பணியிடங்களில் பாலியல் தொந்தரவு-கடுமையான சட்டம் வேண்டும் எனப் பெண்கள் எதிர்பார்ப்பு

51sexualabuse03

. முதலாளிகள் ஆதிக்க வன்முறையில் சிக்குண்டு தவிக்கும் பெண் தொழிலாளர்கள் நிலையும் அவர்கள் மீது செலுத்தும் சமூக வன்முறையும் கொடியவையாக இருக்கின்றன.

 இதில் இரண்டு வகை உண்டு. அலுவலகச்சூழலில் ஏற்படும் சிக்கல்கள், வேலைக்குப் போகும் பெண்களின் பாலியல் துன்பம் என ஆகும். கல்வி கற்று அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பொருளாதாரச் சார்பின்றித் தனித்தியங்கும் நிலை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் அலுவல் பொருட்டு வெளியே வந்துவிட்ட பெண்கள் பொதுவாக ஆண்கள் இன்ப நுகர்ச்சிக்குரிய பொருட்களாக பார்க்கின்றனரே தவிர தன் உடன் வேலையாளாகப் பார்ப்பதில்லை. தம் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவதற்காகவே பெண்ணினம் வாழ்வதாகவும் ஆண் தலையெடுக்கும் சமூக அமைப்பில் பெரும்பாலான ஆண்கள் இன்னும் எண்ணிக் கொள்கின்றனர். அலுவலக உயர் அதிகாரிகளால் பெண்கள் பாதிக்கப்படும் நிலையை உணரலாம். அவளை அடையவேண்டும் என்ற காமம் அவர்களிடம் ஏற்படுகிறது. இதைத் தணிக்க அவளிடம் பலவகை அசைவுகளிலும் பார்க்காதது போன்று தொடுவதும் இரு பொருள்படப் பேசுவதும் செய்கின்றனர். ஆனால் அப் பெண் தன்னுடைய குடும்பச் சூழ்நிலை கருதி அவற்றை மென்று விழுங்கிச் செல்லவேண்டியுள்ளது. இதே போன்ற நிகழ்வு சித்தாள் முதல் காவல்துறை உயர்அதிகாரி வரை உள்ளது.

  வங்காளத்தேசத்தில் மகளிர் தன்னுதவிக்குழு என்ற குழுவை முகமது யூனுசு என்பவர் தொடங்கி அந்த நாட்டில் பெண்கள் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டார். இதனால் அப்பகுதியில் உள்ள பெண்கள் பொருளாதார வளர்ச்சி அடைந்தனர். அதனை அனைத்து நாடுகளும் பின்பற்றியன. மதுரையில் சின்னப்பிள்ளை என்ற ஒரு பெண், மகளிர் தன்உதவிக்குழுக்களுக்கு வங்கி மூலம் கடன்பெற்று அப்பகுதியில் உள்ள பெண்களின் பொருளாதாரத்தை முன்னேறச்செய்தார். இதனைக் கேள்விப்பட்ட முன்னாள் தலைமையாளர் வாசுபாய், சின்னப்பிள்ளை காலில் விழுந்து வாழ்த்துபெற்றார். இந்நிகழ்வு அப்போதைய ஊடகங்களில் முதலிடம் பெற்றது.

  அதன்பின்னர் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்துவது பெண்கள் அமைப்பு எனக் கண்டுகொண்ட அரசு மகளிர் தன்னுதவிக்குழுக்களுக்குக் கடன் வழங்க முன்வந்தது. இதனைப் பயன்படுத்தி ஒரு சில வங்கிமேலாளர்கள் போலியாகத் தொண்டு நிறுவனத்தைப் பதிவு செய்து அதற்குப் புனைவாட்களை (பினாமி) ஆட்களை வைத்து மகளிர்குழுக்களுக்கு கடன் வழங்கினார்கள். இதில் சபலபுத்திபடைத்த சில வங்கிமேலாளர்கள் புட்டி குட்டியுடன் மன்மதராசாவாக வலம் வந்தனர். இதில் பல வங்கி மேலாளர் பாலியல் நோயான ஏமக்குறைவு (எய்ட்சு) நோய் தாக்கிப் பண்டுவம் பெற்றுவருகிறார்கள். மகளிர் தன்னுதவிக்குழுக்களில் சேரும் பெண்களின் ஒளிப்படங்கள் வங்கி மேலாளரின் கைக்குக் கிடைத்தவுடன் தன்னுடைய காமபார்வையால் வலைவீசி காமலீலையில் ஈடுபட்டுவருகிறார்கள். இது ஒருவகை. மற்றொரு வகை தன்னுடன் பணிபுரியும் பெண்களைத் தங்கள் காம இச்சைக்குப் பயன்படுத்த அழைப்பது, பாலுணர்வைத் தூண்டும் வகையில் பேசுவது, தன்னுடைய பேச்சுக்கு உடன்பட்டவர்களுக்குப் பதவி உயர்வு இல்லையெனில் பணிநீக்கம், அனைவர்களின் முன்னால் அவதூறாகப் பேசுவது வாடிக்கையாக உள்ளது.

