பணத்தாள் செல்லாமை ஆக்கியமையைக் கண்டித்து மாபெரும் மனிதச்சங்கிலி – கருணாநிதி அறிவிப்பு
பணத்தாள் செல்லாமை ஆக்கியமையைக் கண்டித்து
மாபெரும் மனிதச்சங்கிலி – கருணாநிதி அறிவிப்பு
பணத்தாள்கள் செல்லாதென அறிவித்ததால் ஏற்பட்டுள்ளஇன்னல்களுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் தி.மு. கழகத்தின் சார்பில் கார்த்திகை 09, 2047 / நவ. 24 – அன்று மாபெரும் மனிதச் சங்கிலி நடைபெறும் எனத் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பா.ச.க. அரசு, ‘அவசரக்கோலத்தில் அள்ளித் தெளி’ என்பதைப் போல எந்தவிதமான முன்னேற்பாடோ, உரிய வகையிலான திட்டமோ இல்லாமல், 500 உரூபாய், 1000 உரூபாய்ப் பணத்தாள்கள் செல்லாது எனத் திடீரென்று 8-11-2016 அன்று மாலையில் செய்த அறிவிப்பின் காரணமாகக் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மக்கள் படும் துன்ப துயரங்களுக்கு அளவே இல்லை.
ஏழையெளிய மக்கள், அன்றாடங்காய்ச்சிகள், வேலைகளுக்கும் செல்ல முடியாமல், தங்களிடம் உள்ள சில உரூபாய்த் தாள்களை மாற்றுவதற்காக வங்கிகள் முன்னால் பல மணி நேரங்கள் வரிசையில் நிற்கின்ற கொடுமைகள் குறைந்தபாடில்லை. வணிகர்கள் எந்த வகையான வணிகமும் இல்லாமல் தங்கள் பிழைப்புக்கு வழியின்றித் தவிக்கின்றனர்.
பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் ஏழையெளிய, நடுத்தர மக்களின் துன்பங்களைக் களைய நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் வாதாடிய போதிலும், தலைமையர் நரேந்திரர்(மோடி) நாடாளுமன்றத்திற்கு வந்து எந்த மறுமொழியும் கூறவில்லை.
மற்ற மாநில முதல்வர்கள் இந்தச் சிக்கலுக்காக மத்திய அரசை எதிர்த்துக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு எந்த வகையானந நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
எனவே தமிழகத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, பணத்தாள்களைச் செல்லாது என்று அறிவித்ததால் ஏற்பட்டுள்ள இன்னல்களை நீக்க, உடனடியாக மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் கார்த்திகை 09, 2047 / 24-11-2016 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் மனிதச் சங்கிலி நடத்தப்படும்.
இந்த மாபெரும் மனிதச் சங்கிலியில் கழகத் தோழர்களும், கட்சி சார்பற்ற பொது மக்களும், வணிகர்கள், தொழிலாளர்கள், உழவர்கள் முதலான அனைவரும் பங்கேற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply