57crusher01

கன்னிமார்புரத்தில்

கற்சுரங்கங்களால் விரிசலடையும் சுவர்கள்

 ஊர் மக்கள் தூங்கமுடியாமல் தவிப்பு

 – வைகை அனிசு

  தேனிமாவட்டத்தில் உள்ள கன்னிமார்புரத்தில் இரவு நேரத்தில் அகழ்களங்களில்(கற்சுரங்கங்களில்) வைக்கப்படும் வெடிகளால் இரவில் தூங்கமுடியாமல் தவிக்கின்றனர்.

   தேவதானப்பட்டி அருகே உள்ள கன்னிமார்புரம், வைகைப் புதூர், தேவதானப்பட்டி கோழிகூப்பிடுகிற ஆலமரம், எ.புதுப்பட்டி, மேல்மங்கலம் புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் வெடிப்பகம்(கிரசர்) என்ற பெயரில் பல அகழ்களங்ககள் இசைவில்லாமல் இயங்கிவருகின்றன.

  இதே போல உத்தமபாளையம் அருகே உள்ள சங்கிலிக்கரடு, ஆண்டிபட்டி அருகே தோட்டக்கலைத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் வெடிப்பகம்(கிரசர்) என்ற பெயரில் பல அகழ்களங்கள் இயங்கி வருகின்றன.

  இந்த அகழ்களங்களில் இரவு பகல் என்று நேரம் இல்லாமல் எப்பொழுதும் அதிக வெடிச்சத்தத்துடன் கற்கள் பிளக்கப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் பூமிப்பகுதிகள் அதிர்கின்றன. இப்பகுதியில் உள்ள கற்களையும் பாறைகளையும் வெடிவைத்துத் தகர்ப்பதால் இப்பகுதியில் நிலஅதிர்வு போல உணருகிறார்கள். மேலும் பாறைகளில் வெடிவைப்பதால் இப்பகுதியில் உள்ள பலகணிகளில் உள்ள கண்ணாடிகள் உடைகின்றன; வீட்டில் உள்ள பொருட்கள் உருண்டுஓடுகின்றன. மேலும் தரையில் படுத்து இருந்தால் வெடிச்சத்தம் நிலநடுக்கம் போல் உள்ளதாக உணருகிறார்கள்.

57brokenwall01

  இதன் தொடர்பாக இப்பகுதி மக்கள் பலமுறை முறையீடு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. கன்னிமார்புரத்தைச்சேர்ந்த அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் இரவு, பகலாக வெடிப்பகம்(கிரசர்) என்ற பெயரில்  தகர்பொறிகளைக் கொண்டு அகழ்களங்கள் இயங்கிவருகின்றன. இதனால் புதியதாக கட்டப்பட்ட வீடுகளில் சுவர்கள் விரிசல் அடைந்தும், பலகணிக் கண்ணாடிகள் உடைந்தும் வருகின்றன. மேலும் அகழ்களத் தூசிகளால் இப்பகுதியில் வேளாண்மை செய்யமுடியவில்லை. எங்களால் இரவு முழுவதும் தூங்கமுடியவில்லை. எனவே வெடிப்பகம்(கிரசர்) என்ற பெயரில் இயங்கும் அகழ்களங்களை மூட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

  இதன் தொடர்பாகக் கனிவளத்துறை அலுவலத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, “இது குறித்து முறையீடு எதுவும் வரவில்லை. எனினும் நடவடிக்கை எடுக்கிறோம்” என்றனர்.

57kannimarpuram

  எனவே மாவட்ட நிருவாகம் வெடிப்பகம்(கிரசர்) என்ற பெயரில் இயங்;கும் அகழ்களங்கள் – கற்சுரங்கங்கள் – நடத்துநர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

57brokenwall0257vaigai aneesu_name