கியூபெக்கு மாகாணத் தாய்மொழிப்பற்று வெல்க!
பிரெஞ்சு மொழிப் பயன்பாட்டை மிகுவிக்க
ஆங்கில அறிவிப்புப் பலகைகளை
நீக்கச் சொன்ன கனடா அரசு
ஒட்டாவா :
கனடா நாட்டின், கியூபெக்கு மாகாண மருத்துவமனைகளில் உள்ள ஆங்கில அறிவிப்பு பலகைகளை நீக்குமாறு அண்மையில் இந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கியூபெக்கு மாகாணத்தின் ஆட்சி மொழி பிரெஞ்சு. ஆங்கிலமும் அதிகார முறை மொழியாக உள்ளது. எனினும் பிரெஞ்சை பரப்பும் விதமாக இப்பகுதியிலுள்ள காசுபே நகரில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளை நீக்க உத்தரவிட்டுள்ளது.
ஐம்பது விழுக்காட்டிற்கும் மிகுதியாக ஆங்கிலம் பேசுவோர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே பிரெஞ்சு மொழிப் பலகையுடன், ஆங்கிலத்திலும் பலகைகள் வைக்க இந்நாட்டு நிருவாகம் இசைவளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, பதினான்கு விழுக்காட்டு நோயாளிகளே ஆங்கிலம் பேசுபவர்களாக இருக்கும் காசுபே நகர மருத்துவமனைப் பணியாண்மைத்துறைக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எனினும், இதுபோன்ற மருத்துவமனைகளில் மஞ்சள் நிற அடையாள அட்டைகளுடன், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளும் தெரிந்த உதவியாளர்கள் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நோயாளிகளுக்கு உதவுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply