மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 9
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 8. தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 3 தொடர்ச்சி
“அக்கா! இனிமேல் அண்ணனுக்குக் கை நேரே வராம போயிடுமா?” அழுகையின் விசும்பலோடு சிறிய ஆரஞ்சு சுளைகளைப் போன்ற உதடுகள் துடிக்க பூரணிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு இப்படிக் கேட்டாள் குழந்தை. அப்போது அகன்று மலர்ந்த அவள் குழந்தைமை தவழும் கண்களில் பயமும் கவலையும் தெரிந்தன.
“இல்லை கண்ணே! அண்ணனுக்குக் கை சீக்கிரமே நல்லாப் போயிடும்” என்று சொல்லி குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் பூரணி. பூக்களின் மென்மைகளையும் பன்னீரின் குளிர்ந்த மணத்தையும் கொண்டு செய்தது போன்ற உடம்பு குழந்தை மங்கையர்க்கரசிக்கு. குழந்தையின் உடலைத் தீண்டும் போதும், சிரிப்பைக் காணும்போதும் சின்னஞ்சிறு பூக்கண்களை அருகிலே பார்க்கும்போதும் வாழ்க்கையில் சத்தியத்துக்கு இன்னும் இடமிருக்கிறது என்கிற மாதிரி ஒரு தூய நம்பிக்கை உண்டாகிறது. அப்பா இருந்தால் கோயிலிலிருந்து வீடு திரும்புகிற நேரம் இது. மாலையில் தென்புறம் திருமங்கலம் சாலையில் நெடுந்தூரம் காலார நடையாகப் போய்விட்டுத் திரும்பும்போது, கோயிலில் முருகனையும் வணங்கிவிட்டு ஏழு ஏழரை மணி சுமாருக்கு வீடு திரும்புவார் அவர். இரவில் கன உணவாகச் சோறு சாப்பிடுவது அவருக்குப் பிடிக்காது. சோறு உண்டால் விரைவில் உறக்கம் வந்து விடுமென்று கோதுமை தோசை, இட்லி மாதிரி குறைந்த உணவாக சிறிது உண்பார். அதிக நேரம் உறக்கம் விழித்தும் படித்துக் கொண்டிருப்பார். அப்பாவின் பழக்கமே வீட்டில் எல்லாருக்கும் அமைந்து விட்டது.
பூரணி அடுப்பு மூட்டி இட்லிக் கொப்பரையை வைத்தாள். அந்த வீட்டில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு மூலையிலும் மறந்துவிடாமல், மறைத்து விடாமல், அப்பாவின் ஞாபகம் இருந்தது. பழக்கத்தில் உறைந்துவிட்ட உயிரின் உறவான நினைவுகளை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா? மனிதர்களைப் போல் அவர்களைப் பற்றிய நினைவுகளுமா விரைவில் அழிகின்றன. அப்படி அழியுமானால் பின்பு இந்த உலகத்தில் என்ன இருக்கிறது?
காலம் எதைத்தான் அழிக்காமல் நிலைக்கவிடப் போகிறது? நிற்காமல் ஓடுகிற சூரியனும், அவனைத் துரத்திக் கொண்டு ஒவ்வொன்றாய் பின் தொடரும் நாட்களும் உலகில் எதையோ ஓடி ஓடி தேய்த்துக் கொண்டிருக்கின்றனவே! அல்லது தேய்ந்து கொண்டிருக்கின்றனவே!
ஒரு தட்டில் நாலைந்து இட்லிகளை எடுத்துக் கொண்டு போய் சின்னத்தம்பி சம்பந்தனுக்கு அவன் படுத்துக் கொண்டிருந்த இடத்திலேயே எழுந்து உட்கார்ந்து சாப்பிடுமாறு கொடுத்துவிட்டு வந்தாள் பூரணி. திருநாவுக்கரசையும் குழந்தை மங்கையர்க்கரசியையும் கூப்பிட்டுச் சமையலறையில் தனக்குப் பக்கத்தில் உட்காரச் செய்து கொண்டு பரிமாறினாள். அவ்வளவு இளமையில் தாயின் முதிர்ச்சியும் அன்பின் கனிவும் அவள் எவ்வாறுதான் பெற்றாளோ? பெரிய மீன்கள் தம் குஞ்சுகளைக் கண் பார்வையிலேயே வளர்த்துப் பழக்கிப் பெரிதாக்குமாம். பூரணி தன் தம்பிகளையும் தங்கையையும், அன்பாலும் கனிவாலுமே வளர்த்தாள். கூடியவரை வீட்டையும், தன்னையும் தேடிவரும் துன்பங்களை அவர்கள் தெரிந்து கொள்ள விடுவதில்லை. அவள் மூத்த தம்பி திருநாவுக்கரசுதான் நினைவு தெரிந்த விவரமுள்ள பையன். அவனிடம் கூட வீட்டுத் துன்பங்களைச் சொல்ல விரும்புவதில்லை அவள்.
வீட்டுக்காரரிடம் ஒப்புக்கொண்டு வந்துவிட்டபடி மாத முடிவுக்குள் இந்த வீட்டைக் காலி செய்து கொடுத்தாக வேண்டும். திருப்பரங்குன்றம் கிராமமுமில்லை; நகரமுமில்லை. கிராமத்தின் தனிமையும் நகரத்தின் வசதிகளும் இணைந்த இடம் அது. சுற்று வட்டாரத்தில் சில ஆலைகளும் தொழிற்சாலைகளும், பள்ளிக் கூடங்களும், கல்லூரிகளும் இருந்த காரணத்தினால் வீட்டு நெருக்கடி இருக்கத்தான் செய்தது. மதுரை நகருக்குள் வாடகை கொடுக்க இயலாத மத்தியதரக் குடும்பங்களும், கூலிகளும், அமைதியான வாழ்வை முருகன் அருள் நிழலில் கழிக்க விரும்புபவர்களும் நெருங்கிக்கூடும் இடம் ஆகையால் அங்கும் வீட்டுப் பஞ்சம் அதிகமாகிவிட்டது. கிழக்குப் பக்கம் செம்மண் குன்றைத் தழுவினாற்போல் பிருமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் பொறியியல் தொழிற்கல்லூரி திடீரென்று ஊரையே பெரிதாக்கி விட்டதுபோல் தோன்றுகிறது.
வீட்டுக்காக அப்போதே போய் நாலு தெருவில் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாமென்று தோன்றியது பூரணிக்கு. இரவானாலும் அதிக நேரமாகிவிடவில்லை. ஊரிலும் தெருக்களிலும் கலகலப்பு இருந்தது. நாலு இடத்தில் நாலு தெரிந்த மனிதர்களிடம் சொல்லிவிட்டு வந்தால் காலியிருக்கிற வீடுகளைப் பற்றி ஏதாவது துப்புக் கிடைக்கும். ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு வரன் கிடைப்பது போல வாடகை வீடும் இன்றைய சமுதாயத்தில் எளிதாகக் கிடைத்துவிடாத ஒன்றாயிற்றே.
“அரசு! வீட்டைப் பார்த்துக்கொள். மங்கைக்குத் தூக்கம் வந்தால் படுக்கையை விரித்துத் தூங்கச் செய். நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன். ஒன்பது, ஒன்பதரை மணிக்குள் வந்துவிடுவேன். கதவைத் தாழ்போட்டுக் கொண்டு தூங்கி விடாதே” என்று திருநாவுக்கரசிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள் பூரணி.
பனி பரவத் தொடங்கியிருந்த அந்த முன்னிரவு நேரத்தில் மங்கிய நிலவொளியில் கீழ் சந்நிதித் தெருவில் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஓர் அழகு தென்பட்டது. வரிசையாக இரு புறமும் வீடுகள், விளக்கு ஒளி தெரியும் சன்னல்கள், பூக்களின் பலவித வாசனை, சந்தனம், ஊதுவத்தி மணம், மனிதர்களின் குரல்கள், வானொலி இசை, வாயரட்டைப் பேச்சுகள், மாட்டுக் கழுத்து மணி ஓசை, பிரபஞ்சம் என்ற முடிவில்லாப் புத்தகத்தின் முதற்பக்கம் போல் ஓர் எடுப்பு, ஒரு கம்பீரம், ஒரு கலை அந்த வீதியின் அமைப்பில் விளங்கியது. வீதி தொடங்கும் இடத்தில் நிலவில் குளித்தெழுந்தது போல் நீள நிமிர்ந்து தோன்றும் மலைசார்ந்த கோபுரம், கோபுரம் சார்ந்த குமரன் கோயில், கோயில் முகப்பாகிய அகன்ற மேடையை இழுத்துக் கொண்டு பாய்கிறார் போல் யாளிச் சிற்பங்களும், குதிரைகளும், கீழ்ப்புறமும் மேல்புறமும் பிரிந்து படரும் கொடிகள் போல் இரத வீதி.
கோபுரத்துக்கும் மேலே குன்றில் எட்டாத உயரத்தில் மின்விளக்கில் நீல ஒளி உமிழும் ‘ஓம்’ என்ற பெரிய எழுத்துகள் குன்றிலுள்ள ஒரு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அந்த ‘ஓம்’ இருளில் தனியாக அந்தரத்தில் தொங்குவது போல் பெரிதாய் உயர்ந்து எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். அந்த ‘ஓமை’ உற்று மேலே பார்த்துக் கொண்டே பூரணி சந்நிதித் தெருவில் நடந்தாள். இருளில் அந்த ‘ஓம்’ மின்விளக்கை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுக்காது அவளுக்கு. கீழும் மேலும் எங்கும் எதனோடும் தொடர்பின்றி உயர்ந்த வானவிதானத்தில் ‘ஓம்’ என்ற சக்தியே ஒளிப்பூவாய்ப் பூத்துத் திருப்பரங்குன்றம் முழுவதும் மணம் பரப்பி நிற்பது போல அழகாய்த் தோன்றும் அந்த ‘ஓம்’.
வீட்டு மொட்டை மாடியில் நின்று இதைப் பார்த்து மகிழ்வது அவளுக்கு வழக்கமான அனுபவம். இரத வீதிகளிலும், வெள்ளியங்கிரிச் சந்து, திருக்குளச் சந்து, முதலிய சந்துகளிலும் ஒண்டுக் குடித்தனத்துக்கு ஏற்ற சிறிய இடங்கள் இருந்தாலும் இருக்கலாம். சரவண பொய்கைக் கரையிலும் தொடர்வண்டி நிலையத்துக்குத் தென்கிழக்காகக் கிரி வீதியிலும் பெரிய ஒண்டுக் குடித்தன ஃச்டோர்கள் சில உண்டு. பகல் நேரத்தை விட்டு இரவில் அவள் புறப்பட்டதற்குக் காரணம் இருந்தது. பழகிய மனிதர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் அப்பாவின் துக்க சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகுமுன் சுற்றித் திரிவது அவமானமாகத் தோன்றியது. அவளுக்கு உடனடியாகப் பெரிய வீட்டைக் காலி செய்துவிட்டு ஒண்டுக் குடித்தனம் வர முயல்வது பற்றித் தெரிந்தவர்கள் தூண்டித் துருவிக் கேள்விகள் கேட்பார்கள். அதிகம் பேர் கண்களில் படாமல் இடம் விசாரிக்க அந்த நேரமே ஏற்றதென்று அவள் நினைத்தாள்.
தேரடியிலும், கோயில் வாயிலிலுள்ள கடைகளிலும் கூட்டமும், கலகலப்பும் இருந்தன. சந்நிதி முகப்பில் ஒரு கணம் நின்று வணங்கிவிட்டு கிழக்கே பெரிய இரத வீதியில் திரும்பினாள் பூரணி. இரவு மூன்று மணி வரை அரவம் குறையாத தெரு அது. தெருக்கோடியில் மேட்டில் இருந்த டூரிங் சினிமாக் கொட்டகைதான் அந்த மாதிரி ஆள் புழக்கத்திற்குக் காரணம்.
வெளியூரிலிருந்தெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள் என்றால் முருகனைச் சுற்றிக் குடியிருந்த உள்ளூர்க்காரர்கள் டூரிங் சினிமா கொட்டகையைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். திருக்குளத்து முதல் சந்தில் தன்னோடு படித்த கமலா என்ற பெண்ணின் வீடு இருப்பது அவளுக்கு நினைவு வந்தது. திரும்பியவுடன் முதல் வீடு கமலாவுடையது.
(தொடரும்)
Leave a Reply