அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன?

–  நேரடி அறிக்கை!

  அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்திச் சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியபோதும்…

  ஒருவார காலத்துக்குப்பின்னர் நூலிழை நம்பிக்கையில் சிலபல வாக்குறுதிகளை நம்பி கெடுவிதித்து தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்தபோதும்…

  தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணஅவை உறுப்பினர்களும் குதிகால் பிடரியில் அடிபட கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கும், அநுராதபுரம் சிறைச்சாலைக்கும், மட்டக்களப்பு சிறைச்சாலைக்கும் ஓடோடிச் சென்றார்கள். ஓட்டம் என்றால் அப்படியோர் ஓட்டம்! இவர்கள் பன்னாட்டு ஒலிம்பிக்கில், தடகளப் போட்டிப்பிரிவுகளில் பங்கெடுத்தால் நிச்சயம் பதக்கங்களை அள்ளிக்குவித்துத் தமிழினத்துக்கு மற்றுமொரு பெருமையைத் தேடித்தருவார்கள் என்பதில், ‘அவர்களுக்கு வாக்குபோட்ட ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும்’ எள்ளளவு தானும் ஐயம் கொள்ளவேண்டியதில்லை.

இனிச் செய்திக்கு வருவோம்.

  இவர்கள் சிறைச்சாலைகளுக்குள்ளே சென்று, அரசியல் கைதிகளை சந்தித்துப்பேசிவிட்டு வெளியே வந்து, சிறைச்சாலை முற்றத்தில் ஏலவே ஆயத்த நிலையிலுள்ள ஊடகவியலாளர்களிடம் பேட்டி கொடுக்கும்போது, உண்மையைத்தான் (உள்ளே நடந்ததைத் தான்) பேசுகின்றார்களா? என்றால், ‘இல்லை’ என்பதே உண்மை!

  உள்ளே அரசியல் கைதிகள், இவர்களிடம் வெளிப்படுத்தும் தமது கவலைகள், ஏக்கங்கள், வலிகள், இழப்புகள், கோபங்கள், ஆதங்கங்களை அதாவது கைதிகளின் ஆழ்மன உணர்வுகளை இவர்கள் ‘நியாயபூர்வமாக’ ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதேயில்லை. தமது விருப்பத்திற்கு (தாம் சிறைச்சாலைக்கு வந்ததுபற்றிய செய்தி வெளியாகவேண்டும் என்பதை மட்டுமே முழுக்க முழுக்க மனத்தில் வைத்துக்கொண்டு) கைதிகள் போசாதவற்றையெல்லாம் பேசியதாகத், தமது கற்பனைகளைக் கலந்துகட்டி ஊடகவியலாளர்களிடம் அவிழ்த்து விடுகின்றார்கள். 

  கைதிகளின் உணர்வுகளை வெளிப்படுத்தாமல், ‘ஊடக வெளிச்சத்தை நோக்கமாகக்கொண்ட இத்தகைய (வாய்ப்)பேச்சுகள், கைதிகளின் விடுதலைக்கு பலனளிக்குமா? அது யாருக்கு ஆதாயம் கொடுக்கும்? இதனால் என்ன நன்மை நடந்துவிடப்போகிறது? என்பது பற்றியெல்லாம் உங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றோம்.

  உண்மையில், சிறைச்சாலைக்குள்ளே செல்லும் இவர்கள், வெளியே வரும்போது இறுகி விகாரமடைந்த முகத்துடனேயே வருகிறார்கள். உள்ளே நடந்ததைச் சமாளித்துக்கொண்டு, சும்மா ஒப்புக்குச் சிரித்தவாறு முகத்தை வைத்துக்கொண்டு (வைகைப்புயல் பாணியில் எவ்வளவு நேரத்துக்குத்தான் அழுகையைக் கட்டுப்படுத்துவது போலவே நடிப்பது) ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள்.

அப்படி என்னதான் உள்ளே நடக்கிறது? கைதிகளிடமே கேட்டுத் தெரிந்து கொண்டோம். வாருங்கள்.  

  அதற்கு முன்னர் இந்த அரசியல் கைதிகள்பற்றியும், அவர்களின் அரசியல் அறிவு – தெளிவுநிலைபற்றியும் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர்கள் நாளிதழ்கள் முதல் புகழ்பெற்ற புத்தகங்கள் வரை ஒன்றையும் விட்டு வைக்காமல் வாசித்து அரசியலையும் – நாட்டு நடப்பையும் நன்கு உய்த்துணர்ந்து விளங்கி வைத்திருக்கிறார்கள். போதாக்குறைக்குச் சட்டப்புத்தகத்தையும் கரைத்துக்குடித்து அதன் ஒவ்வொரு பிரிவுக்கும் அப்படியொரு விளக்கம் தருகிறார்கள். அவர்களின் பெரும்பாலான நேரங்கள் வாசிப்பிலேயே செலவிடப்படுகின்றன.

  ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதியின் நடவடிக்கைகளைப் பின்தொடர்கின்றார்கள். அவர்களது பத்திரிகை அறிக்கைகள் – செய்திகள் ஒவ்வொன்றையும் சேகரித்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும்போது நாக்குப்பிடுங்க நாலு கேள்வி கேட்பதற்காக!’

  ஆதலால், தம்மைச் சந்திக்கவரும் ஒவ்வோர் அரசியல்வாதியிடமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அவர்களைக் கேள்விகளால் பின்னிப்பெடலெடுத்து, நோண்டி நுங்கெடுத்து, கிண்டிக் கிழங்கெடுத்து, காய்ச்சி வறுத்தெடுத்தே அனுப்பி வைக்கின்றார்கள்.

  கடந்த 17.11.2015 அன்று கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராசா, ஈ.சரவணபவன், வன்னி நா.உ.கள் சிவசக்தி ஆனந்தன், சார்லசு நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர், பத்து நாட்களாகத் தொடர்ந்த அரசியல் கைதிகளின் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நீராகாரம் வழங்கி முடிவுறுத்துவதற்காக அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தபோது, அவர்கள் மாவை.சேனாதிராசாவிடம் முதல் கேள்வியை இப்படி தொடுத்தார்கள். ‘நீங்கள் இந்த அரசாங்கத்தை இப்பவும் நம்புகிறீர்களா?’ என்று.

  சற்றும் எதிர்பாராத இந்தக்கேள்வியால் நிலைகுலைந்துபோன மாவை.சேனாதிராசா, அந்தக்கேள்விக்கு ‘நாங்க நம்புறம் எண்டும் இல்லநம்பாமல் எண்டும் இல்ல…’ என்று, இழுத்து இழுத்து அப்பிடியே தந்தி அறுந்த வீணைபோலச் சுருதியைக் குறைத்துக்கொண்டு வந்தார்.

  அப்போது குறுக்கிட்ட மற்றுமொரு அரசியல் கைதி: ‘இந்தா ஐயா! நீங்க இந்த அரசாங்கத்தை நூறு வீதம் நம்புகிறதா கொடுத்திருக்கிற பேட்டி’ என்று தினக்குரல் நாளிதழ் ஒன்றைத் தனது தலைக்கு மேலே தூக்கிப்பிடித்துக் காட்டினார். அந்தப் பத்திரிகையில் அவர்கள் சுட்டிக்காட்டிய தொடர்புடைய செய்தியோடு மாவை.சேனாதிராசா முகம் முழுக்கவும் சிரித்துக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது உண்மையில் கைதிகளுக்கு முன்னால், மாவை.சேனாதிராசாவுக்கு முகம் எல்லாம் இருண்டு கறுத்துப்போய் வீங்கி விகாரம் எடுத்து விட்டது. (மற்ற நா.உ.கள் கடைக்கண்ணால் மாவையைப் பார்த்தவாறு கொடுக்குக்குள் சிரித்தவாறு நின்றுகொண்டிருந்தனர்.)

  ஒருவாறு விழித்துக் கொண்ட மாவை.சேனாதிராசா, ‘தம்பியெல்லே! நானும் அப்பொழுது உங்களை மாதிரித்தான், போராட்டம் எல்லாம் நடாத்தி… சிறைக்குகு எல்லாம் போய்…’ என்று, தனது ஐம்பது வருடகால அரசியல் வாழ்க்கையைத் தேய்ஞ்சு போன இசைத்தட்டுமாதிரி சொல்லத்தொடக்க, ‘செத்தமடா சாமி, இதைவிட உண்ணாவிரதமிருந்து செத்திருக்கலாம்’ என்று முணுமுணுத்தவாறு அரசியல் கைதிகள் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு கொடுக்குக்குள் சிரிக்கத் தொடங்கி விட்டனர்.

கந்தறுந்து நிற்கிறம். இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை! 

