தூக்குத் தண்டனை நீக்கம்; உலகெங்கும் நீதியின் ஒளி: வைகோ
இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதிமான்கள் சதாசிவம், இரஞ்சன் கோகோய், சிவ் கீர்த்தி(சிங்) ஆகிய மூவர் அமர்வு, 15 பேர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையை நீக்கி, வாணாள் தண்டனையாக அறிவித்து இருக்கின்ற தீர்ப்பு, இந்திய நீதிமன்ற வரலாற்றில் பொன்னேடு ஆகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகியோருக்கு, 2004 இல், உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. குடியரசுத் தலைவருக்கு அவர்கள் தந்த கருணை மனு , ஒன்பது ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டு, 2013 இல் மறுக்கப்பட்டது. அவர்கள் தூக்கில் இடப்பட இருந்த நிலையில், தூக்குத்தண்டனையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
உச்சநீதிமன்ற வழக்குரைஞர் காலின் கொன்சால்வ்சு, மும்பை வழக்கறிஞர் யுக்மொகித்து(சௌத்ரி) ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். இந்த நால்வரும் உண்மையில் குற்றமற்றவர்கள் ஆவார்கள். இன்று உச்சநீதிமன்றத்தில் இப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த 15 பேர் தொடுத்த வழக்கில், 13 பேருக்குக் கருணை மனு மீதான முடிவை அறிவிப்பதில் ஏற்பட்ட காலத்தாழ்ச்சியைக் காரணம் காட்டி, தண்டனை நீக்கப்பட்டு உள்ளது. உடல்நிலை கெட்டு, மனநலம் பாதிக்கப்பட்ட காரணம் காட்டி மகன்லால், சுந்தர்சிங் ஆகிய இருவரின் தூக்குத்தண்டனையும் நீக்கப்பட்டுள்ளது.
உலகத்தில் 137 நாடுகளில் தூக்குத்தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. மரணத் தண்டனை நடைமுறையில் இருக்கின்ற நாடுகளில்தான், அத்தண்டனை நீக்கப்பட்ட நாடுகளை விட அதிக அளவில் குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை, பல்வேறு நாடுகள் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் மரணத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு ஆகும். இராசீவு காந்தி கொலைவழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும், திருப்பெரும்புதூர் நிகழ்வில் துளி அளவும் தொடர்பு இல்லாத அப்பாவிகள் ஆவர். மரணத் தண்டனையை எதிர்நோக்கியவாறு, 23 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் மரணத்தை விடக் கொடிய சித்திரவதையை அடைந்து வருகிறார்கள். 11 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுடைய கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன. அதன்பிறகு அவர்களது கருணை மனுக்களைக் குடியரசுத் தலைவர் மறுத்து அவர்களைத் தூக்கில் போடுவதற்கு 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதன்பிறகு, 2011 ஆகசுட்டு 30 ஆம் நாள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் இராம் செத்மலானி வாதாடியபோது, உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் உசாவ வேண்டாம் என்று காங்கிரசுக் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் பதிந்த மனுவின் மீது, வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
மூன்று தமிழரின் தூக்குத் தண்டனை குறித்த வழக்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில், வருகிற சனவரி 29 ஆம் நாள் உசாவலுக்கு வருகிறது. இன்றைய தீர்ப்பின் அடிப்படையில், அவர்களது மரணத் தண்டனையும் உறுதியாக நீக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திரநாத்து புல்லரின் தூக்குத்தண்டனையும் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, இனி எதிர்காலத்தில் தூக்குத் தண்டனை இந்தியாவில் அறவே அகற்றப்படுவதற்கான வழியைத் திறந்து உள்ளது. தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் கவலை அகலும் என்ற நம்பிக்கையைத் தந்து உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் துயர் போக்கும் மாமருந்தாக வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply