சென்னை – இன்று (15.12.13) நடந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில்  பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரசுடனான கூட்டணிக்கு எதிராகப் பேச இசைவளிக்கப்பட்டனர். குத்தாலம் கல்யாணம், மேனாள் அமைச்சர் நேரு, மதுரை முனியாண்டி, திருச்சி சிவா, மேனாள் அமைச்சர் ஆ.இராசா, மேனாள் அமைச்சர் பழனிமாணிக்கம், சென்னை அன்பழகன் முதலான பலரும் வஞ்சகக் காங்.உடன் கூட்டணி வேண்டாம் எனக் கருத்து தெரிவித்தனர். பெரும்பாலான மக்களின் உணர்வினை இதுவரை ஏற்காத தி.மு.க. தலைமை, சூழ்நிலையின் உந்துதலால்  –  பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளுக்கு இணங்க   உடன்படுவதுபோல் – இப்பொழுது ஏற்றுள்ளது.

தி.மு.க. பொதுக்குழுக்கூட்டம் 2013

தி.மு.க. பொதுக்குழுக்கூட்டம் 2013

தி.மு.க. தலைவர்  கருணாநிதி,

    “நம்முடன் இருந்து இரண்டகம் புரிந்த செய்த காங்கிரசுடன் இனிக் கூட்டணி கிடையாது.’காங்கிரசுடன் கூட்டணி வைத்து விடுவோம்’ என்று நீங்கள் ஒரு போதும் எண்ண வேண்டா. ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழிக்கு களங்கம் விளைவித்தும், ஆஇராசா மீது பழி சுமத்தியும், தயாளு அம்மாளுக்கு துயரத்தை ஏற்படுத்தியதோடு கட்சிக்கும் களங்கம் விளைவித்தவர்கள், இவர்களைப் பலிகடாவாக ஆக்கிவிட்டுத் தப்பி விட்டார்கள். இந்த வழக்கு இன்னும் நடக்கிறது. மத்தியப் புலனாய்வுப் பணியகம்(சி.பி.ஐ.) யாருடைய நிருவாகத்தில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். பூச்சியங்களைப் போட்டு ஊழல் குற்றச்சாட்டில் தி.மு.க.வைச் சிக்க வைத்து விட்டார்கள். கனிமொழி, ஆ.இராசா ஆகியோர் சிறைக்குப் போனார்கள்.

   நீங்கள் (தொண்டர்கள்) இருக்கும் போது நான் ஏன் அஞ்ச வேண்டும். தனித்து நின்று தேர்தலைச் சந்திக்கும்  துணிவு நமக்கு உண்டு. கழகம் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடைசி வரை ஒற்றுமையாக இருந்து கட்சியின் வெற்றிக்கு உழைக்க வேண்டும்”  என்று பேசினார்.