தமிழ் இலக்கணத் தந்தை கோடிமுனை காசுமான் காலமானார்
தமிழ் இலக்கணத் தந்தை கோடிமுனை காசுமான் காலமானார்
தொல்காப்பியர், அகத்தியர் போன்ற தமிழ் இலக்கண ஆசான்களுக்கு நிகராகப் பேசப்படுகின்ற சமகாலப் படைப்பாளர்;
தமிழக அரசின் கபிலர் விருது பெற்ற தகைசால் பெரியவர்;
இலக்கணப் படைப்பாளர்களுக்கும் நெய்தல் படைப்பாளர்களுக்கும் ஒப்பற்ற ஆசான்; கோடிமுனை மி.காசுமான் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்தது.
கடந்த வாரம் அலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு “பெருலின் உன்னிடம் சில விசயங்கள் பேசவேண்டும்; நேரில்தான் பேசவேண்டும். வரமுடியுமா? கட்டாயம் வரவேண்டும்” என்று கட்டளையிடுவதுபோல் பேசினார். நானும் “நிச்சயம் வருகிறேன் ஐயா” என்றேன். ஆனால் என்னால் அவரைச் சந்திக்கமுடியவில்லை. ஐயா என்ன பேசவேண்டுமென்று நினைத்தாரோ? அவருடைய கடைசிக் கட்டளையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வால் குறுகிப்போய் நிற்கிறேன்.
ஐயா என்னை மன்னிப்பீர்களா?
–குறும்பனை பெருலின்
புலவர் மி காசுமானார்
பிறப்பு:01.08.1936
இறப்பு:21.10.2022
பிறப்பிடம்:கோடிமுனை:நாகர்கோவில்
பெற்றோர்: தந்தை: மிகெயல் பிள்ளை; தாய்:ஞானப்பிறகாசி.
காலமான இடம்:தங்கையின் வீடு.மார்த்தாண்டம்,நாகர்கோவில்.
திருமணமாகவில்லை.தங்கையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். சமயச் சார்பற்றவர்; பொருளாசையற்றவர்; இலவசங்களை விரும்பாதவர்; தமிழ்த்தொண்டர்.
++++++
அன்புடையீர்,
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் தனக்கு இயற்கையன் (=அவர் கடவுளை இயற்கையன் என்றழைப்பதே வழக்கம்) பத்தாண்டுகள் தந்தால் நலமாகவிருக்கும் மனிதக் குலத்திற்கும் தமிழுக்கும் தாம் செய்ய வேண்டியது இன்னும் இருக்கிறதென்று அக் 16 2022-இல் என்னிடம் [13:46 (53 நிமையம்),14:41(19 நிமையம்),15:25 (24 நிமையம்)]
பேசினார். குறும்பனை பெருலினைப் பார்த்துப் பேச வேண்டுமென்றும் பெருலினின் அம்மா கோடிமுனையைச் சார்ந்தவரென்றும் கோடிமுனையின் பழைய பெயர் கோடிமை என்றும் அது மருவி கோடிமுனை ஆனதென்றுங் கூறினார்( அக்.16 2022-இல்).
அவரெழுதிய நூற்கள் :
(1)குமரியர்- நாவலந்தீவின் உரிமை மாந்தர் வரலாறு.முதற் பதிப்பு. 2011.இரண்டாம் பதிப்பு.2013.மூன்றாம் பதிப்பு.2021.
2.திருக்குறள் அறத்துப்பால்-தெளிவுரை-பரிமேலழகர் உரையுடன்.முதற் பதிப்பு.2018.
3.தமிழ்க்காப்பு இயம்(எழுத்து-சொல்-சொற்புணர்ச்சி இலக்கணம்).முதற்பதிப்பு.2005,இரண்டாம் பதிப்பு.2006,மூன்றாம் பதிப்பு.2015.
4.முத்தாரம் (நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்திற்கிணையானத் தமிழ்ச் செய்யுள் காப்பியம்).முதற்பதிப்பு.1991.இரண்டாம் பதிப்பு.2008.மூன்றாம் பதிப்பு.2020.
5.கனவும் நினைவும்(அவ்வப்போது பாடப்பட்ட தனிப்பாக்கள். வடலூர் வள்ளலார், மூதறிஞர் இராசாசி, அறிஞர் அண்ணா, போன்றோரையும் கனவுச் சிங்காரச் சென்னை போன்ற பாடல்களையும் பதித்துள்ளார்).
6.பொருட்பாலுக்கு உரை எழுதி கொண்டிருந்தார்.அக் 16 2022-இல் திருக்குறள் 460 -ஆவது குறளில் வரும் ஊங்கு எனுஞ்சொல் மேலுலகம் என வருமாற்றை எடுத்துக்கூறினார். இதுவரை உரை எழுதியுள்ளதாக என்னிடங் கூறினார்.
அவருடைய தமிழ்க்காப்பு இயம் எனும் நூலுக்குச் சிறப்புப் பரிசளிக்க வேண்டுமாய் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க தாலின், நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யா மொழி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆகியோருக்கு வேண்டுகையும் அதற்குப் பரிந்துரைக்குமாறு முனைவர் அருள் நடராசனார் அவர்களுக்கு வேண்டுகையும் சூன் 02 2022-இல் அனுப்பினேன்.
பண்பு
1.யாரையும் மனம்நோகப் பேசாதவர்.
2.யாரையும் குறை பேசாதவர்.
3.உதவி கேட்கும் போது அவ்வுதவியைக் கேட்டவருக்குச் செய்யதயங்காதவர்.
வழக்கம்
1.காலை 09.00 மணிக்குத் துயிலெழுந்து பின்னிரவு 01.00 மணிக்குத் தூங்குகிறவர்.
2.பகல் தூக்கம் இல்லை.
3.எப்போதும் எழுத்தும் படிப்பும் மருத்துவஞ் செய்தலும் கணியங்கூறுதலுமே அவருடைய தொழில்.
உடல்நலம்
1.மார்த்தாண்டத்தில் எங்கு போனாலும் நடந்தே செல்வார்.
2.கண்ணாடி இல்லாமலே படிப்பார் எழுதுவார்.
பணி
1.தலையாயப் பணி-தமிழ்த்தொண்டு.எந்தப் பள்ளிக்கூடத்திலும் ஆசிரியராகவோ கல்லூரியில் பேராசிரியராகவோ இருந்ததில்லை.
2.சிறந்த சித்த மருத்துவர்.தமிழ் இலக்கணம் இலக்கியங் கற்ற சித்த மருத்துவர்.
3.நுட்பமான சோதிட வல்லுநர். நேரு, அண்ணா, பெரியார், இராசாசி ஆகியோருடைய இறப்பு நாளைக் கணித்துக் கூறியவர்.
4.தமிழ் மொழிக்கு நூலெழுதல்.
அவருக்கும் எனக்குமான நட்பு அவருடைய நூலான தமிழ்க்காப்பு இயம் மூலம் 2008-இல் தொடங்கியது. அவரை நேரில் நான் சந்தித்ததில்லை. .தொலைபேசித் தொடர்பு மட்டுமே.அவ்வப்போது கடிதம் எழுதிக்கொள்வோம்.
அவருடைய நூற்களை அவருடைய பரிசாக மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரைக் கல்லூரி, மதுரைத் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, மதுரை தோக்கு பெருமாட்டி கல்லூரி, மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் போன்றவற்றிற்கும் மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் தியாகராசனுக்கும் வழங்கியுள்ளார்.
யாரிடமும் எதற்காகவும் சென்று கைககட்டி நிற்கவில்லை. கையூட்டும் பெற்றதில்லை.
தானுண்டு, தன்னுழைப்புண்டு, தகுதியுண்டு என்று வாழ்ந்த தமிழ்ப் பெரியவர்.
இறுதிஆசை
1.திருக்குறளுக்கு முழுவதுமாக உரை எழுத வேண்டும்.
2.தமிழ்க்காப்பு இயம் என்னும் இலக்கண நூலைத் தமிழ் இலக்கிய மாணவர்களுக்குப் பாட நூலாக்க வேண்டும்.
3.குறும்பனை பெருலினைச் சட்டமன்ற உறுப்பினராக்க வேண்டும்.
மதுரை செ பன்னீர் செல்வம், அக் 22 2022 , 0010.
++++++
எனக்கும் ஒரு பெரு வருத்தம்
காசுமான் ஐயா, மூன்று திங்களுக்கு முன் என்னிடம் பேசி அவர் நூல்களை அனுப்ப என் முகவரி கேட்டார். தமிழ்க்காப்பியம் முதலான அவர் நூற் பெயர்களை அறிந்து, ஐயா, நூற்களை வைப்பதற்கு வீட்டில் இடமி்லை. எனக்குப் படிப்பதற்கும் நேரமில்லை. ஒரு நாள் 16 மணி நேரத்திற்கும் குறைவில்லாமல் கணிணியில் வேலை பார்க்கின்றேன். எனவே, நூலின் அணிந்துரை, மதிப்புரை முதலானவற்றை எனக்கு மின்னஞ்சல் வழி அனுப்பினால் அகரமுதல மின்னிதழில் வெளியிடுகிறேன். அட்டைப் படத்தையும் மின்னஞ்சல் வழி அனுப்பி வையுங்கள் என்றேன். ஆனால், அவர் புத்தகங்களை அனுப்பிவைத்தார். அறிஞர்கள் பாராட்டுரைகள் நூற்களில் இடம் பெற்றிருந்தன. அவற்றை யெல்லாம் படித்து மகிழ்ந்தேன். நூற்களில் சிற்சில பக்கங்களைப் படித்தேன். அவரிடம் தொலைபேசி வழியில் பாராட்டிப் பேசினேன். கணியச்சர்கள் மாறி விட்டன்ர் என்றும் இருந்தாலும் இரண்டாம் முறை கணியச்சிட்டுப் பணத்தை வீணாக்குவதற்கு மாற்றாகப் புத்தகம் கணியச்சிட்டவரிடம் சொல்லி மின்னஞ்சல் வழி அவற்றை அனுப்பி வைக்க வேண்டினேன். முழுப்புத்தகத்தையும் அனுப்பினால் அவற்றைத் தொடராக வெளியிடுகிறேன் என்றும் அப்பொழுது படித்து முடித்து விடுவேன் என்றும் கூறினேன். அவர் கையெழுத்துப்படியை அனுப்பி, நூலின் அட்டைகளைக் கிழித்து அனுப்பி யிருந்தார்.
மீண்டும் நான் கூறியது அவருக்குப் புரியவில்லை. செவிப்புலன் மங்கியிருந்தது ஒரு காரணம். படிக்க எண்ணி, எண்ணி நேரம் ஒதுக்க முடியாமையால் கடந்தவாரம்தான் எழுத்தாளர் இ.பு.ஞானப்பிராகசத்திற்கு அனுப்பி மதிப்புரை வழங்க வேண்டியிருந்தேன்.
உரிய நூலாய்வுகள் வெளியிடும் முன்னரே அவர் மறைந்தது பெரிதும் வருத்தமாக உள்ளது. இதை அவர் எதிர்பார்க்கவில்லை. புத்தகங்களை நான் படித்துக் கருத்து சொல்ல வேண்டும் என்றுதான் அவர் எதிர்பார்த்தார். நான், நான் மட்டும் படிப்பதை விடப் பிறரும் படிக்க வேண்டும் என்பதற்காக வழக்கம்போல் கணியச்சுப்படிகளைக் கேட்டேன். இருப்பினும் அவ்வாறு வராமையால் அவர் இருக்கும் பொழுதே அவரது நூல் மதிப்புரைகளை வெளியிட முடியாமல் போனது பெரு வருத்தமாக உள்ளது.
அன்னாருக்கு ‘அகரமுதல’ மின்னிதழ் அஞ்சலியைச் செலுத்துகிறது.
அவர் புகழ் ஓங்குக. வணக்கத்துடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
திருவள்ளுவர் ஐயா!
காசுமான் ஐயா அவர்களின் மறைவு குறித்து அன்று நீங்கள் கூறியதும் அதிர்ந்து போனேன். அவருடைய நூல்களை எனக்கு அனுப்பி மதிப்புரை எழுதித் தரச் சொன்னீர்கள் (மேற்படி செய்தியிலும் குறிப்பிட்டுள்ளீர்கள், பார்த்தேன்). நான் மேலோட்டமாகப் பார்வையிட்ட வரையிலேயே இப்பேர்ப்பட்ட நூல்களுக்கு என்னால் எப்படி மதிப்புரை எழுத இயலும் என மலைத்தேன். எனினும் உங்கள் சொல்லைத் தட்ட முடியாததால் இன்னும் கொஞ்சம் கருத்தூன்றிப் படித்துப் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வர எண்ணியிருந்தேன். ஆனால் அதற்குள் ஐயா அவர்கள் மறைந்து விட்டார் என்றதும் எனக்கு மிகவும் அதிர்ச்சி! ஒரு பெரிய தமிழறிஞரை மகிழ்விக்கும் வாய்ப்புக் கிடைத்தும் நான் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே என வருந்துகிறேன்! அவருடைய தொடர்பு எண்ணும் நீங்கள் அனுப்பிய குறிப்புகளில் இருந்தது. தொடர்பு கொண்டு ஐயா இல்லத்தாரிடம் பேச விரும்பினேன். ஆனால் ஏதோ இனம் புரியாத தயக்கம்! விட்டு விட்டேன். என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்.