தமிழகச் சட்ட மன்றச் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம்!
முந்தைய செய்தி
இலங்கை பொதுவள ஆய மாநாட்டை
இந்திய அரசு, முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!
தமிழகச் சட்ட மன்றச் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம்!
இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களைக் கொன்று குவித்துப் போர்க்குற்றத்திலும் இனப்படுகொலைகளிலும் ஈடுபட்ட இலங்கையில் நடைபெறும் பொதுவள ஆய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் தமிழகச் சட்டசபையின் சிறப்புக் கூட்டம் பேரவைத்தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரசு உட்பட அனைத்துக் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியவுடன், முதலமைச்சர் செயலலிதா, இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுவள ஆய மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அரசினர் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அவர் பேசும் போது, “பொதுவள ஆய மாநாட்டில், இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்க வழி வகுத்துள்ள மத்திய அரசின் முடிவு தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதிப்பதற்குச் சமம் ஆகும். மத்திய அரசின் இந்த முடிவைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் “இலங்கை நாட்டில், நடைபெறவிருக்கும் பொதுவள ஆய மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்றும், பெயரளவிற்கு கூட இந்திய நாட்டின் சார்பாகச் சார்பாளர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்றும், இதுகுறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், இலங்கை தமிழர்கள் தன்னுரிமையுடனும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை பொதுவள ஆய அமைப்பில் இருந்து இலங்கை நாட்டை நீக்கிவைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை வலியுறுத்தும் தீர்மானம் இந்த மாமன்றத்தில் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு முற்றிலும் முரணான வகையில், இலங்கையில் நடைபெறும் பொதுவள ஆய மாநாட்டிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழு செல்கிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது” என்று தெரிவித்த அவர், “தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்காத, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசின் இந்த முடிவு மிகுந்த மனவேதனை அளிக்கும் செயலாகும். பொதுவள ஆய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதன் மூலம் இலங்கை அரசின் மனிதாபிமானம் அற்ற செயலை, மனிதநேயம் அற்ற செயலை, இந்தியா ஏற்றுக்கொள்கிறது, அங்கீகரிக்கிறது என்ற நிலை தான் உருவாகும்” என்றும் கடுமையாகத் தெரிவித்தார்.
Leave a Reply