(குறிஞ்சி மலர்  74 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்
அத்தியாயம் 26
 தொடர்ச்சி

அன்று மதுரைக்குத் திரும்புவதாக இருந்த அரவிந்தன், மீனாட்சிசுந்தரம், முருகானந்தம் மூவரும் குறிஞ்சிப் பூக்காட்சிகளைச் சுற்றிப் பார்த்து மகிழ வேண்டுமென்பதற்காகப் பயணத்தை ஒருநாள் தள்ளிப் போட்டிருந்தார்கள். அன்றைக்கு அரவிந்தனும் முருகானந்தமும் காலை பத்து மணிக்குப் புகைப்பட நிலையத்தில் போய்ப் படங்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள். அரவிந்தனையும் பூரணியையும் சேர்த்து நிறுத்தி ஸ்டூடியோக்காரர் எடுத்த படம் மிக நன்றாக இருந்தது. முருகானந்தம் அந்தப் படத்தை மிகவும் பாராட்டினான். அவர்கள் இருவரும் புகைப்பட நிலையத்திலிருந்து வீடு திரும்பும் போது பூரணியும் வசந்தாவும் கூடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். படங்களைக் கேட்டு வாங்கிப் பார்க்கும் ஆவலோடு பூரணி சிரித்துக் கொண்டே தன்னை எதிர்கொண்டு வரவேற்பாள் என்று அரவிந்தன் நினைத்திருந்தான். முதல் நாள் மாலையில் திருமண ஏற்பாட்டைத் தான் மறுத்து விட்டதனால், தன் பார்வையில் தென்பட விரும்பாமல் அவள் மெல்லிய ஊடல் கொண்டு பிணங்கியிருப்பதை அவன் புரிந்து கொண்டான். இந்தப் படங்களைப் பார்த்த பின் அவள் பிணக்கு தீர்ந்து விடுமென்று அவன் நினைத்திருந்தான். ஆனால் அவன் நினைத்து இருந்தபடி நிகழவில்லை. படங்களோடு அவன் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் விருட்டென்றெழுந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு பக்கத்து அறைக்குள் புகுந்து விட்டாள் பூரணி. வசந்தா எழுந்திருந்து படங்களை வாங்குவதற்காக அரவிந்தனுக்கு அருகில் வந்தாள். “அண்ணா! அக்காவுக்கு உங்கள் மேல் ஒரே கோபம். நேற்று மாலை தோட்டத்தில் புல் தரையில் நீங்களும் அம்மாவும் அமர்ந்து கல்யாண விசயமாகப் பேசினபோது நானும் பூரணியக்காவும் சவுக்கு வேலிக்கு அப்பால் மறுபக்கத்தில் தான் உட்கார்ந்திருந்தோம். அக்கா நீங்கள் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டார்கள். தோட்டத்திலேயே கண்ணில் நீர் தளும்பிவிட்டது அக்காவுக்கு” என்று அவன் காதருகில் மெல்லச் சொன்னாள் வசந்தா.

“அடப் பாவமே! அதுதானா இந்தக் கோபம்?” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே படங்களை வசந்தாவின் கையில் கொடுத்தான் அரவிந்தன். பூரணியின் கோபத்தைப் போக்கிவிட வேண்டுமென்று அவள் புகுந்து கொண்ட அறையில் நுழையச் சென்றான். அவன் முகத்தில் இடிக்காத குறையாக அறைக்கதவு படீரென்று அடைக்கப் பெற்றது. உட்புறம் தாழிடும் ஒலியும் கேட்டது.

“புகழேந்திப் புலவர் கதவு திறக்கப் பாடின மாதிரி நான் ஏதாவது பாடிப் பார்க்கட்டுமா, அரவிந்தன்?” என்று குறும்பு பேசினான் முருகானந்தம்.

“நீங்கள் அண்ணனுக்கு வேண்டியவர்கள். நீங்கள் பாடினால் அக்கா உள்ளே இரட்டைத் தாழாகப் போடுவார்கள்” என்று வசந்தா முருகானந்தத்தைக் கடைக்கண்ணால் பார்த்துப் புன்னகையோடு கூறினாள். அவளே மேலும் கூறலானாள்.

