செயமங்கலம் பகுதியில் தலைவிரித்தாடும் கந்து வட்டிக்கொடுமை
தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம் பகுதியில் கந்துவட்டிக்கொடுமையால் பல குடும்பத்தினர் ஊரை விட்டு இரவோடு இரவாகக் காலிசெய்து வருகின்றனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் முதன்மைத் தொழிலாக விளங்குவது வெற்றிலைக் கொடிக்காலும், வாழைப் பயிரிடலும்தான். இப்பகுதியில் உள்ள உழவர்கள் வெற்றிலைகளைப் பயிரிட்டுத் தமிழகம் முழுமையும் ஏற்றுமதி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 வருடங்களாகப் போதியமழையின்மையால் உழவர்களால் உழவைத் தொடரமுடியவில்லை. ஒரு சில உழவர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி உழவைக் காப்பாற்றி வந்தனர். இருப்பினும் தாங்கள் வாங்கிய கடனுக்காக முதலைத் தராமல் வட்டியை மட்டும் கொடுத்து வந்தனர். இந்நிலையில் வேளாண்மை இல்லாததால் இப்பகுதியில் உள்ள உழவர்கள் மாதவட்டி, வாரவட்டி, நாள்வட்டி எனப் பலவகைகளில் வட்டிகளுக்குக் கடன் வாங்கியுள்ளனர். வட்டி வாங்குவதற்கு முன்னர் வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து, கடன் ஆவணத்தாளில் கையெழுத்து இட்டு அளிக்கின்றனர். இவற்றைத்தவிரக் கடன்தருநர், வீடு, நிலம் ஆகியவற்றின் சொத்துப்பத்திரங்களைத் தற்காலிகமாகப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தபின்னரே வட்டிக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு வாங்கிய நிலங்களையும், வீடுகளையும் வட்டிக்கு வட்டிபோட்டு அடியாட்களுடன் வந்து வீடு, நிலங்களைப் பறித்துக்கொள்கின்றனர்.
இதன் தொடர்பாக, செயமங்கலம், தேவதானப்பட்டி காவல்நிலையங்களில் புகாராகப் பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்துக் கட்டப்பஞ்சாயத்து செய்து விடுகின்றனர். வட்டிக்கொடுத்தவர் மீதே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்கின்றனர். இதனால் பலர் வீட்டைப் பூட்டிவிட்டு இரவோடு இரவாக ஊரை விட்டுக் காலிசெய்கின்றனர். அதன்பின்னர் கந்துவட்டிக்கு விட்டவர்கள் அவர்களும் அந்த வீட்டில் பூட்டைப்போட்டுப் பூட்டிவிடுகின்;றனர். இதனால் பலர் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். அவ்வாறு தற்கொலை செய்தவர்கள் வயிற்றுவலியால் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்கின்றனர்.
எனவே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கந்துவட்டிச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி செயமங்கலம், தேவதானப்பட்டி பகுதிகளில் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் கந்துவட்டிக்கொடுத்தவர்களுக்கு ஆதரவாகக் காவல்துறையினர் செயல்படாமல் நடுநிலை வகிக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள் பொதுமக்கள்
Leave a Reply