கவிஞர் மு.முருகேசுக்கு மீரா விருது
கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியும் ‘வளரி’ கவிதை இதழும் இணைந்து நடத்திய கவிப்பேராசான் மீரா விழாவில், தமிழில் குறும்பா(ஐக்கூ) கவிதைகள் குறித்த தொடர் செயல்பாடுகளுக்காகக் கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக மானாமதுரையிலிருந்து வெளிவரும் ‘வளரி’ கவிதை இதழ் சார்பில், தமிழ்ப் படைப்புவெளியில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச்
செய்துவரும் படைப்பாளிகளுக்கு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சப்பானிய ஐக்கூ வடிவக் கவிதைகளைத் தமிழில் பரவலாக அறிமுகம் செய்ததோடு, இளைய படைப்பாளிகளையும் ஒருங்கிணைத்து,
அதனை ஓர் இயக்கம்போல் தமிழகம் முழுவதும் கொண்டுசென்ற பணிகளைப் பாராட்டி,
கவிஞர் மு.முருகேசுக்கு இந்த ஆண்டு கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழா பரமக்குடி அரசு கலைக்கல்லூரில் கடந்த திங்களன்று (மாசி 27 /மார்ச்சு 11) நடைபெற்றது. இவ்விழாவிற்குத், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மா.மணிமாறன்
தலைமையேற்றார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சு.செல்வகுமாரன் அனைவரையும் வரவேற்றார்.
எழுத்தாளர் சந்திரகாந்தன், கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருதினை வழங்கிப், பாராட்டிப் பேசினார். விழாவில், ‘வளரி’ இதழாசிரியர் அருணா சுந்தர்ராசன், வழக்கறிஞர் தி.குமார், கவிஞர் இரா.சீ.இலட்சுமி ஆகியோர் உரையாற்றினார்.
நிறைவாக, உதவிப் பேராசிரியர் ச.இராமகிருட்டிணன் நன்றி கூறினார்.
Leave a Reply