“அண்ணனும் அக்காவும் எடுத்துக் கொண்டிருக்கிற படம் ‘கலியாணப் படம்’ மாதிரி இல்லையா? மாலை போட்டுக் கொள்ளாததுதான் ஒரு குறை?”

“அதில் சந்தேகமென்ன? இந்தப் படம் எடுத்துக் கொண்டுவரப் போனபோது நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டார்கள் பார்த்தாயா!” முருகானந்தமும், வசந்தாவும் அவனைப் பற்றிப் பேசினார்கள். ஆனால் அவன் அப்போது அவற்றை இரசிக்கிற நிலையில் இல்லை. ‘பூரணி கூடத் தன்னைப் பற்றித் தப்பாகப் புரிந்து கொள்கிறாளே’ என்ற வருத்தம் அவன் மனத்தை வாட்டியது.

மாலையில் குறிஞ்சிப் பூ பூத்திருக்கிற மலைப் பகுதிகளையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதற்காக எல்லோரும் கிளம்பினார்கள்.

“எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. நான் வரமாட்டேன்” என்று முரண்டு பிடிப்பது போல் மறுத்தாள் பூரணி.

“அப்படியானால் நானும் வரவில்லை. எனக்கும் ஒன்றும் பிடிக்கவில்லை” என்று அரவிந்தனும் காரிலிருந்து கீழே இறங்கி விட்டான்.

“உங்கள் இரண்டு பேருக்கும் என்ன வந்துவிட்டது இன்றைக்கு. முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியவில்லையே?” என்று மங்களேசுவரி அம்மாள் கடிந்து கொண்டாள்.

அவர்கள் எவ்வளவோ மன்றாடிக் கெஞ்சிப் பார்த்தும் பூரணியும் அரவிந்தனும் வர மறுத்துவிட்டார்கள். கடைசியில் அவர்கள் இருவரையும் வீட்டில் தனிமையில் விட்டுப் புறப்பட்டது கார்.

வீட்டின் முன்புறத்தில் அருகருகே நாற்காலியில் பேசிக் கொள்ளாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் அரவிந்தனும், பூரணியும். சமையற்கார அம்மாள் பின்புறம் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். தோட்டத்து மல்லிகைச் செடியின் பூக்களைப் பறிக்காமல் விட்டிருந்ததனால் காற்று சுகந்தக் கொள்ளையைச் சுமந்து வீசிற்று. பச்சை நிறத்துக் காகிதத் துணுக்குகளை வானில் சிதறின மாதிரிப் பச்சை நிறத்துக் காகிதக்கிளிகள் சேர்ந்தாற் போல் பறந்தன. அழகான சூழ்நிலை நிலவியது. எதிரெதிரே விரோதிகள் போல் பேசாமல் எவ்வளவு நேரம் வீற்றிருப்பது? கோபித்துக் கொள்வது போல் போலியாக உண்டாக்கிக் கொண்ட கடுமைக் குரலில் பூரணிதான் முதலில் கேட்டாள்.

“நான் வரவில்லையானால் உங்களுக்கு என்னவாம்? நீங்கள் பாட்டிற்குப் போக வேண்டியதுதானே?”

“போகலாம்! ஆனால் நான் ஆவலோடு பார்க்க விரும்பும் குறிஞ்சிப் பூ எதுவோ அது அந்த மலைகளில் பூத்திருக்கவில்லை. இதோ இங்கே எனக்கு அருகில் தான் பூத்திருக்கிறது. நேற்று வரை பூத்திருந்தது. இன்று கோபத்தால் கூம்பியிருக்கிறது. அதை மலரச் செய்வதற்காக நான் இங்கே இருக்க வேண்டியது அவசியமாகிறது” என்று அரவிந்தன் அழகாக பேசிய போது அதை இரசிக்கவோ அதற்காக முகமலர்ச்சி காட்டவோ கூடாதென்றுதான் பூரணி எண்ணினாள். ஆனால் அவள் முகம் மலரத்தான் செய்தது. அதில் அவள் அவனுடைய வாக்கியங்கள் இரசிக்கும் குறிப்பும் தோன்றத்தான் தோன்றியது.

“ஆ! இதோ என்னுடைய குறிஞ்சி பூத்துவிட்டது” என்று கைகொட்டி நகைத்தான் அரவிந்தன்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்