தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவரா? 

 

தமிழ்நாடு அரசுப் பணிக்கான போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவருக்கு ஒப்புதலளித்துத் தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
– வைகோ கண்டன அறிக்கை

தமிழ்நாடு அரசுக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ள தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்து வரும் தேர்வுகளில் இனி வெளி மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலைமை ஏற்படும் எனப் பல்வேறு தரப்பினரும் பதறுகின்றனர். இது குறித்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை பின்வருமாறு:

“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குழு 4 தேர்வு, ஊராட்சி மேலாண் அலுவலர் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து 9351 காலிப் பணியிடங்களை நிரப்ப 2018 பிப்ரவரி 11-இல் போட்டித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது.  இப்போட்டித் தேர்வில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் கடந்த ஆண்டு நெறிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் எண்ணூறாயிரம் (80,00,000) பேர் படித்து விட்டு வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். ‘வேளாண்மை முதலான கூலித் தொழில்கள் புரிந்து படிக்க வைத்த பெற்றோர்களுக்குப் பாரமாக இருக்கிறோமே?’ என்று மனம் வெதும்பி இருக்கின்றனர். வேலை பெற்றுத் தம் பெற்றோர் படும் துன்பத்தைக் குறைக்கலாம் என நூறாயிரக்கணக்கான இளைஞர்கள் பெரும் கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகள் போன்றவற்றை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

  இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய நெறிமுறைகளில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, வெளி மாநிலத்தவரும் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கை கூறுகிறது. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கருநாடகம், குசராத்து, மராத்தி மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளி மாநிலத்தவரும் போட்டித் தேர்வில் பங்கேற்க நெறிமுறைகளில் திருத்தம் செய்திருப்பது முற்றிலும் நயன்மையற்றது (நியாயமற்றது); கடும் கண்டனத்துக்குரியது.

8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சென்னை உயர்நீதிமன்ற 140 துப்புரவாளர் பணியிடங்களுக்கு 3,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2500 பேரில் பெரும்பாலானோர் இளங்கலைப் பொறியியல் (பி.இ.), முதுகலை (எம்.ஏ.), முதுகலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.), முதுகலைக் கணினிப் பயன்பாடு (எம்.சி.ஏ.), முதுநிலை மெய்யியல் (எம்.பி.ல்.) படித்த பட்டப் படிப்பாளிகள் என்பது தெரிய வந்துள்ளது. பொறியியல் முதலான உயர் கல்வி பெற்றவர்கள் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கும் நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது.

  இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய நெறிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் வேலையின்றித் தவிக்கும் தமிழக இளைஞர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். “சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்; வேலையற்றோர் உள்ளங்களில் விபரீத எண்ணங்கள்” என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலையை எடப்பாடி பழனிசாமி அரசு உருவாக்க வேண்டாம் என எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தமிழகத்தில் அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவது அசாம் மாநிலத்தில் எழுந்த சிக்கல் போல் எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலும் வெடிக்கும் நிலைமையை ஏற்படுத்தும்.

  எனவே, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதும் வகையில் தேர்வாணைய நெறிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.