பா.ம.க.மாநாடு03 : paa.ma.ka.maanadu03 பா.ம.க.மாநாடு0 2 : paa.ma.ka.maanadu02 பா.ம.க.மாநாடு01 : 122_anbumanitalk_gnana

ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை

ஐந்து ஆண்டுகளில் செய்வேன்! – அன்புமணி உறுதிமொழி!

  “ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை – எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் – ஐந்து ஆண்டுகளில் செய்து முடிப்பேன்” என்று அன்புமணி இராமதாசு கூறினார்.

  சென்னை வண்டலூரில்  மாசி 15, 2047 / பிப்பிரவரி 27 ஆம் நாள் அன்று நடைபெற்ற பா.ம.க மாநில மாநாட்டில் மக்களவை உறுப்பினரும், பா.ம.க முதல்வர் வேட்பாளருமான அன்புமணி இராமதாசு பேசியதாவது:

  “இது வரலாறு படைக்கின்ற மாநாடு. இதுவரை தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் இவ்வளவு கூட்டத்தைக் கூட்டியது கிடையாது. இதுதான் முதல் முறை.

  இங்கே நானும் சிரமப்பட்டுப் பார்க்கிறேன், கூட்டத்தில் வெள்ளை முடியுடன் கூடிய இளைஞர்களைக் காண முடியவில்லை. மேடையில் சிலர் இருக்கிறார்கள். மிகுதியான இளைஞர்கள் உள்ள ஒரே கட்சி பா.ம.க-தான். மற்ற கட்சிகளுக்கு அறைகூவல் விடுகிறேன். இவ்வளவு கூட்டத்தைக் கூட்டுங்கள் பார்க்கலாம்!

  மற்ற கட்சிகள் முடிந்த கட்சிகள். முடிந்துவிட்ட கட்சிகள். பா.ம.க-தான் வளர்ந்த கட்சி. தமிழகத்தில் மாற்றம் வேண்டும்; புதுமை வேண்டும் என நம்பிக்கையோடு கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். தி.மு.க வேண்டா! அ.தி.மு.க வேண்டா! பா.ம.க வேண்டும்! அன்புமணிக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.

  ஐம்பது ஆண்டுகள் தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். அவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை அன்புமணி ஐந்து ஆண்டுகளில் செய்து முடிப்பேன்.

  அடுத்த ஐம்பது ஆண்டுக் காலத்துக்கும், அடுத்த தலைமுறைக்கும் நான் திட்டமிடுவேன்! எங்களால் முடியும்! இன்னும் சொல்லப் போனால் எங்களால் மட்டும்தான் முடியும்! இதை ஆணவத்தில் பேசவில்லை. நம்பிக்கையில் பேசுகிறேன்!

  காந்தி சொன்னவற்றை மறக்க முடியாது. “முதலில் அவர்கள் உங்களைப் புறக்கணிப்பார்கள். அடுத்து உங்களை ஏளனம் செய்வார்கள். அடுத்து உங்களைக் கடுமையாக எதிர்ப்பார்கள். இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று காந்தி சொன்னதை மறக்க முடியாது.

ஏன் ஆட்சி மாற்றம்?

  இதுவரை தமிழ்நாட்டில் வேறு வழி இல்லை; மாற்றுக்கட்சி இல்லை. ஒரு பக்கம் பழூஉ (சாத்தான்), மறுபக்கம் ஆழ்கடல் என்று மாறி மாறி வாக்களித்தார்கள். முதல் முறையாக ஐம்பது ஆண்டுகாலமாக வராத ஒரு மாற்றம் வந்திருக்கிறது.

  இப்பொழுது மக்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஒரு பக்கம் பழூஉ (சாத்தான்), மற்றொரு பக்கம் ஆழ்கடல், இருவருக்கும் நடுவில் மருத்துவர் என்கிற வாய்ப்பு இருக்கிறது.

  எனக்குப் பதவியில் விருப்பம் கிடையாது. ௩௫ (35) அகவையில் (வயதில்) பதவிகளைப் பார்த்து விட்டேன். தமிழகம் முன்னேற வேண்டும்! இஃது என் கனவு! இந்தியாவில் பெரிய மாநிலங்களில் தமிழகம் 21ஆவது இடத்தில் இருக்கிறது. வெட்கக்கேடு! மக்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  தமிழகத்தில் பா.ம.க.-வால் கண்டிப்பாக மாற்றம் வரும். தமிழக மக்களே! நீங்கள் நல்ல முடிவெடுங்கள். தி.மு.க.-வும், அ.தி.மு.க.

