eezham massacre01

  இனப்படுகொலை தொடர்பான உசாவல் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் இந்தியா வரும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்  பெரிசு, தில்லி வர இடம்தரக்கூடாது என்று பாமக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

   Ramadoss01இலங்கையில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலை செய்த இராசபக்சேவும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

   இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஆண்டு ஆகசுட்டு மாதம் நேரில் விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் அவரது இறுதி அறிக்கையை வரும் மார்ச்சு 26 அன்று தேதி ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அளிக்க உள்ளார் என அறிவிக்கப் பட்டிருக்கிறது.

   மனித உரிமை ஆணையத்தின் 25 ஆவது கூட்டம் வரும் மார்ச்சு 3 அன்று தொடங்கி 28 ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்று,  அங்குக் காணப்படும் தற்போதைய சூழல்கள் குறித்து நவநீதம் அளிக்கும் அறிக்கை குறித்து 2 நாட்கள் வாதம் நடத்தப்பட விருக்கிறது.

   இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து நேர்மையான உசாவல் நடத்தும்படி அந்நாட்டுக்கு மனித உரிமை ஆணையம் 2 முறை ஆணையிட்ட போதிலும் இன்று வரை எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை.  ஐ.நா.வில் இலங்கை இனப்படுகொலைகள் பற்றி  உசாவல் நடத்தக்கோரி ஏற்கனவே 2 முறை தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்கா, இந்த முறை இலங்கை மீது  பன்னாட்டுப் போர்க்குற்ற  உசாவல் கோரி தீர்மானம் கொண்டு வரப் போவதாகத் தெரிகிறது. எனவே, ஏற்கெனவே எச்சரித்தவாறு இலங்கை மீது கட்டுப்பாடற்ற பன்னாட்டு போர்க்குற்ற  உசாவல் நடத்துவது குறித்து மனித உரிமை ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதனால் கலக்கமடைந்துள்ள இலங்கை அரசு, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

   அதன் ஒருகட்டமாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரிசு, வரும் 28 அன்று இந்தியா வருவதாகG.L.Peris01 அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் பிரதமர் மன்மோகன், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்சித், எதிர்க்கட்சித்தலைவர் சுசுமா சுவராசு ஆகியோரைச் சந்திக்கும் அவர், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்வார் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தூதரகங்கள் இலங்கையில் இல்லாத நிலையில், தில்லியில் உள்ள அந்த நாடுகளின் தூதர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட பெரிசு திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்தியத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைக்குத் தண்டனையும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியும் பெற்றுத்தர வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது. அவ்வாறு இருக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்குடன், மற்ற நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்காக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரிசு தில்லி வருவதை ஏற்கக் கூடாது. எனவே, பெரிசு இந்தியா வருவதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமின்றி,  இலங்கை மீது  பன்னாட்டுப் போர்க்குற்ற  உசாவல் நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே கொண்டு வருவதுடன், அதை வெற்றி பெறச் செய்வதற்கான முயற்சிகளையும் இப்போதே தொடங்க வேண்டும் என்று இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

U.N.O.01