புரட்டாசி 07, 2048 / 23-09- 2017,

சனிக்கிழமை மாலை 5.30 – 7.00

தைவானில் தமிழ்ப் பள்ளி தொடக்க விழா-  முப்பெரும்விழா

தேசியத் தைவான் பல்கலைக்கழக
விளையாட்டு வளாகம், தைவான்

தைவானில், தமிழ்ப் பள்ளி  தொடக்க விழா, தமிழ்ச் சங்கத் தலைவர்  முனைவர்  (இ)யூசி அவர்களுக்கு பாராட்டு விழா, தமிழ்ஆராய்ச்சி மாணவர்களுக்கு வரவேற்பு என முப்பெரும் விழா நடைபெறுகிறது.

 சீன மண்ணில் பொங்குதமிழோசைதனை பரவச்செய்த தைவான் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் (இ)யூ சி அவர்களின் தமிழ்த் தொண்டு அளப்பரியது. உலகப்பொதுமறை திருக்குறள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் பாடல்கள், ஔவையாரின் ஆத்திசூடி நூல்களை சீன மொழிக்கு மொழிபெயர்த்து அவர் தமிழுக்காற்றிய தொண்டிற்காக 28-7- 2017 ஆம் நாள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்(Honorary Doctorate) வழங்கிச்சிறப்பித்தது.

 தன் தமிழ்த் தொண்டுக்காகத் தமிழக அரசால் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற தலைவர் (இ)யூசி  யைப்  பெருமைபடுத்தும் விதமாக  தைவான் தமிழ்ச் சங்கம  அவருக்குப் பாராட்டு விழா நடத்துகிறது.

அத்துடன்  தமிழ்ச் சங்கத்தின்  அருவினையாகக் கருதப்படும், தைவானில் தமிழ்ப் பள்ளி யின்   தொடக்க விழாவும் ஒருசேர, புரட்டாசி 07, 2048 / 23-09- 2017, சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

 இவ்விழாவிற்கு இந்தியத் தூதரக முதன்மை இயக்குநர் சிரீதரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிப் பள்ளித் திறப்பு விழாவினைச் சிறப்பிக்க உள்ளார்.

 தமிழ் இலக்கியங்களைச் சீன மொழிக்கு மொழிமாற்றம் செய்யும் புலவர் (இ)யூசி அவர்களுக்குத் தைவான் தமிழ்ச் சங்கம் சார்பாகப் பாராட்டுப்பத்திரம் வழங்கிச் சிறப்பிக்க உள்ளது.

 மேலும் மற்றுமொரு புது முயற்சியாகத், தைவானில் முனைவர் பட்டம் பயிலத் தமிழகத்தில் இருந்து வந்த அனைத்துத் தமிழ்ஆராய்ச்சி மாணவர்களுக்கும் வரவேற்பு விழாவினையும் ஏற்பாடு செய்துள்ளது.

 இந்த மூன்று பெரும் விழாவினில் கலந்துகொண்டு தைவான் தமிழ்ச்சங்கத் தலைவரின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டித் தமிழ்ப் பள்ளியின்  தொடக்க  விழாவினில் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.