-வும் ஆண்டு அழித்தது போதும்!

  தமிழகத்தில் ஒரு கோடியே தொண்ணூற்று எழுநூறாயிரம்(1,97,00,000) குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் எல்லோரும் பாதிக்கப்பட்ட பொருள் ஒன்று இருக்கிறது. ஒரு தீங்கால் அத்தனைக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதைத் தமிழத்தின் முதல் சிக்கலாகக் கருதுகிறேன்.

  இன்று தமிழகத்தின் முதன்மைச் சிக்கல் மதுச் சிக்கல். ஒரு கோடியே தொண்ணூற்று எழுநூறாயிரம் குடும்பங்களில் பாதிக்கப்படாத குடும்பமே கிடையாது. தாத்தா, அப்பா, பிள்ளை, பேரன், மாமன், மைத்துனன் என்று ஒருவராவது பாதிக்கப்பட்டுள்ளனர்.

  நிறைய மது விற்பனை நடப்பது, நிறையக் கைம்பெண்கள் (விதவைகள்) இருப்பது, நிறைய சாலை நேர்ச்சிகள் (விபத்துகள்) நிகழ்வது, நிறைய தற்கொலைகள் நடப்பது தமிழகத்தில்தான்!

  உலகில் எந்த அரசும் மதுவைத் திணிப்பதில்லை. ஆனால், தமிழகத்தில் அ.தி.மு.க மதுவைத் திணிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் இருநூறாயிரம்(இரண்டு இலட்சம்) பேர் மதுவால் இறக்கிறார்கள். நான்கு அகவைக்(வயது) குழந்தை, பெண்கள், மாணவர்கள் குடிக்கத் தொடங்கி விட்டார்கள். இதே நிலை நீடித்தால் அடுத்த தலைமுறை இல்லாமல் போய்விடும்.

  நான் மருத்துவர் என்பதால் அந்தப் பாதிப்பு என்ன எனத் தெரியும். அதனால்தான் இந்த மது எனும் கொடியவனை ஒழிக்க வேண்டும் என நினைக்கும் ஒரே கட்சி பா.ம.க.-தான். இந்த மதுவைக் கொடுத்த கட்சி தி.மு.க.

  தி.மு.க.-வின் முன்னோடிகள் பெரியாரும், அண்ணாவும் மதுவை எதிர்த்தார்கள். காமராசர், இராசாசி, ஓமந்தூரார் ஆகியோரும் மதுவை எதிர்த்தனர். அண்ணா மதுவை எதிர்த்தார். “தொழுநோயாளியின் கையில் கிடைக்கும் வெண்ணெயைப் போன்றது மதுவால் வரும் வருமானம்” என்றார். ஆனால், கருணாநிதியும் செயலலிதாவும் மதுவைத் திணிக்கிறார்கள்.

தீர்வு:

– முதல் நாள் முதல் கையெழுத்து, பூரண மதுவிலக்கு!

– தமிழ்நாடு மாநில வணிகக் கழகப் (TASMAC) பணியாளர்களுக்கு மதிப்பு மிக்க மாற்றுப் பணி!

– கைம்பெண்கள் (விதவைகள்) மறுவாழ்வுக்குச் சிறந்த திட்டங்கள்!

– மது அடிமைகளை மீட்க மதுபோதை மீட்பு மையம்!

– கள்ளச் சாராயத்தை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை!

– சாராய ஒழிப்பில் எளியோருக்கும் பங்கு!

‘முதல் நாள் முதல் கையெழுத்து – பூரண மதுவிலக்கு’. இதை யார் யாரோ படி (copy) எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கையெழுத்துக்காகக் கோடிக்கணக்கான பெண்கள், குடும்பங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

  எப்பொழுது மதுவிலக்கு வரும் என இருக்கிறார்கள். இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருங்கள்! நான் முதல் கையெழுத்துப் போடுவேன்!

  மது என்பது நல்வாழ்வுச் சிக்கல் மட்டும் இல்லை; குமுக (சமூக), முன்னேற்ற, பொருளியல், வளர்ச்சிச் சிக்கல். அதனால்தான் இந்த மதுவை ஒழிக்க வேண்டும்; அழிக்க வேண்டும்!

  மதுவை ஒழித்தால் கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்று சிலர் சொல்கிறார்கள். தமிழக அமைச்சர்கள் சட்டமன்றத்தில் கூடச் சொல்கிறார்கள்.

  பா.ம.க ஆட்சியில் பூரண மதுவிலக்குக் கையெழுத்துப் போடுவதோடு மட்டுமில்லாமல், மது அடிமைகளை மீட்க ஒவ்வொரு வட்டத்திலும் ‘மது போதை மீட்பு மையம்’ அமைப்போம்!

  மதுவால் கணவனை இழந்த கைம்பெண்கள் (விதவைகள்) தொழில் செய்ய வழி வகைகள் செய்வோம்.

மணல் கொள்ளை:

  தமிழகத்தில் மணல் கொள்ளை, கருங்கல்(கிரானைட்) கொள்ளை, மின்சாரம், பால்வளம், கல்வி, நல்வாழ்வுத் துறைகளில் ஊழல் ஆகியவை நடக்கின்றன. ஆற்றில் ஓர் அலகு (unit) மணல் எடுக்க ௬௭௪ (674) உரூபாய். ஆனால், அதை எடுத்து ௭௦௦௦ (7000) உரூபாய்க்கு விற்கிறார்கள். எடுப்பது ௫௦௦௦ (5000) அலகுகள்(units). கணக்குச் சொல்வது ஆயிரம் அலகுகளுக்கு. இதைத் தடுத்தால் ௨௦,௦௦௦ (20,000) கோடி வருமானம் வரும்.

  தாது மணல் கொள்ளை தடுத்தால் ௫௦,௦௦௦ (50,000) கோடி வருமானம் வரும். கருங்கல் கொள்ளையைத் தடுத்தால் ௩௦,௦௦௦ (30,000) கோடி வருமானம் வரும். இந்த மூன்றையும் முறையாகத் தடுத்தால் நூறாயிரம் (ஒரு இலட்சம்) கோடி வருமானம் வரும்.

  கள்ளச் சாராயம் பெருகும் என்று சொல்பவர்கள் ஆட்சியை எங்களிடம் விட்டு விடுங்கள்! நாங்கள் கள்ளச்சாராய ஒழிப்புக்கு இலவசப் பேசி எண் தருகிறோம். தமிழகத்தில் எந்தச் சிற்றூரில் (கிராமத்தில்) கள்ளச் சாராயம் விற்கப்படுகிறதோ அங்கு அந்த எண்ணில் முறையீடு செய்யலாம். அந்த முறையீடு செய்பவர் அடையாளத்தைப் பாதுகாப்போம். முறையீடு உண்மையாக இருந்தால் முறையீடு செய்பவருக்கு அரசு பத்தாயிரம் உரூபாய் பரிசு கொடுக்கும்.

  முறையீடு உண்மையானால் ஊர் நிருவாக அலுவலர்(V.A.O), சார் ஆய்வாளர் (Sub-Inspector) இடைக்காலப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். மாவட்டக் கண்காணிப்பாளர் (S.P), உதவிக் கண்காணிப்பாளர் (D.S.P) ஆகியோருக்குக் கறுப்புப் புள்ளி போடுவோம்.

  தமிழ்நாடு மாநில வணிகக் கழகத்தில் (TASMAC), பட்டம் பெற்றோர் ஆயிரம் பேர் பணியாளர்களாக உள்ளனர். இவர்களில் ௮௨ (82) பேர் பொறியியல் படித்துள்ளனர். தமிழகத்தில் ௬௮௦௦ (6800) த.மா.வ.க (TASMAC) கடைகள் உள்ளன. இந்தப் பணியாளார்களுக்கு மாற்று வேலை கொடுப்போம்.

  கேரளாவில் ௪௦௦ (400) கடைகள் இருக்கின்றன. கேரளாவில் பூரண மதுவிலக்கு வரும். நிதீசுகுமார் பீகாரில் மதுவை ஒழித்து வருகிறார். மோடி குசராத்து முதல்வராக இருந்தபொழுது மதுவை ஒழித்திருக்கிறார்.***

  பன்னிரண்டு மது ஆலைகள்: தமிழகத்தில் பன்னிரண்டு மது ஆலைகள் உள்ளன. இவற்றில் தி.மு.க-வுக்கு ஆறு மது ஆலைகள் சொந்தம். அ.தி.மு.க-வுக்கு மூன்று மது ஆலைகள் சொந்தம். காங்கிரசுக் கட்சிக்கு இரண்டு மது ஆலைகள் சொந்தம்.

  மது ஆலைகள் மூலம் தி.மு.க-வுக்கு ஆண்டுதோறும் உரூ.௧௬,௦௦௦ (16,000) கோடி கிடைக்கிறது. மதுவை ஒழிப்பதாகவும், பூரண மதுவிலக்கில் கையெழுத்துப் போடுவதாகவும் என்னைப் படி (copy) எடுத்துத் தாலின் (stalin) சொல்கிறார்.

  மக்கள் மேல் அக்கறை இருந்தால் ஆறு மது ஆலைகளை மூட முடியுமா? காரணம், அது பேச்சுதான்!

  கடந்த இருபது ஆண்டுகளாக ‘மதுவை ஒழிப்போம்’ என்று கருணாநிதி சொன்னார். பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தவர் மதுவை ஒழிக்கவில்லை. இப்பொழுது மட்டும் ஒழிப்பாரா?

  என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அன்புமணி பிடிவாதமானவன். சொன்னால் செய்வான். புகையிலையை எதிர்த்துத் தன்னந்தனியாகப் போராடியவன் நான். உலக அளவில் புகையிலை உள்ளரசியல், பெரிய கொள்ளைக் கும்பலை எதிர்த்தவன் இந்த அன்புமணி. நான் மதுவை ஒழிப்பேன்! என்னால் மட்டும்தான் மதுவை ஒழிக்க முடியும் என்று ஆணவத்தில் சொல்லவில்லை. துணிச்சலோடும் நம்பிக்கையோடும் சொல்கிறேன்.

  ஊழல்: மது புற்றுநோய் போல அரித்துக் கொண்டிருக்கிறது. ஊழல். எங்கள் ஆட்சியில் ஒரு பைசா கையூட்டு(இலஞ்சம்) இருக்காது! ஒரு சொட்டு மது இருக்காது! இது எங்களால் முடியும்! எங்களால் மட்டும்தான் முடியும்!

  மதுவையும் ஊழலையும் ஒழிப்போம்: கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த ஊழலின் மதிப்பு உரூ. எழுபத்து நூறாயிரம் (எழுபது இலட்சம்) கோடி! இதற்கு ஒரே தீர்வு, இந்த இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்பதால் வேண்டாம்!

  இந்த ஊழலுக்கு என்ன தீர்வு? பா.ம.க என்ன செய்யும்?

– நடுநிலையான உசாவல்(விசாரணை) செய்ய லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும். அந்த அமைப்புக்குத் தன்னாட்சி உரிமை வழங்கப்படும்!

– ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்!

– ஆண்டுதோறும் முதல்வர், அமைச்சர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்படும்!

– ஊழலை ஒழிக்க உடனடி மேலாண்மைச் (நிர்வாக) சீர்திருத்தம் செய்யப்படும்!

– தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், தகவல் ஆணையம் ஆகியவற்றுக்கு நேர்மையான உறுப்பினர்கள் பணியமர்த்தப்படுவார்கள்!

– ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்!

– அரசுச் சேவைகளை எளிதாகப் பெற இணையத்தளச் சேவை வழிமுறைகள் பின்பற்றப்படும்!

  புதிய பணியாண்மை (நிருவாகம்): ஐம்பது ஆண்டு பணியாண்மையைத் (நிருவாகத்தை) தூசு தட்டி, சுண்ணாம்பு அடித்துப் புதிய பணியாண்மையை உருவாக்குவேன். தில்லியில் அமைச்சராகப் பணியாற்றியபொழுது எனக்குக் கீழ் நாற்பது இ.ஆ.ப (I.A.S) அலுவலர்கள் பணியாற்றினார்கள். உலகளவில் திட்டங்கள் கொண்டு வந்தேன்.

  தமிழகத்தில் நல்ல, நேர்மையான அலுவலர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இன்று தண்டனைப் பதவியில் மண்டபத்தில், காவல்துறையில், காவல்துறைப் பயிற்சிக் கழகத்தில் இருக்கிறார்கள்.

  ஆட்சியில் முதல் ஆறு மாதத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வருவேன். முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டமாக்குவேன். இதனால் முதல்வர் உள்ளிட்ட எந்த அமைச்சரையும் உசாவல் (விசாரணை) செய்ய முடியும்.

இலவசப் பேசி எண் ஒன்று கொடுப்போம். யாராவது கையூட்டுக் (இலஞ்சம்) கேட்டால் முறையீடு செய்யலாம். முதல்வர் அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் மேற்பார்வை செய்யப்படும்.

தேவையா? வீட்டை விட்டு வராத முதல்வர், யாரையும் சந்திக்காத முதல்வர் தேவையா?

  தமிழகத்தின் மேலாண்மைக் கடன் நூறாயிரம் (இலட்சம்) கோடியாக இருந்தது. ஐந்தாண்டில் இருநாறாயிரத்து நாற்பத்து ஏழாயிரம்(2,47,000) கோடியாக உயர்ந்துள்ளது. இந்த ஐந்தாண்டில் மட்டும் நூறாயிரத்து ஐம்பதாயிரம்(ஒன்றரை இலட்சம்) கோடி கடன் கூடியிருக்கிறது. கடன் வாங்கிக் கொள்ளை அடித்திருக்கிறார்கள். கடன் வாங்குவது பணியாண்மை(நிருவாக)த் திறமையா?

பணியாண்மை(நிருவாக)த் திறமை இல்லாத அரசு, மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கிற அரசு தேவையா?

  மக்கள் கட்டும் அத்தனை வரிப் பணத்துக்கும் திட்டமாகத் திருப்பிக் கொடுப்போம்!

  மக்களாட்சி இல்லை: சட்டப்பேரவையா நடக்கிறது தமிழ்நாட்டில்? ‘அம்மா மன்றம்’! அம்மாவில் தொடங்கி அம்மாவில் முடிய வேண்டும்! இதில் மக்களாட்சி இல்லை.

  பா.ம.க ஆட்சியில் மக்களாட்சி மரபுகளைக் கடைப்பிடிப்போம். எதிர்க்கட்சிகளுக்கு எழுபது விழுக்காடு(%) பேச வாய்ப்பு அளிப்போம். சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்புச் செய்யப் பணம் இல்லை என்கிறார் செயலலிதா. ஒரே ஓர் இதழுக்கு விளம்பரம் செய்ய முந்நூறு கோடி செலவழித்திருக்கிறார்!

மாண்புமிகு வேண்டாம்!:  பா.ம.க ஆட்சியில் சட்டப்பேரவையில் நல்ல ஊக்கமுடைய கலந்துரையாடல்கள் (விவாதங்கள்) நடக்கும். என்னை யாரும் ‘மாண்புமிகு அன்புமணி’ என்று சொல்ல வேண்டா! ‘அன்புமணி அவர்களே!’ என்றோ ‘மருத்துவர் அன்புமணி’ என்றோ சொல்லலாம். என்னை யாரும் வந்து சந்திக்க வேண்டா! நான் மக்களை வந்து சந்திப்பேன்.

கையேந்த விட மாட்டேன்:  நான் மின்-அம்மி (Mixie), மின்-உரல் (Grinder), ஆட்டுக்குட்டி தர மாட்டேன். கல்வி, நல்வாழ்வு(சுகாதாரம்), வேலைவாய்ப்பு கொடுப்பேன். யாரையும் கையேந்த விட மாட்டேன். தன்மானத்தோடு வாழ வைப்பேன்!

  தமிழ்நாட்டுக்குத் திராவிடக் கட்சிகளால் எந்த நன்மையும் இல்லை. அ.தி.மு.க, தி.மு.க-வை ஒழியுங்கள் போதும்! அறுபது நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அந்த முன்னேற்றத்தை இங்கு தர வேண்டும் என்கிற ஏக்கமும் வெறியும் எனக்கு இருக்கின்றன. வாய்ப்பு அளியுங்கள்!”

இவ்வாறு அன்புமணி இராமதாசு பேசினார்.

தரவு:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan

 

 

 

 

[ ***பின் குறிப்பு :குசராத்து தனி மாநிலமாகப் பிரிந்ததில் இருந்தே மதுவிலக்கு மாநிலம்தான். இதற்கும்  நரேந்திரமோடிக்கும் தொடர்பு இல்லை. குசராத்தில்  அயல்நாட்டார்,  நோயர் முதலானோர் உரிமம் பெற்று மது குடிக்கலாம்.
  தேநீர்க்கடைகளிலும் மது விற்பனை உண்டு எனப் பலர் குறிப்பிட்டுள்ளனர்.  நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில்தான் கள்ளச்சாராயத்தால் சாவு மிகுதி. எனவே, அவரைப் பாராட்டுவது அறியாமையாகும். முதல்வர் வேட்பாளராக விரும்புவதால், பா.ச.க.வின் பொய்யான் பரப்புரையை நம்பிப் பேசாமல் உண்மையை  அறிந்து பேசுவது நன்றாகும். எனினும் முழு மதுவிலக்கைக் கொண்டு வருவேன் என்பது பாராட்டிற்குரியது.  இலவசங்களைத் தருவேன் என்று ஆசை காட்டாமல், இலவசங்கள் இல்லை என்று சொல்வதற்குத்  துணிவு வேண்டும்.  – இலக்குவனார் திருவள்ளுவன்]