தலைப்பு-சமற்கிதுத்திற்குச் சாட்டை :thalaippu_samaskiruthathai_virattuv0am_karunanidhi

  சென்னையில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேத்தியும்  முன்னாள்அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மகளுமான சமந்தா – கிரண் திருமண நிகழ்ச்சியை நடத்திய பொழுது கலைஞர் கருணாநிதி,  சமற்கிருத எதிர்ப்பு குறித்தும் உரையாற்றினார்.

  மீண்டும் தமிழ்நாட்டில் – இந்தியாவில் –  சமற்கிருதம் தலைதூக்குமா? வடமொழி நம்மீது படை யெடுக்குமா? எனக் கேள்விக் குறி ஏற்பட்டுள்ள நேரத்தில் இங்கே நாம் குழுமியிருக்கிறோம். வட மொழிக்கு ஆதிக்கம், சமற்கிருதத்திற்கு ஆதிக்கம் என்று பேசப்படுகின்ற காலம் ஏற்பட்டுள்ளது. தூய  தமிழ் மொழிக்குத்தான் செல்வாக்கு, தூய தமிழ் மொழிதான் நம் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தில் சமற்கிருதத்தைப் பாட மொழியில் சேர்க்கிறோம் என்று சொல்கின்ற பைத்தியக்காரர்களும் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

  வடமொழி எப்படி ஆளும் கட்சி மூலமாக அல்லது ஆளும் கட்சிக்காரர்களின் ஆதரவோடு, ஆசியோடு நுழைவதற்கு இடம், நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஆகவே தான் நான் கூறுகிறேன். சோமசுந்தர பாரதியார், சஞ்சிகிரதம் என்றுதான் சொல்வார். அப்படி இழித்துரைக்கப்பட்ட ஒரு மொழி, சமற்கிருத மொழி, வட மொழி. வடமொழியைத் திணிக்க விரும்புகின்ற மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தங்களுடைய மொழியைப் பரப்ப விரும்புகின்ற இந்த அநியாயத்தை இப்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால், வடமொழியை எதிர்த்து, சமற்கிருதத்தை எதிர்த்து ஒரு பெரும் கிளர்ச்சி  – எப்படி கட்டாய இந்தியை எதிர்த்து தமிழ்நாட்டில் உருவாயிற்றோ, அதைப் போல வட மொழி  சமற்கிருதத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி  – தமிழ்நாட்டில் உருவாவதற்கு யாரும் காரணமாகி விடக் கூடாது.

  ஏனென்றால் தமிழ்நாட்டில், தமிழ் மொழிக்கு மூவேந்தர் காலந்தொட்டு இருக்கும் அதனுடைய  மூப்பு, மொழி ஆதிக்கம், அந்த மொழிக்கு இருந்த செல்வாக்கு, அதைக் கையாண்ட மூவேந்தர்களின் பரம்பரை, அந்தப் பரம்பரையை எல்லாம் ஒழித்துக் கட்டி விட்டு, நாங்கள் தமிழுக்கு இடம் தர மாட்டோம், வட மொழிக்குத்தான் இடம் தருவோம் என்று சொல்வார்களானால், தமிழன் ஒவ்வொருவரும் சவுக்கை எடுத்துக் கொண்டு வடமொழி ஆதிக்கத்தை வேரறுக்கக் கிளம்ப வேண்டும். நாம் எடுத்துக் கொள்ளும் வீரசபதமாக வட மொழி ஆதிக்கத்திற்கு இடம் தர மாட்டோம்,  சமற்கிருதத்திற்குத் தமிழ்நாட்டில் இடம் கிடையாது, சமற்கிருதத்திற்குத் தமிழ் நாட்டில் மாத்திர மல்ல எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமற்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம் என்ற உறுதியை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  இவ்வாறு கருணாநிதி  சமற்கிருதத்திற்கு எதிராக ஒவ்வொருவரும் சவுக்கை எடுத்துச் சுழற்ற வேண்டும் என்று பேசினார்.