தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த

தழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்!

தமிழீழத்தில் 2008 – 2009ஆம் ஆண்டில் இந்திய அரசின் துணையோடு சிங்கள இனவெறி அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரை நிறுத்தக் கோரித் தீக்குளித்து உயிரீகம் செய்த தழல் ஈகி கு. முத்துக்குமார் முதலான ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் சனவரி 29 அன்று வீரவணக்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவ்வாண்டும் (2021) தமிழகமெங்கும் வீரவணக்க நிகழ்வுகள் தை 16, 2052 / 29.01.2021 அன்று எழுச்சியுடன் நடைபெற்றன.

சென்னை

சென்னை கொளத்தூரில் ஈகி முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் ஆண்டுதோறும் நினைவுத் தூண் எழுப்பி நடைபெறும் வீரவணக்க நிகழ்வு – 2021 சனவரி 29 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் ஐயா த. வெள்ளையன், இயக்குநர் புகழேந்தி, முத்துக்குமாரின் தந்தையார் திரு. குமரேசன், தங்கை மற்றும் தங்கை கணவர் முதலான குடும்பத்தினர், வீரவணக்க நிகழ்வுக்குழு ஏற்பாட்டாளர்கள் தோழர் செம்பியன், தாவீது பெரியார் உள்ளிட்டோர் நிகழ்வை தொடங்கி வைத்தனர். தமிழர் தேசிய முன்னணித் தலைவர் ஐயா பழ. நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ, தமிழ்த்தேச மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் நேரில் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினார். த.தே.பே. தலைமைச்செயற்குழுத் தோழர் க. அருணபாரதி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவைப் பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன், த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், வெற்றித்தமிழன், திருவள்ளூர் செயலாளர் தோழர் செயப்பிரகாசு, சென்னை நடுவண் செயலாளர் தோழர் மு. வடிவேலன், பல்லாவரம் செயலாளர் தோழர் மு. கவியரசன், தோழர்கள் ஆவடி சுப்பிரமணியன், பொன்னி முதலானோர் பங்கேற்றனர்.

செங்கிப்பட்டி

தழல் ஈகி முத்துக்குமாரின் சிலை அமைந்துள்ள தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில் அவரது சிலைக்குச் சனவரி 29 அன்று காலை, த.தே.பே. ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன் தலைமையில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலன், ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர் நந்தகுமார், த.தே.பே. மாவட்டச் செயற்குழு தோழர்கள் இரெ. கருணாநிதி, ஆ. தேவதாசு, க. காமராசு, அ. பகத்துசிங்கு, குன்றாண்டார்கோயில் ஒன்றியச் செயலாளர் தோழர் சி. ஆரோக்கியசாமி முதலானோர் பங்கேற்றனர்.

சிறப்புப் பொதுக்கூட்டம்

மாலையில், செங்கிப்பட்டி (சானூரப்பட்டி) முதன்மைச்சாலையில் நடைபெற்ற தழல் ஈகி முத்துக்குமார் நினைவு நாள் மற்றும் தமிழர் திருநாள் – சிறப்புப் பொதுக்கூட்டம் பேரியக்கப் பாடகர் கரியப்பட்டி பாலுராசு அவர்களின் எழுச்சி பாடல்களுடன் தொடங்கியது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் தழல் ஈகி முத்துக்குமார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அனிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

பொதுக்கூட்டத்திற்கு, த.தே.பே. ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன் தலைமை தாங்கினார். செங்கிப்பட்டி த.தே.பே. செயலாளர் தோழர் பழ. மலைத்தேவன்  வரவேற்றார். த.தே.பே. ஒன்றியக்குழு தோழர்கள் க. காமராசு, ஆ. தேவதாசு, ச. அருள்தாசு, அ. பகத்சிங், செபஸ்தியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து, பாவலர்கள் கவிபாஸ்கர், மூ.த. கவித்துவன், அஞ்சுகம் ஆகியோர் சிறப்பான பா வீச்சு நிகழ்த்தினர்.

 தமிழுரிமைக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலவர், த.தே.பே. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் காமராசு, மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள் ஆகியோர் உரையாற்றினர்.

 நிறைவாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் சிறப்புரையாற்றினார். மக்கள் பாடகர் மதுரை சந்திரன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தோழர் பெ. ஆனந்து நன்றி கூறினார். இறுதியில் மக்கள் பாடகர் மதுரை சந்திரன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில், ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் திரளாகப் பங்கேற்றனர்.