தூய்மைக்கேடாக்கப்படும் மஞ்சளாறு அணை
தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை நாளுக்கு நாள் தூய்மைக்கேடாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொற்று நோய் பரவும் பேரிடர் உள்ளது.
தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் உழுதொழில், குடிநீர்த் தேவைகளுக்காகக் கட்டப்பட்டது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் பயிர் நிலங்கள் பயன்அடைந்து வருகின்றன. இதே போல மஞ்சளாறு அணையில் உள்ள நீரை நம்பி ஊராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவை பயனடைந்து வருகின்றன.
இப்பொழுது மஞ்சளாறு அணை ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மேயும் இடமாகவும், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் கழுவும் இடமாகவும் மாறிவருகிறது. இதன் மூலம் வாகனங்களில் இருந்து வெளியேறும் எண்ணெய், வேதியல் பொருள்கள் போன்றவற்றால் அங்கு வளர்க்கப்படும் மீன்கள் செத்து மடிகின்றன.
இவை தவிர தேவதானப்பட்டி பேரூராட்சி, கெங்குவார்பட்டி பேரூராட்சி, வத்தலக்குண்டு பேரூராட்சி முதலான பல்வேறு பேரூராட்சிகள் குடிநீர் தேவைக்கு இந்நீரைப் பயன்படுத்தி வருகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் குடிநீரில் உரச்சாக்குகளை அலசவும் மருத்துவக்கழிவுகளை கொட்டும் இடமாகவும் மஞ்சளார் அணை பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மஞ்சளாறு அணை குடிநீருக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வரும் வகையில் அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-வைகை அனீசு
ஐயா,
அருமையான செய்தி. உண்மையில் மஞ்சளாறு அணை கவனிப்பாரற்று இருந்து வருகிறது. இதனை பாசன வசதிக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பாதுகாக்க வேண்டியது அவசியம். திரு வைகை அனீசு அவர்களின் செய்தி பாராட்டத் தக்கது. தயவுசெய்து அவரது தொலைபேசி எண்ணை அளிக்குமாறு வேண்டுகிறேன்.
நன்றி
வைகை அனீசு தொல்லியல் உணர்வுடனும் மரபைப்பேண விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்னும் கடப்பாட்டுடனும் செய்திகளை அளித்து வருகிறார். பேரா.இராசம் அம்மையார் போன்று வெளிநாடுகளிலிருந்தும் அவரது கருத்துகளுக்குப் பாராட்டுகள் வருகின்றன. விண் தொலைக்காட்சியின் தேனிச் செய்தியாளராக உள்ள திரு வைகை அனீசு பேசி எண் 9715795795
தகவலுக்கு நன்றி ஐயா