செயலலிதா02 ; seyalilatha-jeyalalitha02

எமனுலகு சென்றார் புரட்சித்தலைவி

  புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, காவிரி தந்த கலைச்செல்வி,  எனப் பலவகையிலும், சிறப்பாக மக்களால் அம்மா என்றும் அழைக்கப்பெற்ற தமிழக முதல்வர் செ.செயலலிலதா காலமானார்(கார்த்திகை 20, 2047 / திசம்பர் 05, 2016 இரவு 11.30 மணி)

  வெற்றிகரமான தலைவியின் இறப்பால்,   இந்திய அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும்  திறமை, துணிவு, தனித்துவம் மிக்க தலைவியை இழந்து தமிழ்நாடு தவிக்கின்றது என்றும்  வலிமை மிக்க தலைவி யின் இழப்பு  ஈடு செய்ய முடியாதது என்றும் பல வகையிலும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  மக்கள் முதல்வர் செயலலிதா, கடந்த  புரட்டாசி 06 / செட்டம்பர் 22 ஆம் நாள் காய்ச்சல், நீர்ச்சத்து குறைவு காரணமாகச் சென்னையிலுள்ள அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்;  இவரது உடல்நிலை குறித்துச் சரியான தகவல் தரப்படவில்லை. எனினும் வெளிநாட்டு மருத்துவர்களையும் வரவழைத்து நல்ல மருத்துவம் அளிக்கப்பட்டது- உடல்நலம் தேறிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எமனிடமிருந்து தன் கணவர் உயிரைச் சாவிததிரி என்பவர் மீட்டதாகப் புராணக் கதை கூறும்.   அதேபோல்,  அவரின் உயிர்த்தோழி சசிகலா மருத்துவக் குழுவினர் மூலம் 75 நாள்கள் போராடியும் பண்டுவம் பயனின்றிப் பர உலகம் சென்றார்.

 தன் முந்தையக் கொள்கையை மாற்றிக்கொண்டு ஈழத்தில் நடைபெற்ற தமிழீழ மக்களின்படுகொலைகளுக்காகக் கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழீழம் தனியரசாய் ஏற்கப்படவேண்டும் என்பதிலும் உறுதியாக நின்றார். இராசீவு கொலைவழக்கில்  சிக்கவைக்கப்பெற்ற அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதிலும் முயற்சிகள் மேற்கொண்டார். இதனா்   உலகத்தமிழர்களின் உள்ளங்களில் குடி கொண்டார். எனவே, இவரது இழப்பு உலகத்தமிழர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.

  தங்க மங்கை, கலைமாமணி., நடிகையாக இருந்து அரசியல் தலைவியாக மாறிய தகைமையாளர்  செ.செயலலிதா ( தை 22, தி.பி.1979 /  4 பிப்ரவரி 1948 –  கார்த்திகை 20 , தி.பி. 2047 /5 டிசம்பர் 2016) பற்றி  அறிய விக்கிபீடியாவைக் காணலாம்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE

  முதல்வர் செ.செயலிதா என்னும் கோமளவல்லி செயராம் மறைவிற்கு அகரமுதல இதழும் தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியனவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றன.

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 50)

 அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo