனைவியாம். அதனால் ஒத்துப்போக முடியவில்லையாம். வாழ்க்கை ஏறுமாறாகப் போயிற்று. இவருக்குத் தெரியாதிருக்குமா? நாம் சொல்ல வேண்டுமா?” என்று சிகரெட்டு பெட்டியை எடுத்து என்னிடத்தில் நீட்டினார். நான் அன்போடு மறுக்கவே பக்கத்திலிருந்தவரிடம் நீட்டினார், இருவரும் புகைத்தார்கள்.

நான் பேசாமலே இருப்பது நன்றாக இருக்காது என்று எண்ணி, “ஆனாலும் கடன்பட்டு இந்த ஆலை தொடங்கியிருக்கக் கூடாது” என்றேன்.

“தொடங்கின பிறகு அக்கறையாகக் கவனிக்கவேண்டும். இது என்ன ஆபீசு வேலையா? ஐந்து மணி நேரம் வேலை செய்துவிட்டு பிறகு துண்டை உதறித் தோள் மேல் போட்டுக் கொண்டு போகக்கூடிய வேலையா இது? அங்கே வேலைக்கு ஒரு நேரம், பொழுதுபோக்குக்கு ஓர் இடம், சாப்பாட்டுக்கு ஓர் இடம் ஒரு நேரம் என்று எல்லாம் ஒழுங்காக இருக்கும். இங்கே வியாபாரத்தில் இந்தத் தொழிலில் நடக்குமா? காலையில் எழுந்து பல்லைத் துலக்கிக் கொண்டு வந்து விட்டால், தொழில் பொழுது போக்கு சாப்பாடு வேடிக்கை வம்பு தூக்கம் எல்லாம் இங்கேயே வைத்துக் கொண்டு பன்னிரண்டு மணி நேரமோ இருபது மணி நேரமோ இருந்தே ஆகவேண்டும்.

அப்படி இருந்தால் வேலையாட்களை வேலை வாங்க முடியும். சில நாட்களில் நெருக்கடியாக இருக்கும்போது மனைவி மக்கள் நினைவும் எங்களுக்கு வருவதில்லை. உங்கள் நண்பர் ஒரு நாளாவது அப்படி ஆலையில் உட்கார்ந்து வேலை செய்திருப்பாரா? கேட்டுப் பாருங்கள். ஒரு தொழிலில் இறங்கினோமா, ஒரே உறுதியாக இறங்கிவிட வேண்டும். அப்புறம் வேறு எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. வேறு எதிலும் ஈடுபடக்கூடாது” என்றார்.

“நீங்கள் சொல்லக்கூடாதா?”

“இந்தக் கல்வி எல்லாம் சொல்லி வரக்கூடாது. சொல்லாமலே பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். எங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?” என்றார்.

“அப்படியும் சொன்னோம். பயன் இல்லை” என்றார் பக்கத்தில் இருந்தவர்.

அப்படியே சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்து அவர்களோடு தேநீர் அருந்திவிட்டு விடைபெற்றேன்.

வள்ளிமலைப் பக்கமாகப் போகும் வண்டி பற்றிக் கேட்டு நடந்தேன். வண்டி ஏறி உட்கார்ந்தவுடனே மாலனுடைய நண்பர்கள் சொன்னவற்றை எல்லாம் எண்ணி எண்ணி அவனுக்காக வருந்தினேன். கற்பகத்தைப் பற்றி அவர்கள் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. சாமண்ணாவைப் பணத்தில் அழுத்தக்காரர் என்று சொன்னதுபோல், அதுவும் பொய்யோ; எல்லாம் மாலன் வேண்டுமென்றே அவர்களிடம் சொல்லி வைத்த பொய்கள் என்று உணர்ந்தேன்.

வள்ளிமலையில் இறங்கித் தங்கையின் கணவருடைய பேரைச் சொல்லி, ஆசிரியர் வீடு எங்கே என்று கேட்டுச் சென்றேன். வீட்டின் வாயிலில் நின்றதும் தங்கை ஏதோ புத்தகம் படிப்பது கேட்டது. மைத்துனர் பாயில் படுத்தவாறே கேட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். என்ன புத்தகம் என்று அறிவதற்காக அமைதியாக நின்றேன். சாரதாமணி அம்மையார் என்று பெயர் கேட்டதால் அவருடைய வரலாறாக இருக்கலாம் என்றும் எண்ணினேன். அதற்குள் யாரோ ஒரு பையன் என் பக்கத்தில் வந்து நின்று, “ஐயா! யாரோ ஒருத்தர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்” என்று சொன்னான். அவனுடன் வேறுயாராவது வந்திருக்கிறாரா என்று திரும்பிப் பார்த்தேன். ஒருவரும் இல்லை, என்னைத்தான் சொல்கிறான் என்று உணர்ந்தேன்.

மைத்துனரும் தங்கையும் எழுந்து வந்து அன்போடு வரவேற்றார்கள். ஊரில் அம்மா அப்பா பொய்யாமொழி எல்லாரைப் பற்றியும் கேட்டார்கள், பாக்கியத்தைப் பற்றியும் கேட்டார்கள், என் மனைவியைப் பற்றியும் குழந்தை மாதவியைப் பற்றியும் கேட்டார்கள்.

அந்தப் பையன் வந்து, ஐயா என்று விளித்தது என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. “யார் அந்தப் பையன்?”

