(அகல் விளக்கு – மு.வரதராசனார். 65. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 26 தொடர்ச்சி

ஒரு மாதக் கடைசியில் வரவு செலவு பார்த்தபோது, ஈரோட்டு அப்பாவுக்காக ஐம்பது உரூபாய் என்று சொல்லாமல் மாலனுக்காக ஐம்பது ரூபாய் என்று சொல்லிவிட்டேன். அகப்பட்டுக் கொண்டேன். விடாமல் கேட்டாள். உண்மையைச் சொன்னேன். “அவ்வளவுதான், அந்த ஆயிரமும் போனதுதான். பணவகையில் அவர் மோசமான பேர்வழி என்று தெரிந்துதான் கற்பகத்தின் அப்பா பணம் கொடுக்க மாட்டேன் என்கிறார். நிலமாக எழுதி வைக்கிறார். எனக்கு இதுவரையில் சொல்லவில்லையே” என்று கடிந்தாள்.

“நண்பருக்கு ஒரு முறையாவது அந்த அளவுக்காவது உதவி செய்யாமல் கல்மனத்தோடு இருக்க முடியுமா? பெண்களுக்கு அந்தக் கல்மனம் உண்டு. ஆண்களுக்கு முடியாது?” என்றேன். “போதும், இந்த அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இனிமேல் பணம் கொடுத்து உதவும் வேலை வேண்டா” என்றாள். அதற்குப் பிறகு அவள் கற்பகத்தின் கடிதம் பற்றிச் சொன்னாலும், மாலனுக்குச் சொல்லிச் சீர்ப்படுத்தக் கூடாதா என்பதைப் பற்றிச் சொல்வதை விட்டுவிட்டாள்.

ஒருமுறை மட்டும் மிக்க இரக்கத்தோடு கடிதத்தைப் படித்து கொண்டிருந்தபோது நான் அணுகிச் சென்றேன். “நான் பார்க்கக்கூடாதா? படி கேட்கலாமே” என்றேன்.

படித்தாள், “இனிமேல் என் கணவர் மனம் திருந்தி வருவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர் போக்கே உலகத்தில் இல்லாத புதிய போக்காக இருக்கிறது. அப்பா யார் யாரிடமோ சொல்லியனுப்பி முயற்சி எல்லாம் செய்து ஆயிற்று. உன்னுடைய கணவரும் தம்மால் ஆனவரையில் முயன்றார் என்று நம்புகிறேன். என் மனமும் மரத்துவிட்டது. ஆனாலும், அப்பாவின் கவலையைப் பார்க்கும் போதுதான், என்னால் அவர் துன்பப்படுகிறாரே என்ற வருத்தம் ஏற்படுகிறது. அப்பா மட்டும் சிறிது மனத் துணிவோடு இருப்பாரானால், நான் இனி அவரோடு வாழும் வாழ்வையே மறந்துவிடுவேன்.

கொஞ்ச காலம் வாழ்ந்தேன் அல்லவா? அது போதும். எத்தனையோ பெண்கள் அவ்வளவு சிறு காலமும் கணவருடன் வாழாதவர்கள் இல்லையா? அவர்களை விட என் நிலைமை மேலானது என்று எண்ணிக் கொள்கிறேன். இன்னொரு வகையில் நான் புண்ணியம் உடையவள். திருவாய்மொழியும் திருப்பாவையும் எனக்கு இருக்கும்போது என்ன குறை? எப்படியோ அந்த இரண்டு மக்களையும் பார்த்துப் பாராட்டிக்கொண்டு காலம் கழிப்பேன்” என்று கற்பகத்தின் கடிதத்தைப் படித்தாள்.

அப்போது நான் நிறுத்தி, “திருவாய்மொழி பையன், நினைவு இருக்கிறது. திருப்பாவை” என்றேன்.

“மகள். குழந்தை, மறந்துவிட்டீர்களா?” என்றாள்.

“பெயர் தெரியாது அல்லவா? நல்லது. படி” என்றேன் தொடர்ந்து படித்தாள்.

“இந்தக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும்போது, அப்பா திண்ணை மேல் உட்கார்ந்து ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பது கேட்கிறது. பையன் (அதாவது என் அண்ணன்) போன இடம் தெரியவில்லை, அவன் எங்கே வரப்போகிறான், எத்தனை குறை இருந்தாலும் மானம் உடையவன், எங்கேயாவது உயிரை விட்டு விட்டிருப்பான்.

இந்தச் சொத்தை எல்லாம் நான் யாருக்கு வைத்து விட்டுப் போகப்போறேன், மருமகன் வந்து எல்லா நிலத்தையும் வைத்துக் கொண்டு பார்த்துக் கொள்ளக்கூடாதா. இருக்கும் கடனைத் தீர்த்து விட்டுச் சுகமாக வாழலாமே எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். சொல்லும்போது அவருடைய மனத்தில் மகனைப் பற்றிய வேதனையும் இருக்கிறது. என்ன சொன்னாலும் அவர் கேட்கவில்லை. அவருடைய மனத்துக்கு தான் ஆறுதல் அளிக்க முடியவில்லை. அதுதான் இப்போது என் கவலை, – இப்படிக்கு அன்புள்ள கற்பகம்.”

இவ்வாறு மனைவி படித்து முடித்த போது, சாமண்ணாவின் வேதனை என் மனத்திலும் பற்றிக்கொண்டது. சந்திரன் உண்மையாகவே மானம் உடையவன். அதனால்தான் இமாவதியால் ஏமாற்றம் அடைந்ததாக உணர்ந்ததும் கல்லூரி விடுதியை விட்டே ஓடிப்போய் விட்டான். இப்போதும் மனைவி தற்கொலை செய்து கொண்டாள் என்று அறிந்ததும் ஊரை விட்டே ஓடிப்போனான்.

ஆனால் இந்த மான உணர்ச்சி இருந்த அளவிற்கு அறத்தில் நம்பிக்கையும் நெறியில் தெளிவும் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். நம்பிக்கையும் தெளிவும் இல்லாத போது இந்தப் பொல்லாத மானம் இருந்தும் என்ன பயன்? தன்னைக் கெடுத்துக் கொள்வதற்கும் அழித்துக் கொள்வதற்கும் தான் இந்த மான உணர்ச்சி பயன்படுகிறது என எண்ணிச் சோர்ந்தேன்.

“ஏன் வருந்துகிறீர்கள்?” என்றாள் மனைவி.

“சந்திரன் என்ன ஆனானோ என்று நினைத்தால் மனம் வேதனைபடுகிறது.”

“அந்த ஆள் இனி எப்படிப் போனால் என்ன? மனைவி போய்விட்டாள். குடும்பம் போய்விட்டது. போனவர்களை நினைத்து வருந்திப் பயன் என்ன? இருக்கிறவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா? செய்யுங்கள். இப்படிச் சொத்து முழுதும் கிடைக்கும் என்பதைக் கற்பகத்தின் கணவருக்கு எழுதுங்கள்.”

அந்தச் சொல் நொந்த என் மனத்தைக் கோலால் குத்துவது போல் இருந்தது. “ஒருகாலும் நான் அப்படி எழுதமாட்டேன். என் நண்பன் சந்திரன் செத்துப்போனான் என்று நினைக்கவும் என் மனம் இடம் தரவில்லை. அய்யோ வேண்டா” என்றேன்.

மாலனுக்கு வேறு வகையில் கடிதம் எழுதினேன். மறுமொழி வரும் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துச் சலித்தேன். பணம் கடன் கொடுத்த காரணத்தால் இருந்த நட்புக்கும் இடையூறு நேர்ந்துவிட்டது என்று எண்ணிக் கொண்டேன்.

முன்னெல்லாம் இப்படி நண்பரிடமிருந்தும் வீட்டாரிடமிருந்தும் கடிதம் வராமல் இருந்தால் அதுவே எனக்குப் பெருங்கவலை ஆகிவிடும். அதையே எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருப்பேன். சிறு துன்பமும் பெரிதாகத் தோன்றிய காலம் அது. இப்போது பெரிய துன்பமும் சின்னதாகத் தோன்றும் அளவிற்கு மனமாறுதல் ஏற்பட்டுவிட்டது. நன்றியுணர்ச்சி முதலான அடிப்படை உணர்ச்சிகள் அப்படியே இருக்கின்றன.

