திகைக்கச் செய்யும் திருக்குறள் திலீபன் : நினைவாற்றல் பயிலரங்கம்
திகைக்கச் செய்யும் திருக்குறள் திலீபன்:
நினைவாற்றல் பயிலரங்கம்
தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் தீலீபனின் நினைவாற்றல் பயிலரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் சிரீதர் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி தங்கசாமி, நடராசபுரம் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருக்குறள் தீலீபன் மாணவர்களின் முன்பு “புராணக்கால வரலாற்றிலிருந்து காணப்படும் பலவகைக் கலைகளுள் நினைவாற்றலை மனத்தில் நிறுத்தி அதைக் கவனத்தில் கொண்டு, மீண்டும் நினைவுபடுத்திக் கூறும் கவனகக் கலை ஒன்றாகும். இது தமிழர்களின் பழங்கலைகளில் ஒன்றாகும். கவனகம் என்றால் என்ன? என்பதற்கு ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றி நடக்கக்கூடிய பல்வேறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி, முடிவில் தொகுத்துக் கூறுவதாகும். இது நினைவாற்றலின் உயர்ந்த வடிவமாகும். நமது முன்னோர்கள், நூறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்திச் சொல்லக்கூடிய அளவிற்கு ஆற்றல் பெற்றவர்களாக இருத்திருக்கிறார்கள். நான் சிறு அகவையில் கற்றுக் கொண்டேன். எனது தாயும் தந்தையும் ஆசிரியர்களும் எனக்கு வழி காட்டுதலாக இருந்து என்னை நன்றாக ஊக்கப்படுத்தி இந்த அளவுக்குப் பயிற்சி அளித்தனர். கவனகக் கலை நினைவாற்றலைப் பெருக்கும். மனமும், உணர்ச்சியும் நமக்குத் தனித் தனியாக வழிகாட்டும். ஆனால் மனம் சொல்படிதான் நாம் நடக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி அடைய முடியும். திருக்குறள் பயிற்சி அனைவரும் பெற வேண்டும்.” என்று பேசினார்.
திருக்குறள் திலீபன் ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி, முடிவில் தொகுத்துக் கூறினார். மாணவ,மாணவியர் திருக்குறள்பற்றிய ஐயங்கள் கேட்டுத் தெளிவு பெற்றனர்.
நினைவாற்றல் கலை –
திருக்குறளில் முதல் சீரைச் சொன்னால், குறளைச் சொல்லுதல்,
குறளைச் சொன்னால் குறளின் எண்ணைச் சொல்லுதல்,
குறளின் எண்ணைச் சொன்னால், குறளைச் சொல்லுதல்
போன்ற பல்வேறு வகைகளில் நினைவாற்றலை வெளிப்படுத்தினார்.
உதடு ஒட்டாத திருக்குறளை வாயில் உதடுகளில் குண்டூசி வைத்துக் கொண்டு சொன்னதைக் கண்டு மாணவர்கள் அனைவரும் வியப்பில் மூழ்கிப் போனார்கள்.
கி.பி.ஒன்று முதல் கி.பி.ஒரு கோடி ஆண்டுகள் வரையிலான நாளைச் சொன்னால், கிழமையைச்சரியாகக் கூறினார். 1 முதல் 50 பெயர்களை வரிசை எண்ணுடன் மாற்றி மாற்றிச் சொல்ல, அதை நினைவில் நிறுத்தி, 1 முதல் 50 வரை எண்ணையும் அதற்கான பெயரையும் வரிசையாகக் கூறினார்.வந்திருந்த பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள் அவர்களது பிறந்த நாள் முதல் முதன்மையான நிகழ்ச்சிகள் வரை எந்த நாளைச் சொன்னாலும், உடன் கிழமையைக் கூறிப் பார்வையாளர்களை வியப்பிலாழ்த்தினார்.
உலக நாடுகளின் பெயரைச் சொன்னால், அந்த நாட்டுத் தலை நகரத்தின் பெயரைக் கூறினார். தலை நகரத்தின் பெயரைச் சொன்னால் உலக நாடுகளின் பெயரைச் சொன்னார். பதினாறு வகையான கவனகம் நிகழ்ச்சிகளான குறள் கவனகம், பறவை கவனகம், எண் கவனகம், விலங்கு கவனகம், எழுத்து கவனகம், நூல் கவனகம், கூட்டல் கவனகம், மலர்க் கவனகம், பெயர்க் கவனகம், பழக் கவனகம், ஆண்டுக் கவனகம், நாடுகள் கவனகம், மாயக்கட்ட கவனகம், வண்ணக் கவனகம், தொடு கவனகம், ஒலிக் கவனகம் என அனைத்தையும் மாணவர்கள் முன்பாகச் செய்து காண்பித்ததுடன் அவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் விளக்கி கூறினார்.
பரமேசுவரி, வெங்கட்ராமன், திவ்யசிரீ, இராசேசுவரன், இரஞ்சித்து, பரத்குமார், இராசி, சின்னம்மாள், அபிநயா, சீவா முதலான பல மாணவர்கள் கேள்விகள் கேட்டுத் தெளிவு பெற்றனர். நிகழ்ச்சியை ஆசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார் .நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.+
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம். தனிப்படங்கள், உதடுகளின் இடையே குண்டூசி வைத்துக் குறள் சொன்னது.]
இதுவரை இப்படிப்பட்ட கவனகங்களை நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் செய்துதான் பார்த்திருக்கிறேன். இவ்வளவு இளம் வயதில் திலீபன் போன்றவர்கள் இந்தக் கலையில் ஆர்வம் காட்டுவதை அறிய மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது! பதினாறு கவனகராகக் கலக்கும் இவர் நூற்றுக் கவனகராகவும் உயர நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்!