51sexualabuse02

  சில வங்கி மேலாளர்கள் விலை உயர்ந்த அலைபேசிப் படப்பொறியில் பலான படங்களை இறக்கித் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு அனுப்புவதும் கடன்கேட்டு வரும் பெண்களுக்கு அதைக்காண்பித்துப் பாலுணர்வை தூண்டுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் சில வங்கிகளில் பணிபுரிபவர்கள் சங்கம் அமைத்துச் செயல்படுகிறார்கள். இதில் தென்மண்டலம், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம் எனப் பிரித்துவைத்துள்ளனர். இவர்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் மண்டலங்கள் செயல்படும். பணிமாறுதல், பணிநியமனம், வேலைக்குச் சேர்ப்பவர்கள் அதாவது பணியமர்த்தம் என எதுவானாலும் அச்சங்கத்தின் மூலமாகத்தான் நடைபெறும்.

  இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி வங்கியில் பணிபுரியும் ஏராளமான பெண்களைத் தன்னுடைய காமஇச்சைக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.   இதில் சில பெண்கள் வங்கி மேலாளர்களுக்கு உடன்பட்டும் பெண்கள் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் ஒரு வங்கி மேலாளர் மீது பாலியல் வழக்கு மதுரையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது. குற்ற எண் 1/14 இல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பிணையில் வெளிவரமுடியாத வழக்கு ஒன்றும் பதிவாகியுள்ளது. அதாவது பணியிடங்களில் பெண்களைப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உள்ளது.

  இதே போலத் தேனி மாவட்டத்தில் ஒரு புகழ்பெற்ற வங்கியில் கடன்கேட்க வந்த பெண்ணை வங்கி மேலாளர் பாலியல் தொந்தரவு கொடுத்து அப்பெண் தேனி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் முறையீட்டைப் பதிவு செய்தார். இதே போலப் பெரியகுளத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியர் தன்னுடன் பணிபுரிந்த ஆசிரியைக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து அந்த வழக்கு பெரியகுளம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

51sexualabuse01

  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில், ஊராட்சி அலுவகலத்தில் பணிபுரிந்த பணிதள பணியாளரை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலியல் தொந்தரவு கொடுத்து அவ்வழக்கு நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் முறையீடாகப் பதிவாகியுள்ளது. இவை அல்லாமல் தொடர்வண்டிகளில் தனியாகப் பயணம் செய்யும் பெண்களைத் தொடர்வண்டியில் பணிபுரியும் சீட்டுஆய்வர் பரிசோதகர் பாலியல் தொந்தரவு செய்து வழக்கு பதிவாகியுள்ளது.

  திருச்சியில் காவல்துறை ஆய்வாளராகப் பணிபுரிந்த காவலர் தன்கீழ்ப் பணிபுரியும் பெண்காவலருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து முறையீடாகப் பதிவாகியுள்ளது. மேலும் விமானத்தில் பணிபுரியும் விமானப்பணிப்பெண்ணை அண்டை மாநிலமான கேரளத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த மந்திரி மீது பாலியல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது.

  நன்கறியப்பெற்ற தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக உள்ள பெண்செய்தியாளருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த செய்தி ஆசிரியர் மீது வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் வேலை கேட்டு வந்த பெண்ணைத் திராவிட கட்சியைச்சேர்ந்த மாவட்டச்செயலாளர் பாலியல் தொந்தரவு கொடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

 இவை தவிர தனியார் பள்ளிக்கூடங்கள், அரசு பள்ளிக்கூடங்கள் என அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு ஒவ்வோர் அலுவலகத்திலும் பணிக்குச் செல்கின்ற பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது தொடர்கதையாக உள்ளது. இவ்வாறு சித்தாள் முதல் காவல்துறை உயர்அதிகாரி வரை அதிகாரிகள் பாலியல் தொந்தரவு கொடுத்து வழக்கு மட்டுமே பதிவாகிறது. ஆனால் சட்டத்தின் முன் கடுமையாக இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.

கடுமையான சட்டத்தின் மூலம் இவ்வகையான குற்றங்களைத் தடுக்க முடியும் என எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்.

51_vaigaianeesu