தேவதானப்பட்டியில் கலப்படப் பால் தாராள விற்பனை
தேவதானப்பட்டியில் கலப்படப் பால் தங்குதடையின்றி மிகுதியாக விற்பனை ஆகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தேவதானப்பட்டி, அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி,சுற்றியுள்ள பிற சிற்றூர்களில் சும்பால், எருமைப்பால் என இரண்டு வகைகளாகப் பால் விற்பனை செய்கிறார்கள். பசும்பாலாக இருந்தால் அடர்த்தி குறைவாகவும், எருமைப்பாலாக இருந்தால் அடர்த்தி அதிகமாகவும் இருக்கும். அந்துருண்டை (இரசக்கற்பூரம்), பிற வேதியல் பொருட்களைக் கலந்து பாலில் அடர்த்திகளை உண்டாக்குகிறார்கள். இவ்வாறான பால்களை வாங்கிக் காய்ச்சி மறுநாள் மீண்டும் காய்ச்சினால் பால் கெட்விடும் தன்மையுடையதாகிறது. இவற்றைத்தவிரப் பாலில் வேதியல்கலவைத் தூள், வெண்மை நிறத்தை அதிகமாகக்காட்டுவதற்கான பலவித வேதிப்பொருட்கள் ஆகியவற்றைக் கலக்கிறார்கள். கலப்புப்பால் அடர்த்தி அதிகமாகவிம் கெட்டியாகவும் தோன்றுவதால் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சிலர் கறவை மாடுகளில் ஊசிகளைப்போட்டு பாலின் தன்மையை அடர்த்தியாக்கி வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பேரூராட்சி சார்பில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் பால்மானி கொண்டு ஆய்வு செய்து அதில் கலப்படம் இருந்தால் தண்டத்தொகை விதிப்பார்கள். தற்பொழுது பேரூராட்சியில் அத்தகைய செயல்பாடு இல்லை. இதனால் கலப்பட பால்விற்பனையாளர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. இதன் தொடர்பாக மருத்துவரிடம் கேட்டபோது, சிறியவர்களும் முதியோர்களும் இந்தப்பாலை அருந்தினால் நுரையீரல், இதயம் தொடர்பான நோய்களும், புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பும் உள்ளது என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆண்டிபட்டி, தேனி ஆகிய பகுதிகளில் கலப்பட பால் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டறிந்து அந்த ஆலையை அதிகாரிகள் முத்திரையிட்டு மூடினர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தேவதானப்பட்டிப் பகுதியில் கலப்பட பால் விற்பனை செய்பவர்கள் மீது மாவட்ட நிருவாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Leave a Reply