நுகர்பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாட்டம்
விலையில்லாப் பொருட்கள் வழங்கப்படுவதால்
நுகர்பொருட்கள் கிடைக்காமல்
பொதுமக்கள் திண்டாட்டம்
தேவதானப்பட்டிப் பகுதியில் விலையில்லா அரைவை, கலவை, விசிறி போன்றவை வழங்கப்படுவதால் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படக்கூடிய அரிசி, மண்ணெண்ணெய், சீனி, பருப்பு வகைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படும் பணியில் நுகர் பொருள் கடை ஊழியர்களும், வருவாய்த்துறை ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் குடும்ப அட்டைகளுக்கு மாதந்தோறும் வழங்கக்கூடிய பங்கீட்டுப் பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்கவில்லை. இதனால் இதனை நம்பி இருந்த ஏழை எளிய மக்கள் மிகவும் துன்பத்தில் உள்ளனர். நாள்தோறும் நுகர்பொருள்கடைகளுக்குச் செல்வதையும் கடைகள் மூடப்பட்டிருப்பதைக்கண்டு திரும்பி வருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். நுகர்பொருள் கடை ஊழியர்களைப் பார்த்து அரிசி முதலான இன்றியமையாப் பொருட்கள் எப்பொழுது வழங்கப்படும் எனக்கேட்டால் மின்கலவை, மின்உரல் கொடுத்தபின்புதான் வழங்கமுடியும் எனப் பொதுமக்களைத் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைகின்றனர்.
கடந்த 4 மாதகாலமாகப் பருப்பு, பனைநெய்(பாமாயில்) போன்றவற்றைச் சில நுகர்பொருள் கடைகளில் வழங்கவில்லை. தற்பொழுது விலையில்லாப் பொருட்களைக் காரணம் காட்டி இழுத்தடிப்பதால், இந்த மாதம் வழங்குவார்களா அல்லது வழங்கமாட்டார்களா எனக் குழப்பத்தில் உள்ளனர் பொதுமக்கள். இதன் தொடர்பாக வட்ட வழங்கல் அலுவலர்களிடம் கேட்டபோது, “விலையில்லாப் பொருள்கள் வழங்குவதற்கான பட்டியல் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி விரைவில் முடிந்து விடும். முடிந்தவுடன் பகிர்வுப் பொருட்கள் வழங்கப்படும்” என்றார்.
Leave a Reply