மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 66
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 65 தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 24
பால்வாய் பிறைப்பிள்ளை ஒக்கலை கொண்டுபகல் இழந்த
மேம்பால் திசைப்பெண் புலம்பறுமாலை
— திருவிருத்தம்
இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் போது (இ)ரப்பர் காட்டுகிற நீளம் அதனுடைய இயல்பான நீளமன்று. இழுத்துக் கொண்டிருப்பவனுடைய கை உண்டாக்கிக் காட்டும் செயற்கையான நீளம் அது! அதைப் போல் இயல்பாகவே தங்களிடம் உள்ள நேர்மைக் குறைவால், அதைத் தாங்கள் பிறரிடம் காட்டும்போது பெரிதாக்கிக் காட்டி வாழ்கிறவர்கள் சிலர் சமூகத்தில் உண்டு. அகவாழ்வில் கொடுமையே உருவானவராய்த் தெரியும் ‘பருமாக்காரர்’ நகரில் புகழும் பதவியும் பெற்று, நேர்மையானவர் போல் காட்டிக் கொள்வது இந்த விதத்தில் தான் என்பது என்று அரவிந்தனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கிவிட்டது.
பிறரை வெறுப்பதற்கும், கடுமையாகப் பகைத்துக் கொண்டு அடி, உதைகளில் இறங்குவதற்குங் கூட ஒருவகை முரட்டுச் சாமர்த்தியம் வேண்டும். ஆனால் அன்பின் நெகிழ்ச்சியும், கலைகளின் மென்மைப் பண்பும் கலந்த மனமுள்ளவர்களுக்கு இந்த முரட்டுத்தனம் வராது. அரவிந்தன் சிறு வயதிலிருந்தே இந்த முரட்டுத்தனம் உண்டாகாமல் வளர்ந்தவன்.
முருகானந்தமோ இந்த முரட்டுத்தனத்தையே வீரமாக்கிக் கொண்டவன். பருமாக்காரர் எசுடேட்டு மாளிகையில் அவரால் ஏவப்பட்ட முரட்டு அடியாள் தன்னை நோக்கிக் கைகளை ஓங்கிக் கொண்டு வந்தபோது அரவிந்தன் பதில் தாக்குதலுக்கும், தாக்குதலைச் சமாளிப்பதற்கும், தயாரானானே ஒழிய, அவன் மனம் முரட்டு வெறி கொள்ளவில்லை. இத்தகைய கொடுமைத் தாக்குதல்களுக்கு அந்த முரட்டு வெறி உண்டாகாவிட்டால் வெற்றியில்லை. எமகிங்கரனைப் போல் கைகளை ஓங்கிக் கொண்டு வந்த அந்த புண்ணாக்குத் தடியனிடம் மாட்டிக் கொண்டிருந்தால் அரவிந்தனால் போரிட்டுத் தப்பியிருக்க முடியாதுதான்!
ஆனால் போரிடாமல், புண்படாமல் தப்பிக்க அருமையான சந்தர்ப்பம் வாய்த்தது அரவிந்தனுக்கு. மென்மைக் குணம் படைத்த நல்ல மனிதர்களை அந்த மென்மைக்கு ஊறு நேராமலே தெய்வ சித்தம் காப்பாற்றி விடுகிறது என்பது எத்தனை பொருத்தமான உண்மை! தெய்வ சித்தமோ அல்லது தற்செயலான சந்தர்ப்பமோ எப்படி வைத்துக் கொண்டாலும் சரி, அந்தச் சமயத்தில் அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அந்த முரடன் அடித்துக் கீழே தள்ளிவிட அரவிந்தனை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெரிய கார் காம்பவுண்டுக்குள் நுழைந்து வேகமாக மாளிகை முகப்புக்கு வந்து நின்றது. கண்ணியமானவர்களாகவும், செல்வம் நிறைந்தவர்களாகவும் தோன்றிய யாரோ இரண்டு, மூன்று பேர்கள் பருமாக்காரரை நோக்கிக் கைகூப்பிக் கொண்டே காரிலிருந்து இறங்கினார்கள்.