  அப்போது அரசியல் கைதி ஒருவர், ‘இதெல்லாம் எங்களுக்குத் தெரியும் ஐயா… தெரியும். உங்களை விட நாங்கள் நிறையவே அநுபவித்துவிட்டோம். எங்களுடைய வழக்குக்காக எங்களிடம் இருந்த நகை நட்டு, காணி பூமி சொத்து துரவு வீடு எல்லாவற்றையும் விற்று, கெட்டு குட்டிச்சுவராகி கந்தறுந்து போய் நிற்கிறோம். இனி எங்களுடைய தென்று விற்பதற்குச் சொத்தோ… வழக்கை நடத்துவதற்குப் பணமோ… இல்லை. எல்லாவற்றையும் இழந்து ஏமாந்துபோய் நிற்கிறோம்! முன்பொருமுறை எங்களைச் சந்தித்துப் பேச நீங்கள் வரும்போது, வழக்கை நடத்துவதற்கு வசதியில்லாத அரசியல் கைதிகளின் செலவுகளைக் கூட்டமைப்பு பொறுப்பெடுத்து நடத்தும் என்று சொல்லியிருந்தீர்கள்? இத்தனை நாளைக்கு எத்தனைக் கைதிகளின் வழக்குச்செலவைப் பொறுப்பெடுத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்க,

  மாவை.சேனாதிராசா, உடனே முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு, “என்னப்பன் நானா? என்ன சொல்லுகிறீர்கள்? நான் அப்படிச்சொன்னேனா?” என்று எதுவுமே நினைவில் இல்லாதவர்போலத் திருப்பிக்கேட்டார். “நீங்கள் சொன்னீர்கள் ஐயா, அப்ப என்ன சும்மாச்சொல்ல நாங்கள் என்ன கிறுக்கா?” என்று இன்னுமொரு அரசியல் கைதி உருக்கிப்பேச, மாவை.சேனாதிராசா அப்படியே ‘கப்சிப்’ ஆகிவிட்டார்.

ஒருவருக்கு ஒருவர் என்று தத்தெடுத்திருந்தால் ???

  “கூட்டமைப்பில கிட்டத்தட்ட 13-16 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கிறீர்கள். இப்பொழுதும் இருக்கிறீர்கள்.. வடக்கு கிழக்கு மாகாண அவையில் 40 பேர் வரையில் இருக்கிறீர்கள்.. நீங்கள் அத்தனைபேரும் ஆளுக்கு ஒருத்தரைத் தத்தெடுத்து வழக்கை நடத்தியிருந்தால், ஒரு வருடத்துக்கு 50 பேர் என்று பார்த்தால்கூட, உள்ளே இருக்கிற அத்தனை அரசியல் கைதிகளும் இன்றைக்கு விடுதலையாகி வெளியே வந்திருப்போம்.” என்று அரசியல் கைதி ஒருவர் கூறியபோது, ‘தமிழ் – தமிழர் – போராளிகள் – முள்ளிவாய்க்கால் – தியாகங்கள் – மாவீரர்கள்’ இந்தச் சொல்லாட்சிகளை வரிக்குவரி பயன்படுத்தும் அத்தனை அரசியல்வாணர்களும் உடுத்தியிருக்கும் ‘போலித்தமிழ் தேசிய முகத்திரை’ உரிந்து கிழிந்து தொங்கத்தொடங்கி விட்டதைக் காணமுடிந்தது.

 

விக்கினேசுவரனும் – இந்துமாமன்றமும் துணை!

 

 எங்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கிற அனைத்துக் குடிமை, சமுக மனித உரிமை, சட்ட அமைப்புகளுக்கும் நாங்கள் கடமைபட்டிருக்கிறோம். விக்கினேசுவரன் ஐயாவுடன் தொடர்பிலிருக்கிறோம். இந்து மாமன்றத்துடனும் பேசியிருக்கிறோம். தயவுசெய்து உண்மையாய் இருக்கப்பாருங்கள். திசம்பர்-10 அரசுக்குக் கெடு விதித்திருக்கிறோம். அதற்குள் அரசாங்கத்தோட பேசி நல்ல தீர்வைப் பெற்றுத்தரப் பாருங்கள். இந்த அரசாங்கத்துக்குள் கையை நனைத்திருக்கிற உங்களால் உறுதியாய் இது முடியும். முடியா விட்டால் இந்த அரசாங்கத்தைத் தாங்கிப்பிடிக்காமல் உதறித்தள்ளி விட்டு வெளியில் வந்து உலகத்துக்கு உண்மையைச் சொல்லப்பாருங்கள் இதை நீங்கள் செய்யத்தவறினால்… வடக்கு கிழக்கு மட்டுமில்ல, மலையகம் என்று நாடு முழுக்கவும் நாங்கள் போராட்டங்கள நடத்த வேண்டிவரும்” என்று அரசியல் கைதிகள் முன்னெச்சரிக்கை செய்தனர்.

