kumbakkarai_aruvi01

  தேவதானப்பட்டிப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில் வனத்துறையினர் கொடுஞ்செயலால் சுற்றுலாப் பயணிகள் அல்லலுறுகின்றனர்.

  மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள மஞ்சளாறு அணை, எலிவால் அருவி, கும்பக்கரை அருவி முதலான பகுதிகளில் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளைத் துன்புறுத்துகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள எலிவால் அருவி, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி ஆகிய சுற்றுலா மையங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோடை மழை பருவமழை போல் பொழிந்ததால் வனப்பகுதில் ஆங்காங்கே ஊற்றுகள் தோன்றியுள்ளன. அருவிகளில் தண்ணீரும் கொட்டி வருகிறது. சில இடங்களுக்குச் செல்வதற்கு மாவட்ட நிருவாகம் சார்பில் தடை செய்யப்பட்டுள்ளது. சில இடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன. அவ்வாறு பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய இடங்களில் வனத்துறை ஊழியர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு சுற்றுலா பயணிகள் சிலரை மட்டும் குளிக்கவிடுவதும் மற்றவர்களை விரட்டியடிக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இதே போல வனத்துறையில் பணிபுரியும் வனவர், காவலர், மாவட்ட வன அதிகாரி உறவினர், வனப்பாதுகாவலர் ஆகியோர்களின் உறவினர் எனக்கூறிக்கொண்டு வனப்பகுதியில் மதுபானம் அருந்துவதையும், தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்பிடிப்பதையும் வழக்கமாகக்கொண்டுள்ளனர். இதனைப்பார்த்து மற்ற சுற்றுலாப் பயணிகள் அந்த இடங்களுக்குச் சென்றால் இது வனத்துறையினர் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் மட்டும் குளிக்க கூடிய பகுதி எனத் தங்கள் கையில் உள்ள கட்டை, கற்களால் சுற்றுலாப் பயணிகளைத் தாக்குகின்றனர்.

  இதன் தொடர்பாகச் சுற்றுலாப் பயணிகள் எதிர்த்து கேள்வி கேட்காமல் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டு இன்பச்சுற்றுலாவைத்துன்பச்சுற்றுலா என நினைத்துத் திரும்புகின்றனர். இதன் தொடர்பாகச் சுற்றுலாப் பயணி சாந்தகுமார் கூறுகையில், நாங்கள் குடும்பத்துடன் கும்பக்கரை அருவிக்கு குளிக்கச்சென்றோம். அப்போது அங்கு இருந்த வனப்பாதுகாவலர் எனக்கூறிக்கொண்ட ஒருவர் இது வனத்துறையினர் மற்றும் வனத்துறை உயர்அதிகாரிகள் மட்டும் குளிக்க இசைவளிக்கப்பட்ட பகுதி; மற்றவர்கள் குளிக்க கூடாது என நா கூசும்   சொற்களால் பேசி எங்களை விரட்டினார்கள். எங்கள் முன்னாலேயே மற்ற குடும்பங்களையும் கம்பால் விரட்டி அனுப்பினார்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் வனத்துறையில் பணிபுரியும் வனவர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். இது குறித்து மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். எனவே சுற்றுலாப் பயணிகளை அவமானப்படுத்தும் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

vaigaianeesu84