அவ்வளவுதான், நாடகத்தில் காட்சி மாறுகிறாற் போல் உடனடியாக அங்கு ஒரு மாற்றம் நிகழ்ந்தது. “வரவேணும்! வரவேணும்!” என்று வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக் கொண்டே பருமாக்காரரும், புதுமண்டபத்து மனிதரும் வந்தவர்களை எதிர்கொண்டழைக்க ஓடி வந்தார்கள். “பலராம்! உள்ளே போய் அம்மாவிடம் காப்பி, பலகாரத்துக்குச் சொல்லு” என்று தடியனை வேறு காரியத்துக்குத் திருப்பி விட்டார் பருமாக்காரர். ‘தன்னைப் பற்றி வந்தவர்களுக்கு முன்னால் அரவிந்தன் ஏதாவது கண்டபடி கூச்சல் போட்டு மானத்தை வாங்கிவிடப் போகிறான்’ என்ற பயத்தினால் அவரே முந்திக் கொண்டார். ஒன்றுமே நடக்காதது போல் சிரித்த முகத்தோடு அவனை நோக்கி, “நீ போய்விட்டு நாளைக்கு வா தம்பி! இப்போது நேரமில்லை எனக்கு” என்றாரே பார்க்கலாம்! ஒரே விநாடியில் காட்சியை மாற்றி நடித்து விட்ட அந்தச் சாமர்த்தியத்தை எப்படி வியப்பதென்றே அரவிந்தனுக்குத் தெரியவில்லை.
அவன் பயத்தையும், வியப்பையும், இன்னும் எண்ணற்ற உணர்ச்சிகளையும் மனத்தில் சுமந்து கொண்டே அந்தப் பெரிய தோட்டத்திலிருந்து வெளியேறிச் சாலைக்கு வந்தான். சிறிது நேரத்தில் பேருந்து வந்தது. கையை நீட்டிப் பேருந்தை நிறுத்தி ஏறிக்கொண்டான். வெளியூரிலிருந்து மதுரை திரும்பும் பேருந்து அது. வையைப் பாலத்து இறக்கத்தில் யானைக்கல்லில் இறங்கிக் கொண்டான் அரவிந்தன். இரவு மணி எட்டுக்கு மேல் ஆகியிருந்தது. சில்லறை விற்பனைக்காகப் பலாப்பழம், மாம்பழம் முதலிய பழங்களை மொத்தத்தில் குவித்து வைத்துக் கொண்டிருக்கும் ‘பழக்கமிசன் மண்டிகள்’ நிறைந்த யானைக்கல் பிரதேசம் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. ஊரெல்லாம் பலாப்பழமும், மாம்பழமுமே நிரம்பிக் கிடப்பது போல் அந்தப் பகுதிக்கென்றே ஒருவகைப் பழமணம் சொந்தமாயிருந்தது. பலாப்பழத்தின் உடைந்த சக்கைகளும், அழுகின பழச் சிதறல்களுமாக, வீதியே பழக்கடைகளுக்கு அடையாளம் சொல்லி வழிகாட்டுவது போல ஒரு தோற்றம். அரவிந்தன் நடந்து கொண்டிருந்தான். அவன் மனம் பருமாக்காரர் எசுடேட்டில் நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. தேர்தல் காலங்களில் ஆட்களைக் கடத்திக் கொண்டு போய் ஒளித்து வைப்பது, தனியே கூட்டிச் சென்று மிரட்டி பயமுறுத்துவது போன்ற சூழ்ச்சிகள் நடைபெறுவது உண்டு என்று அரவிந்தன் கேள்விப்பட்டிருக்கிறான். அம்மாதிரிப் பயங்கரச் சூழ்ச்சிகளையும் செயல்களையும் பற்றித் தேர்தலை ஒட்டிய காலத்துச் செய்தித்தாள்களில் சில செய்திகளும் படித்திருக்கிறான். அப்போதெல்லாம் இத்தகைய நிகழ்ச்சிகள் இன்றைய உலகில் சருவசாதாரணமாக நடைபெற இடமிருக்கிறது என்பதையே அவன் நம்பியது கிடையாது. ஒப்புக்கொண்டதும் இல்லை. ஆனால் இன்று தன்னுடைய வாழ்க்கையில் தானே இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு ஆளாகிவிட்டுத் தப்பி வந்திருப்பதை நினைத்தபோது அவனுக்கு உடல் புல்லரித்தது. மென்மையான பழத்துக்குள்ளே வன்மையான கொட்டை பொதிந்திருப்பது போல அன்பாலும் அறத்தாலும் அப்பாவியாக வாழ்கிறவர்களின் நடுவே கொடுமையாலும் சூழ்ச்சியாலும் வாழ முயல்கிறவர்கள் இலைமறை காய் என இருக்கிறார்கள் என்பதை இன்று அவன் நம்பினான். ஒப்புக் கொண்டான். அனுபவித்தும் உணர்ந்து விட்டான்.
