கொலையாளியை அடையாளம் காட்டிய கிளி
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பல்கேசுவர் பகுதியில் வசிப்பவர் விசய்(சர்மா). உள்ளூர் இந்தி நாளிதழின் ஆசிரியராக உள்ளார். கடந்த 23- அன்று விசய் திருமண விழா ஒன்றிற்குச் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த பொழுது, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி நீலம்(சர்மா)(45) மருமமான முறையில் கொல்லப்பட்டிருந்ததை அறிந்தார்.
கொலையாளி, இது குறித்த எந்தவிதமான தடயங்களையும் விட்டுச் செல்லாமல் தந்திரமாக நடந்து கொண்டுள்ளான். இதனால், தொடர்புடைய சத்தா காவல்நிலையத்தினர் துப்பு துலக் கமுடியாமல், திணறி வந்தனர். இந்நிலையில் நீலம்(சர்மா) வளர்த்து வந்த கிளி கொலையாளியைக் காவல்துறையினருக்கு அடையாளம் காட்டியது. காவலர்கள் வரும்பொழுது விசய்யின் உடன்பிறந்தாள் மகன் அசுதோசு(30) என்பவன் பெயரை ”ஆசு! ஆசு!” எனக் கத்திக் கூறியது. முதலில் இதனை யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர். பின்னர் அவன் வரும்பொழுதெல்லாம் அவ்வாறு அவன் பெயரை உரக்கக் கத்தியது. இதனால் ஐயம் ஏற்பட்டுக் காவல்துறையினரிடம் தெரிவிக்க அவர்கள் உசாவலில் அசுதோசு கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான்.
நீலம் வளர்த்து வந்த நாய் அந்த வீட்டில் இருந்தாலும் வீட்டிற்கு அடிக்கடி வருபவன் ஆசு என்பதால் குரைக்கவில்லை. ஆனால், அவன், பணம், நகைகளைக் கொள்ளை அடித்துவிட்டுக் கொலையும் புரிந்து தப்பிச் செல்கையில் குரைத்துள்ளது. எனவே, அந்த நாயைக் கொன்றுவிட்டான். கடித்துக் குதறும் நாயைக் கண்டு அஞ்சியவன் கூண்டுக்கிளியைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், கிளி தன்னை அன்புடன் வளர்க்கும் உரிமையாளர்கள் மீதள்ள உணர்வால் கொன்றவன் பெயரைத் திரும்பத் திரும்பக் கூறிக் காட்டிக் கொடுத்துவிட்டது.
நன்றி உணர்வு நாய்களுக்கு மட்டுமல்ல, கிளிகளுக்கும் உள்ளது. மனிதர்களிடம்தான் காணவில்லை!
(படத்தில் நீலம்(சர்மா) மகள் கிளியுடன்)
Leave a Reply