அன்று அமைதி காத்த தி.மு.க. இன்று கழுவாய்  தேடுகிறது!

புதுதில்லி:

இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை இந்தியா மீட்க வலியுறுத்தி மக்களவையில் 11.12.2013 அன்று தி.மு.க. உறுப்பினர்கள் வினாக்கள் எழுப்பினர்.

இச்சிக்கல் குறித்து நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திருமதி மீரா குமாரிடம் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, 11.12.13 அன்று காலை மக்களவை கூடியதும் முறையீடு அளித்தார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது:kachcha theevu map1

கச்சத்தீவு இந்தியாவிற்குத்தான் சொந்தம். அதனை 1974 ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கைக்கு ஓர் ஒப்பந்தத்தின் வாயிலாகத் தாரை வார்த்து விட்டது.

இந்திய – இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளர்கள் கையொப்ப மிட்டு பரிமாறிக் கொண்ட அந்த ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாத காரணத்தால், அது செல்லாது. கச்சத்தீவு இராமநாதபுரம் சேதுபதி அரசுக்குச் சொந்தமானதாகும்.

இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசமைப்புச் சட்டம் 368 ஆவது பிரிவின்படி, நாடாளுமன்றத்தின்  ஆய்விற்கு வைத்துச் சட்டம் இயற்றப்படவேண்டும். கச்சத்தீவைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறை வேற்றப்படவில்லை.

எனவே, கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசமைப்புச் சட்டத்தின்படிச் செல்லுபடி ஆகாது. எனவே, 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை  நீக்க வேண்டும். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பறைசாற்ற வேண்டும்.

எனவே,  இச்சிக்கல் குறித்து நாடாளுமன்ற மக்களவையில்  கலந்துரையாட இசைவு வழங்கிடவேண்டும் என  அம்முறையீட்டில் குறிப்பிட்டிருந்தார். இச்சிக்கலை  மக்களவையில் எழுப்பிப் பேசிய நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர்  த.இரா.பாலு,

கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் காத்திடவேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த வேண்டுகையை  வலியுறுத்தி,  தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

இதனால் கூச்சல் குழப்பம் நிலவியதை அடுத்து, மக்களவை முதலில் நண்பகல் 12 மணிவரையிலும் பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதே  சிக்கலுக்காகவும் தெலுங்கானா சிக்கலுக்காகவும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப் பட்டது.