(குறிஞ்சி மலர்  78 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர் 28

ஊரெல்லாம் கூடிஒலிக்க அழுதிட்டுப் பேரினை
நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்கள்.
      — திருமூலர்


தன்னைப் பெற்ற தந்தை இறந்தபோது கூட அரவிந்தன் இப்படி அதிர்ந்து அலமந்து கதறியழவில்லை. அப்போது அவன் சிறுவன். இப்போதோ உணர்வுகளில் நோவும் அளவுக்கு மனம் பக்குவப்பட்ட இளைஞன். ‘தன்னை வளர்த்து உருவாக்கி வாழ்வளித்த வள்ளல் இறந்து போய்விட்டார்‘ என்று அந்தத் தந்தியில் படித்தபோது அதை உண்மையாக ஏற்றுக் கொண்டு நம்பி ஒப்புக்கொள்ளவே, அவன் மனம் தயங்கியது. எவருடைய நன்றிக்கடனைத் தீர்ப்பதற்காக அவன் சிற்றப்பாவின் உடைமைகளில் பெரும் பகுதியை விற்றுப் பணமாக்கிக் கொண்டு புறப்பட்டானோ அவர் இறந்து போய்விட்டார் என்று தந்தி வந்திருக்கிறது. ‘மீனாட்சிசுந்தரம் இறந்துவிட்டார், உடனே புறப்பட்டு வரவும்’ – என்று முருகானந்தம் தந்தி கொடுத்திருக்கிறான். வெண்ணெய் திரண்டு வருகிறபோது தாழி உடைந்தது போல் நல்ல சமயத்தில் அந்தப் பெருந்தன்மையாளர் போய்ச் சேர்ந்துவிட்டாரே என்று கலங்கினான் அவன். கனவிலும் எதிர்பாராத இந்தச் சாவு அவனை பேரதிர்ச்சியடையச் செய்துவிட்டது. ‘மீனாட்சிசுந்தரம் எனக்கு மட்டும் நல்லவர் என்பதில்லை. எல்லாருக்குமே அவர் நல்லவர்! ஊருக்கு நல்லவரின் உயிரை இவ்வளவு அவசரப்பட்டுக் கூற்றுவன் கவர்ந்து கொண்டானே’ என்று விழி கலங்கி, மனம் கலங்கி, உணர்வுகள் கலங்கி, ஓய்ந்து நின்றான் அரவிந்தன். ‘அவர் சாகக்கூடாது. ஆனால் சாகச் செய்துவிட்டார்களே பாவிகள்!’ என்று அவரைக் கவலைப்படச் செய்த பருமாக்காரரையும், புதுமண்டபத்து மனிதரையும் எண்ணிக் கொதித்தான். ‘பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து என்னை ஆளாக்கிவிட்ட எந்தையே! இனி உங்களுக்கு எந்த வகையில் நன்றி செலுத்தப் போகிறேன்?’ என்று நினைத்து நினைத்து இரயில் மதுரை அடைகிறவரை வருந்தித் தவித்துக் கொண்டே வந்தான். தனக்கு அந்தப் பெரிய மனிதர் கருணை காட்டி உதவிய சந்தர்ப்பங்களெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து அவனுடைய கண்களில் நீர் நெகிழச் செய்தன.

இரயில் மதுரை நிலையத்துக்குள் நுழையும் முன் ஒரு திருப்பத்தில் நகரமும், அதன் மொத்தமான தோற்றப் பரப்பில் உயர்ந்து தெரியும் கோபுரங்களும், மிக அழகாகத் தென்படும். இன்று அந்தக் கோபுரங்களும், அவற்றின் கீழே மங்கித் தென்படும் நகரமும் தன்னைப் போலவே சோகத் தழலில் வெந்து சோம்பிச் சோர்ந்து துயர்பரவிக் கிடப்பவை போல் தோன்றின. நகரமே உயிரும் உணர்வும் செத்துப் போனாற்போல் அவனுக்குக் காட்சியளித்தது. இரயில் நிலையத்தில் நின்றதும், இறங்கி மீனாட்சிசுந்தரத்தின் வீட்டுக்கு விரைந்தான்.

அந்திமக் கிரியைக்காக வீட்டு வாயிலிலும் திண்ணைகளிலும் தெருவோரங்களிலும் மனிதர்கள் கூடியிருந்தார்கள். முருகானந்தம் வாயிலில் நின்று மேற்கொண்டு நடக்க வேண்டிய ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். சாவால் வாழ்வற்றுப்போன உடம்புக்குப் பூவால் பல்லக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. சாவு வீட்டுக்கு அடையாள ஒலிகளாக அழுகுரலும் சங்கும் சேகண்டியும் ஒலித்துக் கொண்டிருந்தன. விழிகளில் நீர்ப்படலம் மறைக்க உள்ளே ஓடினான் அரவிந்தன். கூடத்தில் ஊஞ்சல் பலகையைக் கீழே கழற்றிப் போட்டு, அவரைக் கிடத்தியிருந்தார்கள். ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுது, பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்ட பின்னும், சாவுக்களையே முகத்தில் வராமல் பெருந்தன்மை துலங்கும் அந்த உருவத்தை எட்ட நின்று பார்த்தவாறே பொங்கிப் பொங்கி அழுதான் அரவிந்தன். கைக்குட்டையால் வாயைப் பொத்திக் கொண்டு வெடித்துவரும் துக்க வெள்ளத்தை அடக்க முயன்றான், அடங்காமல் பொங்கிற்று அழுகை. கண்முன் மரணத்தைப் பார்க்கும்போது திடீரென்று வாழ்க்கையே தம்பித்து நின்றுவிடுகிறாற் போல ஒருபயம் உண்டாகிறது. நம்பிக்கையாகவும், வெற்றிகளாகவும் எண்ணிக் கொண்டிருந்த அனைத்தும் வெறும் துக்கத்தின் முத்திரைகளாகத் தெரிந்தன. நெஞ்சு கொள்ளாமல் துக்கம் குமுறிட நீர் தளும்பும் கண்களால் அவருடைய சடலத்தைப் பார்த்துக் கொண்டே நின்ற அரவிந்தன் ஒன்றுமே தோன்றாதது போல், ஒன்றுமே காணாதது போல், ஒன்றுமே உணராதது போல், வசமிழந்த அவசர நிலையில், தோன்றுவதையும் காண்பதையும், உணர்வதையும் சோக இடிக்குப் பறி கொடுத்து விட்டவனாகத் தோன்றினான்.

அவன் தளர்ந்து தவித்தபோதெல்லாம், “பயப்படாதே, நான் இருக்கிறேன். உனக்கு ஒரு கவலையும் வேண்டாம்” என்று ஆதரவோடு அருகில் வந்து முதுகில் பாசத்தோடு தட்டிக் கொடுத்த கைகளா இப்படி உணரவும் உணர்த்தவும் முடியாத நிலையில் உயிரற்றுக் கிடக்கின்றன? சற்றே கண்கள் சிவந்த நிலையில் அவன் காட்சியளித்தாலும் “ஏண்டா அரவிந்தா! இரவில் அதிக நேரம் விழித்தாயா. இனிமேல் அப்படிச் செய்யாதே, இராத் தூக்கம் இல்லாவிட்டால் உடம்பை உருக்கிவிடும்” என்று அன்புடனே கடிந்து கொண்ட வாயா இப்படி ஈமொய்த்து ஈரம் உலர்ந்து சவக்களை காட்டுகிறது?

நினைக்க நினைக்க மனத்திலுள்ள துக்கமெல்லாம் கண் வழிப்பெருகுவதுபோல் அழுகைதான் பெருகிற்று. எவ்வளவு நேரம்தான் அழுது கொண்டிருப்பது? இனிமேல் அழுதுதான் என்ன ஆகப்போகிறது? கண்களைத் துடைத்துக் கொண்டு முருகானந்தத்தோடு சேர்ந்து தானும் மேலே நடக்க வேண்டிய காரியங்களைக் கவனிக்க ஆரம்பித்தான் அரவிந்தன். யார் யாரோ வந்தார்கள். என்ன என்னவோ சொல்லித் துக்கம் கேட்டார்கள். எதை எதையோ நினைவுபடுத்தினார்கள். ஒன்றுமே நினைவில்லாமலும், நினைவிலேயே ஒன்றுமில்லாமலும் வேலைகளில் அவன் இயங்கிக் கொண்டிருந்தான்.

மீனாட்சிசுந்தரத்தின் மக்களில் மூத்தவர் மூவரும் பெண்கள். முதல் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து கொடுத்திருந்தார். மூத்த பெண்ணுக்குத் திருநெல்வேலியிலும், அடுத்த பெண்ணுக்குத் திருச்சியிலும் சம்பந்தமாயிருந்தது. மூன்றாவது பெண் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுத் திருமண வயதில் வீட்டில் இருந்தாள். கடைசியாகப் பத்து பன்னிரண்டு வயதில் ஒரு பையன் இருந்தான்.

பெண்கள் வருவதற்காகத் திருச்சிக்கும் திருநெல்வேலிக்கும் அவசரமாகத் தந்திகள் கொடுத்திருந்தான் முருகானந்தம். பெண்கள் வந்து பார்ப்பதற்கு முன்னால் சவத்தை எடுக்க வேண்டாமென்று திருமதி மீனாட்சிசுந்தரம் கூறியிருந்தாள். அரவிந்தன் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் கோடைக்கானலிலிருந்து பூரணி, மங்களேசுவரி அம்மாள் முதலியவர்கள் வண்டியில் வந்துவிட்டார்கள். அவர்களுக்கும் முருகானந்தம் தந்தி கொடுத்திருந்தான் போலிருக்கிறது. பெண்கள் கூட்டம் உள்ளே அதிகமாக, அதிகமாக, அழுகைக் குரல் ஒலியும் அதிகமாயிற்று. உறவினர்களும், நண்பர்களும் பழகிய பிரமுகர்களுமாக வாயிலில் ஆண்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு மனிதன் உண்மையிலேயே நல்லவனாகவும், பெருந்தன்மை உள்ளவனாகவும் இருந்தான் என்பதற்கு அடையாளம் அவன் வாழும்போது கூடுகிற கூட்டம் அல்ல. மரணத்தின் போது கூடுகிற கூட்டம் தான், மனிதனுடைய பெருந்தன்மையை மாற்றுக்காணச் சரியான கட்டளைக் கல். மீனாட்சிசுந்தரம் இறந்ததும் அவர் வீட்டில் கூடியிருந்த கூட்டம் அவர் பெருமையை நன்றாகக் காட்டியது. அச்சகத்து ஊழியர்கள் கண்ணீர் மல்க கூடி நின்றார்கள். ஊர் நடுவில் நிழல் தந்து கொண்டிருந்த, பெரிய மரம் திடீரென்று சாய்ந்து முறிந்து விட்டாற்போல் அந்த மனிதரின் மரணம் எல்லோருக்கும் வேதனை அளித்திருந்தது. இருட்டுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன் திருநெல்வேலியிலிருந்தும், திருச்சியிலிருந்தும் பெண்கள் இருவரும் வந்து சேர்ந்துவிட்டார்கள். இரண்டு மாப்பிள்ளைகளுமே உடன் வந்திருந்தார்கள்.

வையையில் வெள்ளம் போனதால் பாலம் சுற்றிச் செல்லூர் வழியாகத் தத்தனேரிச் சுடுகாட்டுக்குப் போய் எல்லாம் முடித்துவிட்டுத் திரும்பும்போது இரவு பதினோரு மணிக்கு மேல் இருக்கும். அரவிந்தன் பித்துப் பிடித்தவன் மாதிரிச் சோர்ந்து நடைப்பிணம் போல் அச்சகத்துக்குத் திரும்பினான். அந்தச் சமயத்தில் அரவிந்தனுக்கு ஆறுதலாக உடனிருக்க வேண்டியது அவசியமென்று தோன்றியதால் முருகானந்தமும் உடன் வந்தான். அச்சகத்துக்குள் நுழையுமுன், “இதோ இதுதான் அப்பா, அவருடைய உயிருக்கு எமனாக வந்து தோன்றியது! நீ கிராமத்துக்குப் போன பின் இரண்டு நாட்களில் ஒருவிதமான உடல் தேறி அச்சகத்துக்கு வந்து போகத் தொடங்கி இருந்தார்.

இந்தக் கட்டடத்தைப் பருமாக்காரர் விலைக்கு வாங்கியதையும், இதில் புதுமண்டபத்து மனிதர் அச்சகம் வைக்கப் போகிறார் என்பதையும் கேள்விப்பட்டாரோ இல்லையோ, மறுநாள் மீண்டும் இரத்தக் கொதிப்பு அதிகமாகிப் படுக்கையில் விழுந்துவிட்டார்” என்று முருகானந்தம் பக்கத்துக் கட்டடத்தைச் சுட்டிக் காட்டினான். திகைப்போடு பக்கத்துக் கட்டடத்தை நிமிர்ந்து பார்த்தான் அரவிந்தன். ‘குமரகுருபர விலாசு காப்பி சாப்பாட்டு ஓட்டல்’ என்று புகை படிந்த சுவரில் அங்கே வழக்கமாகத் தொங்கும் ஓட்டல் விளம்பரப் பலகையை இப்போது காணவில்லை. புது வெள்ளைப் பூச்சுடன் கூடி அழகாயிருந்த கட்டடத்தில் ஓட்டல் விளம்பரப் பலகைக்குப் பதில் அதே இடத்தில் ‘காமாட்சி அச்சகம்’ என்ற எனாமல் பெயர் தெருவிளக்கின் ஒளியில் பெரிதாகிப் ‘பளிச்’சென்று தெரிந்தது. கீழே உரிமையாளர் என்ற சிறிய எழுத்துக்களுக்கு நேரே புதுமண்டபத்து மனிதருடைய பெயர் காணப்பட்டது. இரண்டு வாரங்கள் கிராமத்தில் இருந்துவிட்டுத் திரும்பி வருவதற்குள் இங்கே இத்தனை காரியங்கள் நடைபெற்றிருக்கின்றனவா? என்று மலைத்தான் அரவிந்தன். பருமாக்காரருடைய புலிமுகம் அடித்து கொல்வதற்கு வாயைப் பிளந்துகொண்டு வருகிறது போல் பெரிதாக அவன் கண்களுக்கு முன் தெரிந்தது.
(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்