உயர்நீதிமன்றத்தில் தமிழ் – காலவரையற்ற பட்டினிப் போராட்டம்
உயர்நீதிமன்றத்தில் தமிழ் – காலவரையற்ற பட்டினிப் போராட்டம்
வணக்கம். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி 2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனமாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு பலமுறை வலியுறுத்தியும் இன்று வரை தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்தியா விடுதலையடைந்து ஒன்றரை ஆண்டுகளில் இராசசுதான் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டது. தொடர்ந்து உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி ஆக்கப்பட்டது.
2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனமாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்பு 2015இல் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழு உயர்நீதிமன்ற மொழியாக, அந்தந்த மாநில மொழிகளை ஆக்குவதற்கு நீதித்துறையிடம் ஆலோசனை கேட்கத் தேவையில்லை எனத் தீர்மானித்த பின்னரும், உச்சநீதிமன்ற மறுப்பைக் காரணம் காட்டி நடுவண் அரசு நமது மொழி உரிமையை மறுத்து வருகிறது.
மதுரையை மையப்படுத்திப் பல முறை வழக்கறிஞர்கள் போராடி வந்தனர். தில்லியில் இதே கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் போராட்டம் நடத்தி வழக்கறிஞர் கு.ஞா.பகவத்சிங்கு முதலானோர் கைது செய்யப்பட்டுச் சிறை சென்றனர். இயக்கங்களின் பங்களிப்போடு உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுக் தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. வணிகர் சங்கப் பேரவை சார்பில் 2016 சனவரி 1 அன்று ஒரு நாள் மதுரையில் அடையாளப் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பில் மதுரையில் 2017 கடந்த மார்ச்சு மாதம் ஒரு நாள் மதுரையில் அடையாளப் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உத்தரவு பெற்று காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்த உள்ளோம். இக் கோரிக்கையில் உடன்பாடுள்ளவர்கள் ஆடி 11/சூலை 27 முதல் – ஆடி 15/31ஆம் நாளுக்குள் போராட்டக் களத்திற்கு வருகை தந்து தங்கள் ஆதரவை நேரில் வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
0000000000000000000000000000000000000000000000000000000000000000000
ஆடி 11, 2048 / சூலை – 27, 2017 மதுரை, காளவாசல்,
காலை 9 மணி, முதல்
காலவரையற்ற
பட்டினிப்_போராட்டத்தில்_பங்கேற்போர்:
வழக்கறிஞர் கு.ஞா.பகவத்சிங்கு,
மூத்த வழக்கறிஞர் வே.முருகன்,
வழக்கறிஞர் வேல்முருகன்,
வழக்கறிஞர் எழிலரசு,
வழக்கறிஞர் திசையேந்திரன்,
வழக்கறிஞர் செல்வகுமார்,
மெய்யப்பன்,
முத்துப்பாண்டி,
மதுக்கூர் மொய்தீன்
0000000000000000000000000000000000000000000000000000000000000000000
இந்திய அரசே! உச்சநீதிமன்றமே!
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவதற்கான 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்திற்கு உடனே குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றுக் கொடு! என வலியுறுத்துவோம். வாரீர்!
தமிழ் மொழி உரிமைக்காக – சனநாயக உரிமைக்காகப் போராடும் முற்போக்கு, சனநாயக அமைப்புகளின் தலைவர்களே! தோழர்களே! ஆர்வலர்களே! வாரீர்!
தமிழ்நாட்டின் நீதித் துறையினரே!
வழக்கறிஞர் பெருமக்களே! வாரீர்!
மாணவர்களே! இளைஞர்களே!
பங்கேற்பீர்! போராட்டத்திற்குத் துணை நிற்பீர்!
நமது மொழி! நமது உரிமை!
வாருங்கள் தோழர்களே!
போராட்டத்தைப் பலப்படுத்துவோம்!
போராட்டத்திற்குத் துணை நிற்போம்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன்,
ஒருங்கிணைப்பாளர்,
உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம்
பேச: 9443184051!
தனிப்பெருமதிப்பிற்குரிய போராளிகளுக்கு நேச வணக்கம்!
தமிழ்ப் பற்று மிகுந்த குடிமகன் எனும் முறையில் சொல்கிறேன், இந்தப் போராட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை! தமிழ் மக்களைக் கிள்ளுக்கீரையாக நினைப்பவர்களின் ஆட்சியில், தமிழர்களின் எதிர்காலம், வாழ்வு, மொழி, பண்பாடு, வரலாறு, தனித்தன்மை என அனைத்தையும் அழிப்பதையே குறிக்கோளாய்க் கொண்ட ஆட்சியாளர்களிடத்தில் இப்படி நம்மை நாமே வருத்திக் கொள்ளும் போராட்டங்கள் மூலமாக எதையும் வென்றெடுக்க முடியாது என்பதே என் திட்டவட்டமான கருத்து.
தமிழ் மக்கள் என்றில்லாமல் பொதுவாகவே, இந்த நாட்டையே வெளிநாட்டவருக்குக் கூறு போட்டு விற்கத் துடிப்பவர்கள் அரியணையில் அமர்ந்திருக்கும் வேளையில், நாட்டு மக்களிடம் கிஞ்சித்தும் ஈகையோ இரக்கமோ இல்லாத அவர்கள் நாம் பட்டினி கிடப்பது கண்டு மனமிரங்கி நம் கோரிக்கையை நிறைவேற்றி வைத்து விடுவார்கள் என எதிர்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதே அன்றி வேறில்லை. இத்தகைய போராட்டங்கள் குமுகாயத்தின் (சமுதாயத்தின்) மீது அக்கறையுள்ள உண்மைப் போராளிகளையும் இந்த மக்கள் இழப்பதற்குத்தான் வழி செய்யுமேயன்றி வேறெந்தப் பலனும் இதனால் கிட்டப் போவதில்லை.
எனவே, அருள் கூர்ந்து போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறும், இனியாவது தமிழர் போராட்டங்கள் தமிழர்களை வருத்துவதாக இல்லாமல் எதிராளிகளைப் பணிய வைப்பதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறும் பணிவன்புடன் வேண்டுகிறேன்!