நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா
நன்னன் குடியின் வெளியீட்டு விழாவும் பரிசளிப்பு விழாவும்
நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா சென்னை தி.என்.இராசரத்தினம் கலையரங்கில் ஆடி 14, 2050 / 30.7.2019 அன்று மாலைநடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக தலைவர் தளபதி மு.க.தாலின் ஆகியோர் பங்கேற்று நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தனர்
இவ்விழாவிற்கு வந்தவர்களை திருமதி வேண்மாள் கோவிந்தன் வரவேற்றார். மூத்த தமிழறிஞர் புலவர் மா.நன்னனின் ‘அகமும் புறமும்’ என்ற நூல் குறித்து வழக்குரைஞர் த.இராமலிங்கமும், ‘இவர் தாம் பெரியார்’ (வரலாறு -திராவிடர் கழ கத்தின் திருப்புமுனைத் தீர்மானங்கள் என்ற நூல் குறித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரனும் திறனாய்வு உரை நிகழ்த்தினர்.
இந்நூல்களைத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க. தாலின் வெளியிட்டுச் சிறப்புரையாற்றுகையில், தமிழ் மொழிக்காக வாழ்ந்தவர் புலவர் மா.நன்னன், அகமும் புறமும் தூய்மை மிக்க நேர்மையாளர். திமுக இளைஞர் பாசறையில் பங்கேற்றுத் தொண்டர்களுக்குப் பயிற்சி அளித்தவர் மா.நன்னன். திமுக அரசு அவருக்குப் பெரியார் விருது, திரு.வி.க.விருது வழங்கிச் சிறப்பித்தது. என நினைவுகூர்ந்தார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விழா நிறைவுரையாற்றினார். செல்வன் அ.கவின் நன்றி கூறினார். விழா தொகுப்புரையைத் திருமதி. ஒளவை தமிழ்ச்செல்வன் வழங்கினார்.
முன்னதாக மருத்துவர் ந.அண்ணலின் நினைவாகத் தமிழ் வழியில் பயின்று தமிழ் மொழிப் பாடத்தில் பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் அந்தந்தப் பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற எட்டுப் பள்ளிகளில் படித்த பதினாறு மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றுகளும் மொத்தம் தொகை உரூ. 5000 வீதம் 16 பேருக்கு மொத்தம் உரூ. 80,000த்தை, தளபதி மு.க.தாலின் வழங்கிச் சிறப்பித்தார்.
புலவர் மா.நன்னன் நினைவாகச் சாதி மறுப்பு – தன்மதிப்பு திருமணம் செய்து கொண்ட இணையர்கள் தா.பிரபாகரன் – பி.ஏமா மாலினி, மு.சண்முகப்பிரியன் – வி.விசித்திரா, கு.செல்வேந்திரன் – செ.புவனேசுவரி, வ.சோபன்பாபு – இராதிகா, சா.கிசோர் குமார் – க.வெண்ணிலா ஆகிய இணையர் ஐவரைப் பாராட்டி ஒவ்வோர் இணையருக்கும் உரூ. 10,000 வீதம் மொத்தம் உரூ. 50,000 வழங்கி சிறப்பித்தார் தமிழர் தலைவர்.
ந.பார்வதியின் பெற்றோர் ஆறுமுகம் – சானகி இணையர் நினைவுப் பரிசு உரூ.10,000 பூம்புகார் சிறீனிவாசா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூவருக்கு வழங்கப்பட்டது.
மா.நன்னன் அவர்களின் பெற்றோர் மாணிக்கம் -மீனாட்சி அவர்கள் நினைவுப்பரிசு இறையூர் அருணா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூவருக்கு மொத்தப் பரிசு தொகை ரூ. 10,000உம் சான்றுகளும் வழங்கப்பட்டன. இரா.செம்மல் நினைவாக மருத்துவ உதவி நிதி உரூ. 1,00,000மும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் முதலான பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply