59kandhuvatti-kodumai

‘சுயஉதவிக்குழு’ என்ற பெயரில் கந்துவட்டி-

காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட வேண்டும்

vaigai_aneesu_name

தேவதானப்பட்டிப் பகுதியில் கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேவதானப்பட்டிப் பகுதியில் ஆண்கள் தன்னுதவிக்குழு, பெண்கள் தன்னுதவிக்குழு என்ற பெயரில் அரசின் ஏற்பு   பெறாமல் 10 முதல் 20பேர்வரை சேர்ந்து பணத்தைச் சேர்த்து வட்டிக்கு விடுகின்றனர். இவ்வாறு குழுக்களாகச் சேர்ந்து பணம் கட்டுபவர்களுக்குப் பணம் தேவைப்பட்டால் அரசின் விதிமுறையை மீறி 100க்கு 5 % முதல் 10 % வரை வட்டியை முதலில் எடுத்துக்கொண்டு பணத்தைத் தருகின்றனர். அதன் பின்னர் வாராவாரம் பணத்தைத் திருப்பிச்செலுத்தவேண்டும். அவ்வாறு ஒரு வாரத்தில் பணத்தை திருப்பிச்செலுத்தாவிட்டால் மறுவாரம் தண்ட(அபராத)த்தொகையுடன் இரண்டு மடங்காக வட்டியைக் கொடுக்கவேண்டும். அவ்வாறு கொடுக்காத நேர்வில் இருபதின்மர் ஒன்றாகச் சேர்ந்து பொது இடங்களில் வட்டிக்கு வாங்கியவர்களை அவமானப்படுத்துகின்றனர். அத்துடன் இல்லாமல், வீட்டில் உள்ள பேழை, கட்டில், அரைபொறி முதலான பொருட்களை எடுத்துக்கொண்டு இல்லத்துப்பெண்களை அவமானமாகப் பேசிவருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

  இதனால் பலர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். சிலர் இரவோடு இரவாக ஊரைக் காலி செய்து மற்ற ஊர்களுக்குப் பஞ்சம் பிழைக்கச் செல்கின்றனர். கந்துவட்டிக்கு வாங்கியவர்களின் வெற்றுக்கடன்பத்திரம், 10உரூபாய் பத்திரம் ஆகியவற்றை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கந்துவட்டிக்கு வாங்கியவர்களின் நிலம், வீடுகளை எடுத்துக் கொள்கின்றனர். இதன்   தொடர்பாகக் காவல்நிலையத்தில் முறையீடு தெரிவித்தால் கந்துவட்டிக்காரர்களுக்குச் சார்பாகக் காவல்துறையினர் செயல்படுகின்றனர்.

  இதனால் பாதிப்படைந்தவர்கள் வேறு வழியில்லாமல் உயிரை விடுகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கந்துவட்டி தற்பொழுது ஆண்கள் தன்னுதவிக்குழு, மகளிர் தன்னுதவிக்குழு என்ற பெயர்களில் இயங்கிவருகிறது. எனவே காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேனிமாவட்டம் முழுவதும் இவ்வாறு நடைபெறும் கந்துவட்டிக்கும்பலை இனம் கண்டு வழக்கு பதிவு செய்யவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரசின் திட்டத்தைக் கொள்ளையடிக்கப் பயன்படுத்துவோர் மீது உரிய சட்டம் பாயுமா?

மக்கள் காப்பாற்றப்படுவார்களா?