 

ஓம்… ஓம்… நாங்கள் உறுதியாய்ப் பேசுவோம். பேசி ஒரு முடிவு காணுவோம். எங்களை நம்புங்கள்” என்று உறுதியளித்த பின்னர், மாவை.சேனாதிராசா முதலாவது ஆளாகக், பால் பைகளை வழங்கி உண்ணா நோன்பை முடிவுறுத்தி வைத்துவிட்டுப் புறப்படுவதற்குப் பத்தடி தூரம் நடந்திருப்பார். அப்போது அரசியல் கைதிகள் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து ‘உங்களை நாங்கள் நம்பத்தயாரில்லை.. தயவுசெய்து நீங்களாவது முதலமைச்சர் ஐயாவுடன் சேர்ந்து எங்களது விடுதலைக்காக உண்மையாக உழைக்கப்பாருங்கள்’ என்று ஒட்டுமொத்தமாகத் தெரிவித்தனர்.

 

 தாம் கொண்டு சென்ற உணவுப்பொருட்களை ஒவ்வொரு நா.உ.களும் கையளித்த பின்னர் புறப்பட ஆயத்தமாகிய போது, அப்போது, சார்லசு நிர்மலநாதன் நா.உ., அரசியல் கைதிகளிடம், “சம்பந்தன் ஐயா, சேனாதி ஐயா, சுமந்திரன் ஐயா இந்த மூவரும் இருக்கும் வரை ஓரடிகூட முன்னோக்கி நகர்த்த முடியாது. இந்த இனத்தின் விடுதலை என்பது சாத்தியமே இல்லை” என்று அரசியல் கைதிகளின் கையை இறுகப்பற்றிக்கொண்டு உரைத்தார். அரசியல் கைதிகள் அவரது கருத்தை எவ்வித எதிர்வினைகளும் இன்றி ஏற்றுக்கொண்டு தலையசைத்தனர்.

செல்வம் அடைக்கலநாதனை தனித்துச் சந்திக்க விரும்புகிறோம்.

 இந்த நான்கு நா.உ.களும் திரும்பிய பின்னர் நான்கு மணியளவில் செல்வம் அடைக்கலநாதன் நா.உ., அநுராதபுரம் சிறைச்சாலைக்கு வந்தார். அப்போது அரசியல் கைதிகள் அவரிடம்,

  “நீங்கள் பாராளுமன்றத் தேர்தலில் வென்று அரசாங்கத்திடம் பதவி எடுத்த பின்னர் போகிற இடமெல்லாம், மாலை பொன்னாடை என்று வரவேற்புப் பெறுவதை,- மரியாதை தூக்கலாக இருப்பதை – அன்றாடம் செய்தித்தாளில் அடிக்கடி பார்க்கிறோம். நாங்களும் உங்களைச் சிறப்பாகக் கவனித்து விருந்தோம்பி அனுப்ப ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் அன்றைக்குப் பாதிரியார் விக்டர் சோசை அவர்களோடு வந்தீர்கள்.. இன்றைக்குப் பாதிரியார் முரளியுடன் வந்திருக்கிறீர்கள். தனியாக வந்தீர்கள் என்றால் நாங்களும் பிரமாண்டமாய் கவனித்து அனுப்புவோம் அல்லவா?” என்று கூற, செல்வம் அடைக்கலநாதன் நா.உ.க்கு வயிற்றுக்கும் – தொண்டைக்கும் இடையில் இனம் புரியாத ஏதோ ஒன்று உருளுவது போல உணர்வு இருந்ததை அவரது கண்களைப் பார்த்து தெரிந்துகொள்ள முடிந்தது.

  தான் அதிகம் கதைக்காமல் பாதிரியார் முரளி அவர்களை அதிகநேரம் கதைக்க விட்டுவிட்டு அமைதியாக இருந்த செல்வம் நா.உ., நிலைமையை விளங்கிக்கொண்டு சிறிது நேரத்துக்குப்பின்னர் பாதிரியாரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டுச்சென்று விட்டார்.

  அரசியல் கைதிகளின் ‘கவலை, கண்ணீர், ஏக்கம், வலி, குறைகள், எதிர்பார்ப்புகள், தேவைகள்’ என்று கொடுந்துயரம் நிறைந்த உண்மை வாழ்க்கையை ‘நியாயபூர்வமாக’ வெளிஉலகத்துக்கு இவர்கள், ‘போலி இல்லாமல் – பசப்பு இல்லாமல் – ஏமாற்று இல்லாமல், தன்னாதாய(சுயஇலாப) நோக்கங்கள் இல்லாமல்’ வெளிப்படுத்தினால் மாத்திரமே நீதி கிடைக்கும் – வெல்லும் !!!

படத்தை அழுத்திப் பெரிதாகக் காண்க.