மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 74
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 26 தொடர்ச்சி
“அம்மா! இன்னும் சிறிது காலத்திற்கு மனத்தினால் வாழ்ந்து கொண்டிருக்க மட்டும் எங்களை அனுமதியுங்கள். உடலால் வாழும் வாழ்க்கையைப் பற்றி நான் இன்னும் எண்ணிப் பார்க்கவே இல்லை. உடம்பைப் பற்றித் தொடர்கிற வாழ்க்கை ஒரு பெரிய பொய் மயக்கமாகவே இந்த விநாடி வரை எனக்குத் தோன்றுகிறது. காக்கை கூட்டில் இடப்பட்ட குயில் முட்டையைத் தன்னுடையது, தனக்கேயுரியது என்று தவறாக மயங்கிப் பேணி வளர்க்கும் பேதைக் காக்கையைப் போல் உடம்பைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு வாழத் தயங்குகிறேன் நான். குயில் முட்டை சிதைந்து குஞ்சு பெரிதாக வளர்ந்து இனிய குரலில் அழுதொழுகக் கூவியவாறே காக்கைக் கூட்டிலிருந்து அது பறக்கும் போதுதான் காக்கை தான் வளர்த்தது தன் குஞ்சன்று, குயிற் குஞ்சு என்று உணர்ந்து ஏமாற முடிகிறது. எனக்கும் பூரணிக்கும் எங்களைப் புரிந்து கொள்ளாமல் இப்போதே அந்த ஏற்பாட்டையெல்லாம் நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டு செய்தால் நாங்கள் வாழ்வதும் காக்கை, குயில் மூட்டையை அடைகாத்த கதையாக ஏமாற்றத்தில் தான் முடியுமென்று எனக்குத் தோன்றுகிறது.”
“என்னவோ புத்தகங்களில் படிக்கிற மாதிரி சொல்கிறீர்கள். உங்கள் தத்துவம் எனக்கு விளங்கவில்லை. பொருத்தமாகவும் படவில்லை. இருவரும் ஆசையுடனும் அன்புடனும் பழகுகிறீர்கள். புதிதாக, அதிசயமாக உங்களை ஒன்றும் செய்து கொள்ளச் சொல்லவில்லை. உலகத்தில் சாதாரணமாக எல்லாரும் செய்து கொள்வதைத்தான் நீங்களும் செய்து கொள்ள வேணுமென்று வற்புறுத்துகிறேன். உலகத்துக்கு ஒப்ப, நாலு பேரறிய மணம் செய்து கொண்டுவிட்டால் அப்புறம் ஆயிரம் இலட்சியங்களைப் பேசலாம், கடைப்பிடிக்கலாம், உங்களை ஏனென்று கேட்க மாட்டார்கள்.”
“நீங்கள் எந்த வாழ்க்கையைப் பற்றி நினைவூட்டுகிறீர்களோ, அந்த வாழ்க்கையை எங்கள் மனங்களிலேயே நாங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் ஒரே சமயத்தில் இரண்டுவிதமான வாழ்க்கையை நடத்த முடியும். எந்த வாழ்க்கையை வாழ வேண்டுமென்று தவிக்கிறோமோ அந்த வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள் மனத்தில் ஏற்படும்போதே ஒருமுறை வாழ்ந்துவிடலாம் அம்மா! எண்ணங்களில் வாழும் வாழ்வு உயர்ந்தது. அதற்கு அழிவில்லை. மிக உயர்ந்த வாழ்க்கையை மண்ணில் வாழ முடியாதோ என்று எனக்கும் பயமாக இருக்கிறது. மண் குறைபாடுகளும் அழுக்குகளும் நிறைந்ததாயிருக்கிறது. அதனால் தான் இன்னும் சிறிது காலம் எங்களை மனங்களில் மட்டும் வாழ அனுமதியுங்கள் என்று உங்களைக் கெஞ்சுகிறேன்.”
“எனக்கும் உங்களைப் போலவே மேற்கோள், எடுத்துக் காட்டு எல்லாம் சொல்லிப் பேசுவதற்குத் தெரியும் அரவிந்தன். ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என்றுதான் நம்முடைய பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.“
“பெரியவர்கள் அதைச் சொல்லிய காலத்து வாழ்க்கைச் சூழ்நிலை வேறு. இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலை வேறு. ஏற்கெனவே நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், மற்றவர்கள் புதிதாக நல்லவண்ணம் வாழ வந்துவிடலாகாதே என்று மனத்தில் அழுக்காறு கொள்கிற காலம் அம்மா இது. பாட்டில் மூடியைப் போல், தான் வசதியாயிருக்கிற ஒரு தொழிலில் அதே வசதியடையும் திறமையுள்ள பிறர் நுழைந்து விடாமல் மூடிக் காக்கும் சூழ்ச்சியான மனிதர்கள் இன்றைய வாழ்க்கையில் நிறைய இருக்கிறார்கள். அதனால் தான் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் ஒப்புரவு வாழ்வில் குன்றியுள்ளது.”
“பேச்சை எங்கேயோ மாற்றிக் கொண்டு பேசுகிறீர்கள். உங்கள் திருமண ஏற்பாடு பற்றி பூரணியிடம் கேட்டேன். அவள் தேவலாம், ‘அவருக்கு விருப்பமானால் எனக்கும் விருப்பம்’ என்று சுருக்கமாக இணங்கி வழிக்கு வந்த மாதிரி பதில் சொல்லி விட்டாள். நீங்கள் தான் சுற்றி வளைத்து இழுத்தடிக்கிறீர்கள். முடிவாக ஒன்றும் சொல்லமாட்டேனென்கிறீர்கள்.”
“வேறென்னமா செய்வது? கழுத்தில் மூன்று முடிச்சிட்டு உரிமை கொண்டாடி ஆளமுடிந்த சாதாரணப் பெண்ணாக இன்னும் அவளை என்னால் நினைக்க முடியவில்லை. பூரணிக்குள்ளேயே இன்னொரு பூரணியும் இருக்கிறாள். அவள் துயரம் நிறைந்த மனித வெள்ளத்தின் நடுவே ஒளி விளக்கேற்றி நடந்து போவதாகக் கனவு காண்கிற பூரணி. காக்கை குயிற் குஞ்சை அடைகாத்து ஏமாறுவது போல் அவள் விடுபட்டுப் பறந்து போகத் துடிக்கும் நாள் வந்தால் நான் அன்று ஏமாந்து நிற்பேன். அவள் உயரப் போய் விடுவாள். நான் கீழேயே நிற்பேன். நாங்கள் இரண்டு பேருமே உயரத்தில் ஏறிச் செல்கிறோம். அதற்கு இந்த வாழ்க்கைப் பிணைப்பு அவசியமில்லை. மனங்களின் பிணைப்பு மட்டுமே போதும். என்னை வற்புறுத்தாதீர்கள். சிறிது காலத்துக்கு இப்படியே இருக்க விடுங்கள்” என்று சொல்லி விட்டுப் புல் தரையிலிருந்து எழுந்தான் அவன். இந்தப் பேச்சை இதற்கு மேல் அவன் தொடர விரும்பவில்லை என்பது மங்களேசுவரி அம்மாளுக்கு விளங்கிவிட்டது. அவன் கூறிய காரணங்களும் தத்துவங்களும் அந்த அம்மாளுக்கு அசட்டுத்தனமாகத் தோன்றின. ஆனால் அவன் பிடிவாதமாக இருந்தான். புரிந்து கொள்ளவும் புரியச் செய்யவும் சாத்தியமில்லாததான ஒரு விசயத்தை அரவிந்தன் மனத்தில் வைத்துக் கொண்டு தவிப்பதாக அந்த அம்மாளுக்குத் தோன்றியது.
எது எப்படியானால் என்ன? மீனாட்சிசுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் திட்டமிட்டபடி பூரணியின் திருமணத்தையும் சேர்த்து நடத்தும் தீர்மானம் முறிந்துவிட்டது. அன்று இரவும், அதன்பின் மறுநாள் காலையிலும் பூரணி, அரவிந்தனின் கண்பார்வையில் படவே இல்லை. மறுநாள் காலை கோடைக்கானல் மலைத் தொடர் முழுவதும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. நீலம் போர்த்த மாதிரி மலை முழுவதும் குறிஞ்சிப் பூக்கள் தெரிந்தன. பத்து பன்னிரண்டு நாட்களாகவே அங்கும் இங்குமாகச் சில சில குறிஞ்சிப் பூக்கள் தென்பட்டன. முதல் நாள் உண்டான சாரல் காற்று பருவ மாறுதல்களின் காரணமாக அன்று எங்கு நோக்கினும் அள்ளிக் கொட்டினாற் போல் குறிஞ்சி பூத்துக் குலவிக் கொண்டிருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் அந்த ஆண்டு மறுபடியும் குறிஞ்சி பூத்திருந்ததனால் ஊரில் ஒரு கோலாகலப் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. எங்கும் அந்த அழகைப் பற்றியே பேச்சு. ஊருக்குத் திருவிழா களை உண்டாக்கி விட்டிருந்தது குறிஞ்சிப் பூ.
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர்
Leave a Reply