தேவதானப்பட்டிப் பகுதியில் குழு முறையில் வாடிக்கையாளர்கள் நகை விற்பனை
தேவதானப்பட்டிப் பகுதியில் கூட்டு முறையில் வாடிக்கையாளர்களின் நகைகள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
தேவதானப்பட்டிப் பகுதியில் தேசியமயமாக்கப்பட் வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகியவற்றில் உழவர்கள், பொதுமக்கள் தங்களுடைய அவசரத்தேவைக்காக நகையை அடைமானமாக வைத்து அதன் மூலம் பணம் பெறுகின்றனர். அவ்வாறு பணம் பெறும்பொழுது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வணிகக்கடன், வேளாண்கடன் எனப் பிரித்து வேளாண்கடனுக்குக் குறைந்த வட்டி எனவும் அதற்கு நகையை மீட்டுக்கொள்ள 18 மாதம் எனவும் வரைமுறை வைத்துள்ளது. அதற்குள் நகையைத் திருப்பாவிட்டால் நகை ஏலத்தில் விடப்படும் என்று அறிவிப்பு செய்வார்கள்.
ஆனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 3 ஆண்டுகள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விளம்பரம் செய்து நகையை ஏலத்திற்கு விடுகிறார்கள். இவ்வாறாக விடப்படும் ஏல நகைகளை வாங்குவதற்கு வணிகர்கள் வருகை புரிகின்றனர். இவ்வாறு வருபவர்கள் கூட்டணி அமைத்து குறிப்பிட்ட வணிகர்களை வைத்து நகையின் மதிப்பைவிட மிகக்குறைந்த விலையில் ஏலத்தில் விடச் செய்து எடுத்துவிடுகின்றனர். அதன்பின்னர் வங்கி மேலாளர்களுக்கு ஒரு தொகையும், ஏலம் எடுத்தவர்களுக்கு ஒரு தொகையும் வைத்துக்கொள்கிறார்கள்.
இதே போலத் தனியார் வங்கிகளில் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் நகையை ஏலம் விட்டு நகைகளை உருக்கி வாடிக்கையாளர்கள் மீது கடன் உள்ளது எனக் கூறி நடப்புக்கணக்கில் கடன் நிலுவை இருந்தால் அந்தப்பணத்தை வங்கியில் எடுத்துக்கொள்கின்றனர். இதனால் பலர் பாதிப்படைகின்றனர்.
எனவே, காலமுறையிலான முறையான அறிவிப்புகளுக்குப் பின்னர் வெளிப்படையாகப் பொதுமக்கள் பார்வையில் நகைகளை ஏலம் விடவேண்டும் என்றும் நகையை அன்றன்று விலைக்கிணங்க விற்று மீதித்தொகையை வாடிக்கையாளர்களிடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் கூட்டணி அமைத்து நகைகளை விற்பனை செய்யும் வங்கி மேலாளர்கள், தனியார் வங்கிகள் மீது சேம(ரிசர்வு) வங்கி விதிப்படி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Leave a Reply