தனியார் பள்ளிப்பேருந்துகளில்

அதிக மாணவர்கள் ஏற்றிச்செல்வதால்

இடர்நேர்ச்சி ஏற்படும் கண்டம்(அபாயம்)

49overloadbus

  தேவதானப்பட்டிப் பகுதிகளில் தனியார் பள்ளிப்பேருந்துகளில் அளவுக்கதிமாக மாணவர்களை ஏற்றிச்செல்வதால் பேரிடர் நேர்ச்சி ஏற்படும்   கண்டம் உள்ளது.

  தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, வேல்நகர், தண்ணீர்ப்பந்தல் முதலான பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பெரியகுளத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

  தனியார்பள்ளிகளில் கும்பகோணம் இடர்நேர்ச்சி ஏற்பட்டபின்பும், சென்னையில் பள்ளியூர்திகள் இடர்நேர்ச்சிகளுக்கான பின்பும் அரசு சார்பில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதன் படி அந்தந்த வட்டாரப்போக்குவரத்து ஆய்வாளர்கள் வாகன ஆய்வு மேற்கொண்டு ஊர்திகளைச் சரிசெய்ய அரசு உத்தரவிட்டது. அரசு உத்தரவிட்டவுடன் பெயருக்காக வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு என்ற பெயரில் சில வாகனங்களை மட்டும் ஆய்வு செய்துவிட்டு அதன் பின்னர் விதிகளை மறந்துவிட்டனர்.

  இதனால் தனியார் பதின்நிலைப் பள்ளி நிருவாகம் ஒரு மூடுந்தில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அடைத்துக்கொண்டு செல்வதுபோன்று ஒவ்வொரு மூடுந்திலும் 30 முதல் 50க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிச்செல்கின்றனர். இதன் தொடர்பாகத் தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் முறையீடு செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  இதன் தொடர்பாகத் தேவதானப்பட்டியைச்சேர்ந்த பெற்றோர்கள் கூறும்போது பள்ளிமூடுந்துகளில் அரசு விதிமுறையை பின்பற்றாமல் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் கூட்டநெரிசலில் மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இதனால் உடனடியாக நிறுத்தும் போதும், வேகத்தடை, மேடு பள்ளங்களில் வாகனம் செல்லும்போதும் ஒரு மாணவனோடு மற்றொரு மாணவன் இடித்து மேலே விழும் நிகழ்வுகளும் உண்டு.

  இவை தவிர ஏறத்தாழ 20 அயிரைக்கோல்(கிலோ மீட்டர்) வரை மாணவர்கள் தங்கள் அதிகமான புத்தகங்களை தோளில் சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

  எனவே போக்குவரத்து ஆய்வாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள் போர்கால அடிப்படையில் தனியார் வாகனங்களை ஆய்விடவேண்டும் எனவும் விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீதும் பள்ளிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

vaigaianeesu_name03