“எங்கள் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பில் படிக்கிற மாணவன்” என்றார் மைத்துனர்.

சார் என்று அழைக்காமல் ஐயா! என்று விளிக்கிறானே” என்றேன்.

சார், சார் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்த ஊருக்கு வட நாட்டார் ஒருவர் வந்தார். சார், சார் என்று மாணவர்கள் சொன்னது அவருக்கு வெறுப்பாக இருந்தது. ‘உங்கள் நாட்டில் சிதம்பரம் பிள்ளை, பாரதியார், போன்ற பெரிய பெரிய தேசபக்தர்கள் பிறந்திருக்கிறார்கள். ஆனாலும், அந்நியமோகம் இப்படி இருக்கிறதே. உங்களுக்குள் ஒருவரை ஒருவர் சார் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறீர்களே. நம்முடைய தாயாரை டியர் மதர் என்று அழைத்தால் நன்றாக இருக்குமா? நாங்கள் எங்களை மறந்திருக்கும்போதும் சார் என்று சொல்லமாட்டோம். எங்கள் தாய்மொழியில் ‘ஜீ‘ என்றுதான் சொல்வோம்.

வேண்டுமானால் எங்கள் நாட்டுக்கு வந்து பாருங்கள் பள்ளிக்கூடம், கடைத்தெரு, ஆபீசு, விளையாடும் இடம், உணவுக்கடை எங்கே வேண்டுமானாலும் வந்து பாருங்கள். எங்கள் நாட்டார் ஜீ ஜீ என்று தான் ஒருவரை ஒருவர் அழைப்பார்கள். இங்கே கிராமங்களில் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளையே இப்படி கெடுக்கிறீர்களே’ என்று மிக மிக வருத்தப்பட்டார். அவருடைய உருக்கமான பேச்சைக் கேட்ட பிறகுதான், நாம் செய்யும் தவறு எனக்குப் புலப்பட்டது. அன்று முதல் மாணவர்களுக்குச் சொல்லி மாற்றிவிட்டோம்” என்றார் மைத்துனர்.

பிறகு தங்கையின் எளிய குடும்ப வாழ்க்கையைக் கண்டேன். ஒரு கட்டிலும் இல்லை. மெத்தையும் இல்லை. தங்கையின் உடம்பு முன்னைவிட மெலிந்திருந்ததையும் கண்டேன். உண்ண உட்கார்ந்த போது உணவின் எளிமையும் கண்டேன். தாய்வீட்டில் இது நன்றாக இல்லை, அது நன்றாக இல்லை என்று உணவில் குறைசொல்லிக் கொண்டிருந்தவள் இங்கே மிளகு நீரும் சோறும் இருந்தால் போதும் என்று வாழ்கின்றாளே என வருந்தினேன். குடும்பம் நடத்தும் முறை பற்றிச் சில கேட்டேன்.

வாரத்திற்கு இரண்டு நாள் மட்டுமே இட்டளியும் தோசையும் செய்வதாகவும் மற்ற நாட்களில் சிற்றுண்டியோ காப்பியோ இல்லை என்றும் அறிந்தேன். வரும் சம்பளத்திலேயே பத்து ரூபாய் மைத்துனருடைய பெற்றோர்க்கு அனுப்பப் படுவதாகவும் அறிந்தேன். விருந்தினர் வருகையாலோ நோய் காரணமாகவோ செலவு மிகுதியாகிவிட்டால், அதற்கு ஈடு செய்யும் வகையில் நெய் முதலிய சில பொருள்களை வாங்குவதில்லை என்றும், எதற்கும் வேலையாட்களே இல்லாமல் எல்லாக் கடமைகளையும் தானே செய்து வருகிறாள் என்றும், அடுத்த ஆண்டில் ஒரு தையல் பொறி வாங்கிக் கணவருடைய சொக்காய்களையும் தானே தைக்கக் கற்றுக்கொள்ள எண்ணம் உண்டு என்றும் அறிந்தேன்.

உடனே நான் அந்தத் தையல் பொறியின் விலையைத் தருவதாகச் சொல்லி மகிழ்வித்தேன். “வேண்டாம் அண்ணா! நகரத்தில் வாழ்க்கை நடத்தும் உங்களுக்கு எவ்வளவோ செலவுகள் ஏற்படும். இந்தத் துன்பம் வேண்டா” என்றாள். அதனால் ஒரு துன்பமும் இல்லை என்று சொல்லிவிட்டு வந்தேன். “இப்போது ஊருக்கு வரவில்லை. அடுத்த விடுமுறையின் போது இருவரும் வருவோம்” என்று கூறி எனக்கு விடை கொடுத்தாள்.

ஊருக்கு வந்ததும், தங்கையை ஏன் அழைத்து வரவில்லை என்ற கேள்வியைத்தான் முதலில் அம்மா கேட்டார். பிறகு தங்கையின் குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார். தையல் பொறி வாங்கும் முயற்சிக்கு நான் பண உதவி செய்யப்போவதைக் கூறியவுடன் அம்மாவின் முகத்தில் ஒரு தனி மகிழ்ச்சி ஏற்பட்டது.

பிறகு சோழசிங்கபுரம்பற்றிப் பேச்சு வந்தது. மாலன் ஊரில் இல்லாததைச் சொன்னபோது, எல்லோர்க்கும் பெரிய ஏமாற்றம் ஆயிற்று.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு