தமிழருக்கே உரிய சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு பணியாட்சியின்(நிருவாகத்தின்) கீழ்க் கொண்டு வந்து பணியாள்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தமிழக அரசு மூத்த வழக்குரைஞரை நியமித்து, முனைப்புடன் வாதாட வேண்டும் என்று திமுக தலைவர்  கலைஞர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.

chidmabaram thevaram

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு நியமித்த அதிகாரிபணியாண்மைபுரிய உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் வாதாடி வரும் வழக்குரைஞருக்கு இந்த வழக்கில் போதிய  பட்டறிவு இல்லை. எனவே, உடனடியாக தமிழக அரசு வீண் காலத் தாழ்ச்சி செய்யாமல், மூத்த வழக்குரைஞர்களை உச்ச நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

வழக்கு வாதங்கள் முடிவடைந்து அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு மட்டுமே சொல்லப்பட வேண்டிய நிலையில் உச்ச நீதிமன்றம் இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு மூத்த வழக்குரைஞரை வைத்து உரிய முறையில் வாதாடாவிட்டால் தீட்சிதர்கள் பக்கம் ஒருதலைச் சார்பாகத் தீர்ப்பு சொல்ல வேண்டி வரும் என்று நீதிபதிகளே விசாரணையின் போது எச்சரித்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இந்த நிலையில், சில ஆவணங்களையும், வாதங்களையும்  அளிக்கத் தமிழக அரசு வழக்குரைஞர் கால  வாய்ப்பு வேண்டியுள்ளார்.

நடராசர் கோயிலை அரசு  பணியாட்சிபுரிவது என்பது 1987ஆம் ஆண்டு எம். (ஞ்)சி.ஆர். முதலமைச்சராக இருந்த போதே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தான். அப்போதும் தீட்சிதர்கள் இடைக்கால தடை உத்தரவு பெற்றதால், அப்போது அது நிறைவேற்றப்படாமல், திமுக ஆட்சியின் போது நிறைவேறியது. எனவே, எம். (ஞ்)சி.ஆரின். விருப்பப்படி நடராசர் கோயில் அரசு பணியாட்சயின் கீழ் வருவதற்குத் தீட்சிதர்கள் இடையூறு விளைவிக்க எண்ணுகிறார்கள். எனவே, தமிழக அரசு அவர்களுக்குத் துணை போய்விடக் கூடாது என இங்கு கேட்டுக் கொள்கிறேன்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.

kalaignar 1