யானைக் கல்லில் இறங்கி நேர் மேற்கே செல்லுகிற சாலையில் நடந்து கொண்டிருந்த அரவிந்தன் பழைய சொக்கநாதர் கோவில் வாயில் தெற்கே திரும்பிய போது யாரோ கைதட்டிக் கூப்பிட்டார்கள். வெறும் கைத்தட்டலாக மட்டும் இருந்தால் அரவிந்தன் திரும்பிப் பார்த்திருக்க மாட்டான். கைத்தட்டலோடு “அதோ அரவிந்த மாமா போகிறாரு” என்று பழக்கமான குரல் ஒன்றும் சேர்ந்து ஒலிக்கவே அவன் திரும்பிப் பார்த்தான். பூரணியின் தங்கை மங்கையர்க்கரசி, மங்களேசுவரி அம்மாள், செல்லம், சம்பந்தன் எல்லாரும் கோயிலின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார்கள். கீழே வீதியில் அந்த அம்மாளுடைய கார் நின்று கொண்டிருந்தது. சிறுமி மங்கையர்க்கரசி தான் அவன் பாதையோரமாகப் போவதை முதலில் பார்த்து அடையாளங்கண்டு கூப்பிட்டிருக்கிறாள்.
“சுகமாயிருக்கிறீர்களா? எங்கேயாவது வெளியூர் போயிருந்தீர்களா? பூரணி கோடைக்கானல் போன பின்பு நீங்கள் கண்ணில் தட்டுப்படவே இல்லையே; இப்போது கூட நான் உங்களைப் பார்க்கவில்லை. இந்தப் பெண்தான் நீங்கள் போவதைப் பார்த்துவிட்டுச் சொன்னாள். அப்புறம் கைதட்டி அழைத்தேன்” மங்களேசுவரி அம்மாள் அன்போடு அவனை விசாரித்தாள். முதுமையின் பொறுப்பும் கண்ணியமான பண்புகளும் நிறைந்த அந்த அம்மாளின் மலர்ந்த முகத்தைப் பார்த்ததுமே கைகள் குவித்து வணங்கினான் அரவிந்தன். ‘வயது ஆக ஆகப் பெண்களிடமிருந்து பெண்மையின் மயக்கும் அழகு கழன்று தாய்மையின் தெய்வீக அழகு வந்துவிடுகிறது’ என்று அவன் படித்திருந்தான். மங்களேசுவரி அம்மாளின் முகத்தில் மூப்பின் நலிவையும் மறைத்துக் கொண்டு ஒரு தாய்மைப் பொலிவு தென்படும். அந்த கௌரவமான அழகை வணங்காமலிருக்க அரவிந்தனால் முடியாது. பாரத நாட்டின் பெண்ணின் பெருமையே இந்தத் தாய்மை அழகுதான் என நினைப்பவன் அவன்.
அவன் தன்னைப் பற்றி அந்த அம்மாள் விசாரித்ததற்கு மறுமொழி சொன்னான். சிற்றப்பாவின் இறுதிச் சடங்குகளுக்காகக் கிராமத்துக்குப் போய்விட்டு வந்ததையும், மறுநாள் அவசரமாகக் கோடைக்கானல் போவதற்கு இருப்பதையும் விவரித்தான். மீனாட்சிசுந்தரம் முருகானந்தத்தோடு பூரணியைச் சந்திப்பதற்காகக் கோடைக்கானல் போயிருக்கிறார் என்பதையும் அந்த அம்மாளிடம் சொன்னான். ‘என்ன காரியமாகச் சந்திக்க அவர் அங்கே போயிருக்கிறார்’ என்பதை அந்த அம்மாளும் கேட்கவில்லை. அவனும் அதைப் பற்றிச் சொல்லவில்லை.
“நான் கூட இந்தக் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு ஒருமுறை போய்ப் பார்த்துவிட்டு வர வேண்டுமென்று தோன்றுகிறது. பூரணி போய்ச் சேர்ந்ததும் அங்கிருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அப்புறம் ஒன்றும் தகவலே இல்லை. மூத்த பெண்ணையும் அவள் கூட அனுப்பியிருக்கிறேன். அந்தப் பெண்ணுக்குக் கல்யாணத்தை முடித்துவிட வேண்டுமென்று வரன்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒன்றும் சரியாக அமையவில்லை. உங்களுக்கு ஒன்றும் அவசரமான காரியமில்லாவிட்டால் கொஞ்சம் வீட்டுக்கு வாருங்களேன். இராத்திரிச் சாப்பாட்டை அங்கே வைத்துக் கொள்ளலாம். எனக்கும் உங்களிடம் சிறிது நேரம் மனம் விட்டுப் பேச வேண்டும் போலிருக்கிறது” என்று மங்களேசுவரி அம்மாள் வேண்டிக் கொண்டபோது, அரவிந்தனால் மறுக்க முடியவில்லை.
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர்
Leave a Reply