pmkbudget03

 

பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர்  மரு.இராமதாசு 10.02.14 திங்கள்கிழமையன்று வெளியிட்டார்.

தமிழகச் சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை  அளிக்கப்படுவதற்கு முன்பு பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி

அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி, கட்டணமில்லாக் கல்வி, தரமான கல்வி,மகிழ்வான சுமையற்ற கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி வழங்கப்படும்.

* தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிற கல்விஇயக்கங்களின் பாடத் திட்டங்களுக்கு இணையான பாடத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படும்.

 

* ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள், பொதுப்பிரிவினருக்கு 55 விழுக்காடும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 45 விழுக்காடும், பட்டியலினத்தவர்-பழங்குடியினருக்கு 40 விழுக்காடும், மாற்றுத் திறனாளிகளுக்கு 35 விழுக்காடும் தேர்ச்சி மதிப்பெண்களாக  வரையறுக்கப்படும்.

கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு உரூ.30,000 கோடியாக உயர்த்தப்படும்.

திருவண்ணாமலை, பெரம்பலூர் மாவட்டங்களில் அரசுப் பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

நலவாழ்வு

அனைத்து மக்களுக்கும் அனைத்து வகையான  பண்டுவமும் தரமாகவும், இலவசமாகவும் வழங்கப்படும். இதற்காக அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலும், அரியலூர் மாவட்டத்திலும் நடப்பாண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும்.

மருத்துவர்கள் பணிநியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும்.

மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாக இருக்கும்போதே அவர்களை அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக அமர்த்தி, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுவிடும்.

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் அனைவரும் பணிநிலைப்பு செய்யப்படுவார்கள்.

வேளாண்மை

வேளாண்மைக்குத் தேவையான தரமான விதைகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து  முதலான  அனைத்து இடுபொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.

வேளாண் பணிகளுக்காக  உழவர்கள் பயன்படுத்திக்கொள்ள வசதியாக ஒவ்வோர் ஊராட்சிக்கும் ஒரு  பொறிஉழுவை(டிராக்டர்) இலவசமாக வழங்கப்படும்.

வேளாண் விலைப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேளாண் விலை  வரையறை வாரியம் ஏற்படுத்தப்படும். உழவர் ஊதியக் குழு அமைக்கப்படும்.

வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.10,000 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

கோமாரி நோயால் உயிரிழந்த மாடுகளுக்கு உரூ.25,000வீதம் இழப்பீடு வழங்கப்படும்.

மதுவிலக்கு

தமிழ்நாட்டில் மே 1 உழைப்பாளர் நாள் முதல் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

ஆற்று மணல்,கருங்கல், தாது மணல் ஆகிய இயற்கை வளங்கள் கொள்ளையடிப்பதைத் தடுப்பதன் மூலம்  உரூ.60,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும்.

தேவையற்ற செலவுகள் –  நல்கைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம்உரூ. 15,000 கோடி மிச்சப்படுத்த முடியும் என்பதால், மதுவிலக்கால் ஏற்படும் வருவாய் இழப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

ஊழல் ஒழிப்பு

ஊழலை ஒழிக்க  மக்கள்மன்ற(லோக் அயுக்தா) அமைப்பு ஏற்படுத்தப்படும்.

அரசு சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும்.

தேர்தல்களில் வாக்குகளை விலைக்கு வாங்கும் தீய வழக்கத்திற்கு முடிவு கட்டவும், வாக்குகளை விற்பனை செய்யும் தீமை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், “எனது வாக்கு விற்பனைக்கு அல்ல…என்ற தலைப்பிலான  பரப்புரையை அரசே மேற்கொள்ளும்.

சட்டம்- ஒழுங்கு

குண்டர் தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்றவை அரிதிலும் அரிதாக தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டுமே பயன்படுத்தப்படும். தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் ஒருவரை கைது செய்வதற்கான அதிகாரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவுக்கு அளிக்கப்படும்.

 

பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தனிக் காவல் பிரிவு ஏற்படுத்தப்படும். இப்பிரிவுக்கு பெண்  இ.ஆ.ப. அதிகாரி ஒருவர் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுவார்.

நிருவாக வசதிக்காகத் தமிழகத்தின் பெரிய மாவட்டங்களான வேலூர், விழுப்புரம் மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்படும்.

தொழில்துறை

தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான  இசைவு ஒற்றைச்சாரளமுறையில் வழங்கப்படும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள நிலையை மாற்றி, அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்துத் துறை

சென்னையில்  பெருநகரத் தொடரி(மெட்ரோஇரயில்) திட்டம் புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும். மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களிலும்  இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

மின்உற்பத்தி

தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்ற திட்டம் வகுத்து செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள  ஏறத்தாழ 12,000  பெருந்திறனி(மெகாவாட்) திறன் கொண்ட மின்உற்பத்தித் திட்டங்களையும், புதிய மின்திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த மின்திட்டச் செயலாக்கத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்படும்.

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள செயங்கொண்டம் அனல்மின் நிலையத் திட்டம், முன்னுரிமை அடிப்படையில் செயல்படத் தொடங்கும்.

மகளிருக்கு அதிகாரம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சிப் பதவிகள், அரசுப் பணிகள், கல்வியில் மகளிருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும். இதற்கான சட்டத்திருத்தம் நடப்புக் கூட்டத்தொடரில் கொண்டுவந்து நிறைவேற்றப்படும்.

மாணவிகள், இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் கடுமையான குற்றமாக கருதப்படும். இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடும் தண்டனை வழங்க வகை செய்யப்படும்.

மற்றவை

தமிழைத் தேசிய ஆட்சி மொழியாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகப் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும். தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ஒவ்வோர் ஊராட்சியிலும் 5 ஆண்டுகளில் 3 வளர்ச்சித் திட்டங்களாவது செயல்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்படும்.

சத்துணவு உட்கொள்ளும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மாலையில் பாலும் வறளப்பமும்(ரொட்டி) வழங்கப்படும்.

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளன்றே அவர்களுக்கான அனைத்து ஓய்வூதியப் பயன்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை அருகே  இதழாளர்களுக்கு 1,000 வீடுகள் கட்டித்தரப்படும். மாவட்டத் தலைநகரங்கள் அளவில்  இதழாளர்களுக்காக அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டு குடியிருப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்

 

இவற்றை அரசு கருத்தில் கொண்டால் நன்று.

அனைத்துக் கட்சி சார்பில் நிழல் அமைச்சரவை அமைத்து அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதில் மக்களுக்குக் கிடைக்கவும் திட்டங்கள் ஊழலின்றி விரைவில் செயல்படுத்தப்படவும்

தொண்டும் கண்காணிப்பும் மேற்கொண்டால் நன்று.

pmkbudget02