துபாயின் சிறப்புகள் – மாணிக்கவாசகம் பள்ளியில் உரை
தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் துபாய் நாட்டில் புகழ்பெற்ற பள்ளி இந்தியப் பள்ளி என்று துபாய் ஈமான் பண்பாட்டு மைய மக்கள் தொடர்புத்துறைச் செயலர் இதயதுல்லா தகவல் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். துபாய் ஈமான் பண்பாட்டு மைய மக்கள் தொடர்புத்துறைச் செயலர் இதயதுல்லா மாணவர்களுடன் துபாய் நாடு குறித்து கலந்துரையாடல் நிகழ்த்தினார். அப்போது, துபாயில் புகழ் பெற்ற பள்ளி இந்தியப் பள்ளி என்றும், ஏறத்தாழ 200 இடங்களுக்கு 1000 பேர் குழுக்கள் முறையில் கலந்து கொண்டு தேர்ந்துடுக்கபடுவார்கள் என்றும், அந்தப் பள்ளியில்இடம் கிடைக்கக் கடுமையான போட்டி இருக்கும் என்றம் கூறினார். இந்தியப் பள்ளியில் படிப்பதை மக்கள் பெருமையாக நினைப்பார்கள்; துபாய் நாடு முழுவதுமே இந்திய வழியான மத்திய வாரியக் கல்வியே நடைமுறையில் உள்ளது . தமிழ்நாட்டின் ஆங்கில வழிக் கல்வி முறைப் பள்ளியும் உண்டு .பள்ளிகள் அனைத்திற்குமே நீண்ட விடுமுறை சூலை முதல் செட்டம்பர் வரை விடப்படும். அதாவது மார்ச்சு மாதம் பள்ளியின் கல்வியாண்டு தொடங்கிப் பிறகு சூன் வரை நடைபெறும். முதல் பருவ விடுமுறையாகக் கோடைக்கால விடுமுறை விடபடுகிறது. அரசு பள்ளிகள் உண்டு.அவற்றில் துபாய் நாட்டு மாணவர்கள் மட்டுமே படிக்க இயலும்.
சூன் முதல் செட்டம்பர் வரை வெயில் கடுமையாக இருக்கும். அப்போது நண்பகல் 12 மணி முதல் வரை 3 மணி வரை வெயில் நேரத்தில் வேலை செய்யகூடாது. வேலை வாங்கினால் தண்டத்தொகை விதிக்கப்படும். வேளாண்தொழில் மிகவும் குறைவு. புதினா, கொத்தமல்லி, தக்காளி, கத்திரிக்காய் போன்றவை நடவு செய்யப்படுகின்றன. இந்தியாவுக்கும் துபாய்க்கும் 1 1/2 மணி நேரம் வேறுபாடு. அனைத்துச் சமயக் கோவில்களும் உண்டு. ஆனால் பொது இடங்களில் மாற்று மதத்தினர் கூம்பு வடிவக் குழாய் போன்ற ஒலி பெருக்கிகளின் வழியாக மதம் தொடர்பான வழிபாட்டுப் பாடல்கள் பாடக்கூடாது .
அங்குள்ள 1 காசு திருகம் என்று அழைக்கபடுகிறது. இந்திய உரூபாயில் 18 உரூபாய்க்கு சமம் ஆகும். நமது இந்தியாவில் இருந்து செல்லும் அனைவரும் துபாயில் நன்றாகப் பழகுகிறார்கள். மற்ற நாட்டு மக்களைக் காட்டிலும் எளிதாகத் தொழில் செய்கிறார்கள்.
உலகத்தில் தரமான, தூய்மையான தங்கம் கிடைக்கும் நாடு துபாய் ஆகும்.வருமான வரி உட்பட வரியே இல்லாத இல்லாத நாடு துபாய் நாடு. எந்த இடத்திலும் வரி கிடையாது. மக்கள் தாரளமாகச் செலவு செய்யலாம். கையூட்டு கிடையாது.
துபாய் நாட்டில் அரசு பேருந்துகள் மட்டுமே உள்ளன – தனியார் பேருந்துகள் கிடையா. அரசு பேருந்துகளில் ஓட்டுநர்கள் மட்டுமே உள்ளனர்- நடத்துநர் கிடையாது . வாரத்தின் முதல் வேலை நாள் ஞாயிற்றுக்கிழமை. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை விடுமுறை ஆகும். உணவகத் தொழில்தான் துபாய் நாட்டில் மிகவும் மிகுதியாக நடைபெற்று வருகிறது.அழகிய கட்டிடங்கள் அதிகமாக உள்ளன. மலைகளும் உள்ளன.
பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடு துபாய். 30 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள் துபாயில் உள்ளன. தமிழ் நாட்டுப் பெண்கள் பெரும்பாலானோர் வேலை வாய்ப்பு நுழைமம்(விசா) மூலம் வேலைக்கு வராமல் வருகை நுழைமம்(விசிட் விசா) மூலம் வேலைக்கு வருவதால் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகின்றனர். எனவே முறையாக வேலைவாய்ப்பு நுழைமம் மூலம் வேலைக்கு வந்தால் துபாய் அருமையான நாடு. இந்தியாவில் இருந்து குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சேர்ந்துதான் பாலைவனமாக இருந்த துபாயைச் சோலைவனமாக முன்னேற்றம் அடையச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று பேசினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவிகள் தனம், பரமேசுவரி, சக்தி, சௌமியா, செனிபர், பரத்துகுமார், வசந்தகுமார், கார்த்திகா முதலான பல்வேறு மாணவ ,மாணவியர் துபாய் நாடு தொடர்பாக கேள்விகள் கேட்டுத் தெளிவு பெற்றனர்.
நிறைவாக ஆசிரியர் சிரீதர் நன்றி கூறினார்.
Leave a Reply