தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தை பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற தகுதி இல்லை. என்று வடமாகாண அவையின் ஆளும்கட்சி  உறுப்பினர் து.இரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பின்வருமாறு அவர் கண்டித்துள்ளார்.
இலங்கை  மட்டைப்பந்தாட்ட வீரர்  முத்தையா முரளிதரன் தனது குடும்பத்தில் ஒருவருக்கு இசைப்பிரியாவின் கதியோ பாலச்சந்திரனின் கதியோ நேர்ந்திருந்தால், அப்போதும் இவ்வாறு தான் பேசுவாரா? வடகிழக்கு மக்களின் அவலங்களையும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தையும் பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற தகுதி இல்லை.

காலம் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த நாம் பல போராட்ட வடிவங்களை முகம்கொடுத்து வந்துள்ளோம். இறுதிப்போரில் எங்கள் மக்கள் சந்தித்த இன அழிப்புப்போரின் சாட்சியங்கள் இன்று உலக ஊடகங்களில் வெளிவந்து  உலகநாடுகளையே  உலுக்கிவருகின்றது.  இசைப்பிரியாவும் பாலச்சந்திரனும் எங்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட அநீதியின் அடையாளங்களாக மாறி உலகின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பி வருகின்றனர்.

கணவனை இழந்த பெண்கள் வடகிழக்கிலே 90 ஆயிரத்துக்கு மேல் உள்ளனர். பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த தாய்மாரின் சோகங்கள் கண்ணீரால் எழுதப்படுகின்ற வரலாறாகியுள்ளது.  ஏராளமான இழப்புக்களையும் எண்ணற்ற உயிர் ஈகங்களையும் சந்தித்த எங்களின் உரிமைப்போராட்டமானது இன்று என்றுமில்லாதளவிற்கு உலகமயமாக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பிரிட்டன் பிரதமரின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் வருகையின்போது பிள்ளைகளைத் தொலைத்த தாய்மார், ஆற்றாது அழுது தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியது
இன்று உலகின் உணர்வுகளைத் தட்டி எழுப்பியுள்ளது. இவ்வாறான நிலையில் மட்டைப்பந்தாட்ட வீரர் முத்தையா முரளிதரன் அத்தாய்மார்களின்  உணர்வுகளை கேலிப்படுத்தும் விதத்திலும், வடகிழக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் அநியாயங்களை மூடி மறைக்கும் விதத்திலும் தமிழரின் நியாயமான உரிமைப்போராட்டத்தை மோசமாக விமர்சித்தும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உலகத்தமிழரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

எங்கள் சார்பான பன்னாட்டுப் போக்கைத் திசை திருப்பும் நோக்கில் தனது விளையாட்டுப் புகழைப் பயன்படுத்தி வெளியிட்டுள்ள கருத்துகள் மக்களிடம் கடும் கோபத்தைக் கிளறியுள்ளன. இலங்கையில் துடுப்பாட்டமானது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்ற வலுவான ஆயுதம் என்பது இதன் மூலம் பலராலும் உணரப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் நீண்ட போராட்ட வரலாறு அவருக்குத் தெரியுமா? எங்கள் மண் கண்ட உயர்  ஒப்படைப்புகளும் ஈகங்களும் தெரியுமா? உறவுகளைத் தொலைத்தோரின் அழுகுரல்கள் கேட்டிருக்கிறாரா? இன்றும் தொடரும் எங்கள் நில, வளப் பறிப்புகள் தெரியுமா? இசைப்பிரியாக்களின் கதறல்களும், பாலச்சந்திரன்களின் ஏக்கங்களும் அவருக்குத் தெரியுமா? எதுவுமே தெரியாது.

இன்னமும் குண்டுகளின் சிதறல்களை உடலில் தாங்கி நடமாடுகின்ற எங்கள் மக்களைப்பற்றித் தெரியுமா?  தனது குடும்பத்தில் ஒருவருக்கு இசைப்பிரியாவின் கதியோ பாலச்சந்திரனின் கதியோ நேர்ந்திருந்தால், அப்போதும் இவ்வாறு தான் பேசுவாரா? இந்நிலையில் எங்கள் நிலை பற்றி எங்களின் அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற உரிமையை யார் கொடுத்தது? கடந்த காலத்தில் தமிழக மக்களின் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி கருத்து வெளியிட்டவர் அல்லவா இவர்!

முத்தையா முரளிதரனின் இது போன்ற நடவடிக்கைகளால் உலகத்தமிழர் மத்தியில் பெற்றிருந்த நன்மதிப்பை இழந்து இன்று கடும் கோபத்தையும் வெறுப்பையும் சம்பாதித்துள்ளார்.  தமிழர்களின் அருவினையாளர் அடையாளமாகத் தன்னை நிலை நிறுத்த வேண்டியவர் , தன்னை  வஞ்சக – இரண்டக – அடையாளமாக வெளிப்படுத்தியுள்ளார்.
வடகிழக்கு மக்களின் அவலங்களையும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தையும் பற்றி அறிந்திராத முரளிதரனுக்குத் தமிழர் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற தகுதி இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.