தேவதானப்பட்டி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி
தேவதானப்பட்டி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் உழவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் பகுதிகளில் பல காணி(ஏக்கர்) பரப்பளவில் தக்காளிப் பயிரிடல் நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் விளையும் தக்காளிகள் சென்னை, பெங்களுர், வத்தலக்குண்டு, ஆண்டிப்பட்டி சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
கடந்த சில வருடங்களாகப் போதிய மழை இல்லாததால் நெல், கரும்பு, வாழை போன்ற பயிரிடலை விட்டு விட்டுக் குறுகிய காலப்பயிர்களான தக்காளி, கத்திரிக்காய் போன்றவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வரை தக்காளி அயிரைக்கல்(கிலோ) உரூ.50 வரை விற்பனை ஆனது. இதனால் உழவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆயுதபூசை, ஈகைததிருநாள் (பக்ரீத்து) போன்ற பண்டிகைகள் வந்தன. இந்நிலையிலும் கூட தக்காளி விலை சரிவைத் தொடங்கியது. தற்பொழுது தேவதானப்பட்டி பகுதியில் ஓர் அயிரைக்கல் தக்காளி உரூ.5 வரை விற்பனை ஆகிறது. இதனால் உழவர்கள் சோகத்தில் உள்ளனர். தக்காளி எடுப்பதற்கு ஆகும் செலவைக்கூட ஈடு கட்டமுடியாமல் உரத்திற்காவது பயன்படும் என்று தக்காளியை அப்படியே தோட்டத்தில் பறிக்காமல் விட்டுவிட்டனர்.
அடடா! கண்ணைப் பறிக்கும் செந்நிறத் தக்காளி! நான் இப்போது அங்கே இல்லையே என்ற ஏக்கம்.
பக்கத்திலேயே சின்ன குடிசைத்தொழில் ஒன்று உருவாக்கலாமே. தக்காளிச் சட்டினி, தக்காளித் தொக்கு, தக்காளிப் பழக்கலவை (jam), அப்புறம், தக்காளி + பச்சை மிளகாய் + வெண்ணெய்ப்பழம் (avocado) + எலுமிச்சைச் சாறு + கொத்துமல்லித்தழை போட்டுக் … குழைக்காமல் பதனமாகக் கலந்து ஒரு கலவை (salsa) … இப்படிப் பல பல பொருள்களை உருவாக்கி விற்கலாமே? இயலாதா?
எனக்கு அங்கே வரமுடிந்தால் இப்போதே அங்கே வந்து ஒரு குடிசை போட்டு உட்கார்ந்துவிடுவேன்!
மிகவும் சத்துள்ள காய்/பழம் இந்தத் தக்காளி.
இங்கேயிருந்து அரிதான தக்காளி விதைகள் வேண்டுமா சொல்லவும். கருப்புத் தக்காளி விதைகூடக் கிடைக்கும்! அஞ்சலில் திருட்டுப் போகாமல் இருந்தால் விதைகளை அனுப்ப இயலும்.
அம்மையீர்,
தங்கள் பதிவிற்கும் தக்காளி விதை அனுப்ப முன்வரும் நல்லுணர்விற்கும்
மகிழ்ச்சி்யையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வணக்கத்துடன்