ஆனால் இன்ப துன்ப உணர்ச்சிகள் வரவரக் குறைந்துகொண்டிருக்கின்றன. சிறு தோட்டம் பயிரிடுகிறவன் ஒரு செடி வாடினாலும் கவலைப்படுகிறான்; பெரிய தோட்டம் உடையவன் ஒரு பாத்தியே பட்டுப்போனால் தான் வருந்துகிறான்; பெரிய தோப்பு உடையவன் ஒரு செடிக்காவும் கவலைப்படுவதில்லை; ஒரு பாத்திக்காகவும் வருந்துவதில்லை. இரண்டு மூன்று பெரிய மரங்கள் பட்டுப்போனால் தான் அவனுடைய மனம் கொஞ்சம் அசையும். அப்போதும் அவன், சின்ன தோட்டம் பயிரிடுகின்றவனைப் போல் அவ்வளவு கவலைப்பட மாட்டான் அல்லவா?

என் மனநிலையும் அப்படித்தான் மாறியது. முன் சின்ன ஒரு கூட்டத்து அளவில் என் பழக்கமும் தொடர்பும் இருந்தன. இப்போது பெரிய நகரத்தில் நூற்றுக்கணக்கானவர்களோடும் ஆயிரக்கணக் கானவர்களோடும் பழக நேர்ந்துவிட்டதால், உணர்ச்சிகளின் ஆழம் குறைந்துவிட்டது. அதனால் சந்திரனுக்காகவும் மாலனுக்காகவும் வருந்தும் வருத்தம் முன்போல் இல்லை எனலாம்.

நான் தொழில் காரணமாகவும் வேறு காரணமாகவும் நூற்றுக்கணக்கானவர்களோடு பழகிய போதிலும், ஒரு சிலர் தான் உண்மையாக என்னுடன் நெருங்கிய பழக்கம் உடையவர்கள். அவர்களிடம் என் மனம் கொஞ்சம் ஆழ்ந்த நட்பும் கொண்டது என்று சொல்லலாம்.

அவர்களுள், என் அலுவலகத்தில் என்னோடு தொழில் செய்த நண்பர் ஒருவர். அவருடைய பெயர் பச்சைமலை. நல்ல பண்புகள் உடையவர். பலரோடு பழகமாட்டார். பழகும் சிலரிடத்தில் அன்பாகப் பழகுவார். அலுவலகத்தில் வேலையாட்களையும் மனம் நோகப் பேசாதவர். ஆனால் வேலையில் திறமையானவர். அப்படிப்பட்டவர் ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கள் வீட்டுக்கு வரப் போகப் பழகினார். நாங்களும் சில ஞாயிற்றுக்கிழமைகளில் அவருடைய வீட்டுக்குச் சென்றோம். நாளடைவில் பெண்களுக்குள் பழக்கம் மிகுந்தது. நான் வேலை மிகுதியாக இருந்தபோது மனைவி மட்டும் அங்கே போய் வருவதும் பழக்கமாயிற்று.

ஒரு நாள் இரவு நான் வீட்டுக்குத் திரும்பியதும் “பச்சைமலையின் மனைவி உங்களுக்குச் சின்ன வயதிலிருந்தே தெரியுமாமே” என்றாள்.

“உனக்குப் பைத்தியம்! நாம் எங்கிருந்தோ பிழைக்க வந்தோம். நாம் யார்? அவர்கள் யார்? இப்போதுதானே பழக்கம்! என்ன உளறுகிறாய்?” என்றேன்.

“அவர் உங்களுக்குச் சொல்லவே இல்லையா?”

“நீ என்னதான் சொல்கிறாய்?”

“அந்த அம்மாவுக்கும் இத்தனை நாள் தெரியாது. இன்றைக்குத் தான் கண்டுபிடித்தார்கள்.”

“அமெரிக்காவா, ஆத்திரேலியாவா. என்னை அவர்கள் கண்டுபிடிக்க.”

“பொய்யா சொல்கிறேன்?”

“என்ன செய்தி? விளக்கமாகச் சொல்.”

அந்த அம்மாவின் அக்கா ஊரிலிருந்து வந்திருக்கிறார். முன்னமே ஒருமுறை வந்தபோதும் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். இன்றைக்கு என்னென்னவோ பேசியிருந்து விட்டு, குடும்பத்தைப் பற்றிக் கேட்கத் தொடங்கினார். அப்போது தெரிந்துவிட்டது.”

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு