அடிப்படை வசதி இல்லாத சுருளி அருவி – வைகை அனிசு
சுருளியாறு
அடிப்படை வசதி இல்லாத சுருளி அருவி
தேனி மாவட்டத்தில் அருவிகளும், அணைகளும் மிகுந்த மாவட்டமாகும். தேனி மாவட்டத்தில் வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி, சுருளி அருவி முதலான ஏராளமான அருவிகள் உள்ளன. இதில் மேற்குமலைத்தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் சுருளி அருவி பலவித மூலிகைகளுடன் கலந்து வருகிறது. மேலும் மூலிகைகள் கலந்து வரும் நீரில் நீராடுவதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வருகை புரிகின்றனர்.
சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. சுருளிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குறிப்பாகப் பெண்கள் அதிக அளவில் வருகை புரிந்து நீராடி வருகின்றனர். இவ்வாறு நீராடி மகிழும் பெண்கள் தங்கள் உடைகளை மாற்றுவதற்கு எந்த அடிப்படை வசதியும் செய்துதரப்படவில்லை என்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். மேலும் குடிநீர்த் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு அவை பேணப்படாமல் வெறும் காட்சிப்பொருள்களாக உள்ளன. சுருளி அருவியில் பெண்கள் குளிப்பதை மறைமுகமாக நின்றும் பெண்கள் உடைமாற்றும் இடங்களை சமூகப் பகைவர்கள் அருவியின் மேல்பக்கத்தில் இருந்து பார்த்து களிப்பதுடுன் அவற்றை மறைமுகமாகப் படமெடுப்பதுடன், தங்கள் அலைபேசியில் பதிவும் செய்து வருகின்றனர். இதனால் பல குடும்பப் பெண்களின் அந்தரங்கங்களைப் படங்கள் எடுத்து இணையத்தளத்தில் விற்பனை செய்யும் கும்பல் சுருளி அருவியை முற்றுகையிட்டுள்ளனர். மேலும் பெண்கள் தங்கள் இயற்கைஊறுகளைக் கழிப்பதற்குக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அந்தக் கழிப்பறைகள் எந்த விதப் பயன்பாடு இல்லாமல் உள்ளன.
சுருளி அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுருளி அருவியில் வனத்துறையில் பணிபுரியும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வனவர், முதலானோர் உள்ளனர். வனச் சுற்றுக்காவலர்கள் சுருளி அருவியைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளிடம் அடாவடியாக மிரட்டிப் பணம்பெறுகின்றனர். மேலும் அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் பெண்கள் உடைமாற்றுவதற்கு ஒவ்வொருவரிடமும் பத்து உரூபாய் வீதம் பெறுகின்றனர். பத்து உரூபாய் கொடுக்க இயலாதவர்கள் ஆங்காகங்கே மறைவிடங்களில் உடைகளை மாற்றுகின்றனர். ஆனால் இந்தப்பணத்தை வனத்துறை அதிகாரிகள் பங்கு போட்டுக்கொள்கின்றனர். இதற்காகவே ஒரு பெண் ஊழியரை நியமனம் செய்துள்ளனர். எனவே சுற்றுலாப் பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு பெண் காவலர்கள், ஆண் காவலர்களை நியமிக்கவேண்டும் எனவும் பெண்கள் உடைமாற்றும் அறை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகள் பணம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு செயல்படாமல் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
Leave a Reply