சத்தியம் தொலைக்காட்சியில்   கடந்த வாரம் ‘சத்தியம் – அது சாத்தியம்’ நிகழ்ச்சி இரவு 8.10 மணியில் இருந்து 8.30 மணி வரை நடந்தது. அதில், “முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றியது சரியா? தவறா?” என்ற விவாதம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காங்கிரசு சார்பில்சட்ட மன்ற உறுப்பினர் விசயதாரணி , பாசக மாநிலப் பொருளாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று விவாதம் செய்துகொண்டிருந்தனர்.

காங்.கின் பேச்சு சரியாக இல்லை என்றும் இதனால் உணர்வுள்ள ஒருவர் தொலைபேசி வாயிலாகப் பேச வந்துள்ளார். முள்ளிவாய்க்கால் முற்றம் வைப்பது தமிழர்களின் கடமை. இதைப்பற்றி பேச காங்கிரசுக்கு என்ன தகுதி உள்ளது? என்று கேட்டுள்ளார்.  அவர்களின் வரலாறு எல்லாருக்கும் தெரியும் என்பதுபோல் பேசினாராம்.

 இதற்குச் ச.ம.உ. எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர் கோபமாக,  கடுமையாகப் பேசி விட்டாராம்.

இதையடுத்து  ச.ம.உ., ஆவேசமடைந்து தமிழ்தாசனை உடனே கைது செய்ய வேண்டும் என்று உரத்த குரலில் கத்தினாராம். தொலை பேசியில் பேசியவருக்குத் தொடர்பில்லாத  தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் கடும் எச்சரிக்கை விடுத்தாராம். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய ஆளும் கட்சியைச் சேர்ந்த ச.ம.உ. என்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொலைக்காட்சி உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தியவர்கள், சாந்தோம் மேனிலைப்பள்ளித் தமிழாசிரியர் தமிழ்த்தாசன் எனப்படும் கசுமீர்ஐயா என்பவரைத் தளையிட்டுள்ளனர்.

இரு தரப்பினரைக் கொண்டு விவாதம் நடத்தாமல் எதிர்த்தரப்பினர் கொண்டு விவாதம் நடத்தியது தொலைக்காட்சி நிறுவனத்தின் தவறு.

தமிழாசிரியர் தவறில்லாமல் தமிழைக் கற்பிக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள மாணவர்கள் மீது பரிவு காட்டக்கூடிய, மாணவர்களால் மதிக்கக்கூடிய ஆசிரியர் என அறிய வருகிறோம். உண்மையிலேயே இவர் இவ்வாறு பேசியிருந்தாலும் அதற்கு விவாத முறையே காரணம். இவர், ம.தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.விற்கு மாறியுள்ள ஒருவரின் நண்பர் என்றும் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்  இல்லை  என்றும் அறிய வருகிறோம்.

எனவே,  இவரைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து அல்லது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்.

– தமிழாசிரியர்கள்